Aran Sei

‘முதல் கொரோனா தடுப்பூசியை பிரதமர் எடுத்துக்கொள்ள வேண்டும்’ – காங்கிரஸ் அறிவுரை

முதல் கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி எடுத்துக்கொண்டு நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

இம்மாதம் 2-ம் தேதி, கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நாடு முழுவதும் நடைபெற்றுள்ளது. இந்த ஒத்திகை இந்தியாவில் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அசாம், ஆந்திரா, பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களில் முதல் ஒத்திகை நடைபெற்றது. முந்தைய ஒத்திகையின் போது கோரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் வழிகாட்டுதல்கள் திருத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி – உண்மையில் இது முழுமையான இந்திய தயாரிப்பா?

மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா உருவாக்கிய கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துவருகிறது.

இது இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த ஒத்திகை துவங்கியுள்ளது. மத்திய அரசு அமைத்த வல்லுநர்கள் குழுவால் இந்தப் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பூசி- புலம்பெயர்ந்தோரின் வெற்றிக் கதை

இந்நிலையில், இதுகுறித்து நேற்று (ஜனவரி 4) பீகார் மாநில காங்கிரஸ்  கமிட்டியின் தலைவர் அஜித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, “இந்த புத்தாண்டில் இரண்டு தடுப்பூசிகள் கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் இந்த தடுப்பூசிகள் குறித்து மக்களிடையே சந்தேகம் உருவாகியுள்ளது. ஆகவே, இந்த சந்தேகத்தை போக்குவதற்காக, ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் அதன் தலைவர்கள் முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டதைப்போல், பிரதமர் நரேந்திர மோடியும் முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டு மக்களின் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன்.” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளதாக தி இந்து கூறியுள்ளது.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் பின்னடைவா?

மேலும், “தடுப்பூசியை தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களுக்கு கிடைக்க வேண்டிய பெருமையை பாஜக தட்டிப் பறிக்க நினைக்கிறது. உண்மையில் இவை இரண்டும் காங்கிரஸ் காலத்தில் நிறுவப்பட்டவை ஆகும். எனவே மக்கள் தங்கள் நன்றிகளை காங்கிரஸுக்கும் தெரிவித்துக்கொள்ள வேண்டும்.” என்று அவர் கோரியுள்ளார்.

நேற்று முன் தினம் (ஜனவரி 3) காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், “கொரோனா தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது இன்னும் 3 ஆம் கட்ட பரிசோதனையில் இருக்கிறது. ஆனால், முன்கூட்டியே அனுமதி வழங்கியுள்ளது ஆபத்தானது. தடுப்பூசியின் முழு பரிசோதனைகளும் முடியும் வரை காத்திருக்குமாறு மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனை கேட்டுக்கொள்கிறேன்.” என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்