Aran Sei

கொரோனா தடுப்பூசி – மருத்துவக் காப்பீடுகளின் நிலை என்ன? : ஷியாம் ராம்பாபு

ந்திய காப்பீட்டு ஒழுங்காற்று ஆணையம் (ஐஆர்டிஏ) காப்பீட்டு நிறுவனங்கள் அனைத்தும் கொரோனா நோய் தொற்றுக்கான தடுப்பு ஊசிக்கான தேசத்தின் முயற்சியில் பங்கெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக, மார்ச் 3-ம் தேதி ஐஆர்டிஏ காப்பீட்டு நிறுவனங்களுக்கு முதல் கடிதத்தை எழுதியது. தொடர்ந்து மார்ச் 19-ம் தேதி அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இது தொடர்பான நினைவூட்டல் கடிதத்தை எழுதி இருக்கிறது.

தற்போது நமது நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தரப்பிற்கும் தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு பிற நோய்கள் இருந்தால் அவர்களுக்கும் தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் வயது வரம்பின்றி தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது.

காப்பீட்டு நிறுவனங்கள் பின்வரும் செயல்களை செய்ய வேண்டும் என்று ஐஆர்டிஏ கேட்டுக் கொண்டுள்ளது.

  1. தமது நிறுவனத்தில் காப்பீடு எடுத்த தகுதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நினைவூட்டல் கடிதத்தை எழுத வேண்டும்.
  2. ஒவ்வொரு நிறுவனம் சார்பாக பிரத்தியோக தடுப்பூசி முகாம் அமைத்து வாடிக்கையாளர்களுக்கு தடுப்பூசி வழங்கிட வேண்டும்
  3. தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியத்தை மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் வாயிலாக காப்பீட்டு நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
  4. முதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி குறித்து நினைவூட்டல் செய்வது, இரண்டாவது முறை தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
  5. காப்பீட்டு நிறுவனங்களில் பணிபுரியும் தமது ஊழியர்கள் அனைவரும் தவறாது தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

கொரனோ தடுப்பூசி போட்டுகொள்வதற்கான வயதுவரம்பு தளர்வு – மத்திய அரசு அறிவிப்பு

தடுப்பூசிக்கான செலவுகளை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குமா?

தற்போது தடுப்பூசி செலுத்துவதற்கான செலவினை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குவது தொடர்பாக இருவேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

பொதுவாக காப்பீட்டு திட்டத்தின் கீழ், மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுக்கும் நோய்களுக்கு மட்டும்தான் காப்பீடு கிடைக்கும். வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றால் காப்பீடு கோர முடியாது.

தடுப்பூசியை இலவசமாக அரசு வழங்கினாலும் குறைந்தபட்ச பராமரிப்பு தொகையாக 250 ரூபாய் வரை தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கின்றன. காப்பீட்டு விதிகளின்படி காப்பீடு நிறுவனங்களால் இந்தத் தொகையை தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியாது. தடுப்பூசி செலுத்துவதற்கான கட்டணத்தை வாடிக்கையாளர்கள் தான் செலுத்த வேண்டும் என்பதே தற்போதைய நிலையாக உள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா தொற்று: மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்குவதில் அரசு கடுமையான தோல்வியை சந்தித்துள்ளது – ப.சிதம்பரம்

தடுப்பூசி தயக்கம்

தற்போது மக்களில் பலருக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் இருக்கிறது. அதற்கு சமூக வலைதளங்களில் பல புரளிகள் பரப்பப்படுவது காரணமாக உள்ளது.

உலக அளவில் தற்போது வரை பல கோடி மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டது. தடுப்பூசி போட்டுக் கொண்ட காரணத்தினால் பக்க விளைவுகள் ஏற்பட்டது என்று அறுதியிட்டு கூறும்படி தற்போது வரை எந்த நிகழ்வும் நடைபெறவில்லை.

உலக அளவில் அதிக தடுப்பூசி போட்டுக் கொண்ட முக்கிய நாடுகளில் ஒன்றான ஐக்கிய முடியரசில் (பிரிட்டன் & வட அயர்லாந்து) கொரோனா மரணங்கள் தற்போது மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி பக்க விளைவுகளும் காப்பீடும்

தடுப்பூசி போட்டுக் கொண்டதால் எதுவும் பக்க விளைவுகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டால் மருத்துவ செலவுகள் அனைத்தையும் தாங்கள் ஏற்றுக் கொள்வதாக காப்பீட்டு நிறுவனங்கள் தற்போது அறிவித்துள்ளன. கொரோனா காலகட்டத்தில் அதிக மக்கள் காப்பீடு எடுத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பூசி – 12 நாட்களில் 9 பேர் உயிரிழப்பு – ” வெளிப்படைத்தன்மை வேண்டும் “

தடுப்பூசி போட்டுக்கொள்வது காப்பீட்டு நிறுவனங்களுக்கும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும். சென்ற ஆண்டு காப்பீடு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களில் கொரோனா நோய் தொற்று காரணமாக கிளைம் செய்தவர்கள் அதிகமாக இருக்கின்றன என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

அதனால் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் தற்போது சலுகைகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக புதிதாக பாலிசி எடுத்தவர்கள் உடைய நோய் காத்திருப்பு காலத்தில் தற்போது சலுகைகள் தரப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் நோய் பாதிக்கப்பட்ட பிறகு காப்பீடு எடுத்தால் காப்பீடு எடுக்கப்பட்ட மூன்று மாதங்கள் கழித்தே கொரனோ நோய் தொடர்பாக ஏற்படும் பிற மருத்துவ செலவுகளுக்கு காப்பீடு வழங்கப்படும் (Post Hospitalisation expenses).

மேலும் சிலவகை பாலிசிகளில் புதிதாக பாலிசி எடுத்த வாடிக்கையாளர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு பிறகு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டால் தான் கிளைம் செய்ய முடியும். பாலிசி எடுத்த ஆறு மாத காலத்திற்குள் நோய் பாதிப்புக்கு உட்பட்டால் கிளைம் செய்ய முடியாது. தற்போது தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு இந்த காத்திருப்பு காலத்தில் சலுகைகள் தர காப்பீட்டு நிறுவனங்கள் முன் வந்திருக்கின்றன.

மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்வது காப்பீட்டு நிறுவனங்களில் மருத்துவ செலவுகளை குறைக்கும் என்பதால் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பிரீமியம் தொகையில் சிறு சலுகை வழங்குவதற்கும் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

அதனால் தடுப்பூசி போட்டுக்கொள்வது நோயிலிருந்து காப்பது மட்டுமில்லாமல் பிரீமியம் தொகையில் சேமிப்பையும் கொண்டு வரும்.

கட்டுரையாளர் ஷியார் ராம்பாபு ஐ.டி துறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருபவர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்