Aran Sei

கொரோனா தடுப்பு மருந்தும் லாபவெறி அரசியலும்

மெரிக்காவில் ஆரம்பித்து ஐரோப்பிய நாடுகள் வரை 1.4 மில்லியன் மக்களை இதுவரைக்கும் கொரோனா பலி கொண்டுள்ளது. அவசர அவசரமாகப் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகக் கூறப்படும் கொரோனா தடுப்பு மருந்தை ஜெர்மனி மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் கூட்டாகத் தயாரித்துள்ளன. மருந்தை முதலில் முன்மொழிந்ததும் கண்டுபிடித்ததும் BIONTECH என்ற ஜெர்மனிய நிறுவனமானாலும், பைசர் (Pfizer) என்கிற அமெரிக்க நிறுவனத்தின் ஆதிக்கம் அதனைச் சந்தைப்படுத்தும் இலாப நோக்கத்தைக் கொண்டது.

மருந்து நிறுவனத்தின் பங்குச் சந்தை பெறுமானம் கடந்த வாரத்தில் 4.4 வீதம் அதிகரித்துள்ளது. இது இன்னும் பல மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் நடத்தப்பட்ட சோதனைகளில் பெரும்பாலும் பக்கவிளைவுகள் ஏற்படாத காரணத்தால் இந்த வருட இறுதிக்குள் தடுப்பு மருந்தை சோதனைக்குக் கொண்டுவரலாம் என நம்புவதாக நிறுவனம் தெரிவிக்கிறது.

மருத்துவம் முழுவதும் இலவசமாக வழங்கப்படும் நாடுகளில் மக்களின் வரிப்பணத்தில் பெருந்தொகை நிறுவனத்தின் இலாப வெறிக்குத் தீனி போடும். சில வருடங்களுக்குப் பிறகு தடுப்பு மருந்தால் பக்க விளைவுகள் ஏற்படுமென பைசர் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அவ்வாறான சூழல் ஏற்பட்டாலும், இறுதியில் வெற்றிகொள்ளப் போவது மருந்து நிறுவனங்களே.

அல்சைமர் மற்றும் பார்கின்சன் (Alzheimer’s and Parkinson’s) நோய்க்கான ஆய்வையும் மருந்துத் தயாரிப்பையும் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்ட பைசர் நிறுவனம், அரச மானிய உதவியுடன் 300 ஆய்வாளர்களையும் தன்னுடன் இணைத்துக்கொண்டது. இறுதியில் 2018 ஆம் ஆண்டு இந்த ஆய்வினால் பைசர் நிறுவனத்திற்குப் போதிய இலாபம் கிடைக்காது என்று தனது ஆய்வுகளையும் தயாரிப்பையும் நிறுத்திக்கொண்டது.

வேலைக்கு அமர்த்திய 300 பேரையும் உடனடியாகவே பதவி நீக்கம் செய்தது. ஆக, உலகம் முழுவதும் கொரோனா நோய் அவலத்தைப் பயன்படுத்தி அவசரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்தின் பின்னால் சமூகப் பற்று கிடையாது, இலாப நோக்கம் மட்டுமே உண்டு.

கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு மருந்து அமெரிக்காவில் அங்கீகாரம் பெற்ற முதல் நாளிலேயே 5.6 மில்லியன் டாலர் பெறுமதியான தனது பங்குகளை விற்பனை செய்துவிட்டார் அதன் பிரதான அதிகாரியான அல்பேர்ட் பௌர்லா. இந்த அவசரப் பங்கு விற்பனையின் பின்னால் உள்ள காரணம் என்ன என்பதைப் பலர் சந்தேகத்துடன் விமர்சிக்கின்றனர்.

பெரியம்மை நோய்க்கான தடுப்பு மருந்தே உலகில் முதலில் தொற்றுநோய்க்குக் கிடைத்த முதலாவது கண்டுபிடிப்பு. மாடுகளுக்கு ஏற்படும் இதே வகையான நோய், மனிதர்களுக்குத் தொற்றும் போது பெரியம்மை போன்று பெரும் அபாயத்தை ஏற்படுத்துவதில்லை என்பதால். மனிதர்களுக்கு அந்த நோயை உருவாக்குவதன் ஊடாகப் பெரியம்மைக்கான எதிர்ப்புச் சக்தியை வெற்றிகரமாக ஏற்படுத்தினார் எட்வார்ட் ஜென்னேர்ஸ் என்பவர்.

1796 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்த இந்த முறைமையானது உலகில் பெரியம்மை நோயை முற்றாகத் தடுப்பதற்கான வழி முறையாக அமைந்தது. இதற்குப் பல வருடங்களுக்கு முன்பாகவே முதலாம் நூற்றாண்டிலிருந்தே இதே வகையான தடுப்பு முறை சீனா மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

நாய் கடிக்கு எதிரான பிரெஞ்சு மருத்துவர் லுயீ பாஸ்தோரின் கண்டுபிடிப்பு, 1885 ஆம் ஆண்டில் ஆரம்பித்து உலகில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.
இக்கண்டுபிடிப்புகளின் போதெல்லாம், மருத்துவம் முழுமையாக வியாபார மயப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

கிரேக்கம், துருக்கி, ஸ்பெயின் உட்பட பல நாடுகளில் போலியோ நோய்ச் சமூகத்தில் பெரும் சவாலாக முளைத்திருந்தது. போலியோவிற்கான தடுப்பு மருந்தை அன்று சோசலிச நாடாகவிருந்த சோவியத் ரசியாவும் அமெரிக்காவும் ஆய்வு செய்துகொண்டிருந்தன.

சல்க் என்ற தடுப்பு மருந்தை அமெரிக்கா 1950 ஆண்டில் அறிமுகப்படுத்தியது. அதேவேளை சோவியத் ரசியாவில் மாற்று வழியிலான தடுப்பு மருந்தை, முன் மொழிந்தது. மாஸ்கோ போலீயோ ஆய்வு நிறுவனத்தின் இயக்குநரின் தலைமையிலான குழு, தனது ஆய்வு முடிவுகளுடன் சல்க் நோய்த் தடுப்பு மருந்தை மீள் ஆய்வு செய்யும் நோக்குடன் அமெரிக்கா சென்றடைந்தது.

அப்போது, அமெரிக்க விஞ்ஞானியான அல்பேர்ட் சபின், சல்க் தடுப்பு மருந்தை ஏற்றுக்கொள்ள மறுத்து புதிய வழி முறை ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தார். மாஸ்கோ ஆய்வகத்தின் முறையுடன் ஒத்துப்போவதால், அமெரிக்க அரசின் அனுமதியுடன் மாஸ்கோ ஆய்வகத்தின் இயக்குநர் மிக்கையில் சூமக்கோ உடன் சோவியத் ரஷ்யவிற்குப் பயணமானர் சபின்.

அங்கு தனது ஆய்வுகளைத் தொடர்ந்த சபின், 1959 ஆம் ஆண்டு தனது தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்று அறிவித்தார். அதனை அமெரிக்க நிறுவனங்களுக்கு ஊடாகச் சந்தைப்படுத்தவும் அங்கு சோதனை செய்யவும் அமெரிக்க அரசு முன்வைத்த கோரிக்கையைச் சபின் நிராகரிக்க, அந்த மருந்து பாதுகாப்பற்றது என உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதேவேளை கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சபின் தடுப்பு மருந்து வெற்றிகரமாகப் பரிசோதனைக்கு வந்தது.

போலீயோவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தோற்றுப்போன அமெரிக்கக் குழு, 1962 ஆம் ஆண்டு சபின் மருந்திற்கான அனுமதியை வழங்கியது. சபின் மருந்து உலகமுழுவதும் போலீயோவை அழித்தொழிப்பதற்கான தனது முழுமையான பங்களிப்பை வழங்கியது.

எது எவ்வாறாயினும் போலீயோ நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து, மருத்துவ அறிவியல்  வளர்ச்சியடையாத காலகட்டத்திலேயே நோயை முழுவதும் விரட்டியடித்துவிட்டது.

Pfizer நிறுவனம் தடுப்பு மருந்தை 2020 இறுதிக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரலாம் என நம்பிக்கை தெரிவிக்கும் நிலையில் சீன நிறுவனத்தின் இறுதிச் சோதனை முயற்சி உஸ்பெக்கிஸ்தானில் நடைபெறுகிறது. அதேவேளை, சீனா எதிரி நாடாக இருந்தாலும், அந்த நாட்டு மருத்துவ அறிவியல் துறையுடன் இணைந்தே கொரோனாவை அழிக்க முடியும் எனப் புதிய அதிபர் ஜோ பிடன் தெரிவித்திருப்பது, போலீயோ வரலாறு மீண்டும் சுழற்சி முறையில் கொரோனாவுடன் சங்கமிக்கிறதா என்ற எதிர்வுகூறல்களும் எழுகின்றன.

இன்னொரு.காம்மில் வந்த கட்டுரையின்  சுருக்க வடிவம்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்