Aran Sei

இந்தியாவில் சமூகப் பரவல் – முதல்முறையாக ஒப்புக்கொண்ட மத்திய அரசு

“கொரோனா தொற்று சில மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களில் மட்டும் சமூகப் பரவலாக மாறியுள்ளது. ஆனால் நாடு முழுவதும் அப்படி மாறவில்லை” என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் எல்லா வாரமும் ஞாயிறு தோறும், ‘சண்டே சம்வாத்’ என்ற  இணைய நிகழ்ச்சியில் பேசி வருகிறார், ஹர்ஷவர்தன். நேற்றைய சண்டே சம்வாத்தில், மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறத் தொடங்கியிருக்கிறது என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி ஒப்புக்கொண்டது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ​​மத்திய அமைச்சர் டாக்டர்.ஹர்ஷவர்தன் அதை ஒப்புக்கொண்டார். மேலும் இந்தச் சமூகப் பரவல், மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள சில பகுதிகளில் மட்டும் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார். ”பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில், இத்தகைய சமூகப் பரவல் பதிவாகியுள்ளது.” என்றார்.

முன்னதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், கடந்த ஜூலை மாதமே, அம்மாநிலத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறத் தொடங்கிவிட்டதாகக் கூறியிருந்தார். ஆனால் அதை அப்போது மத்திய அரசு மறுத்தது.

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பூந்துரா மற்றும் புல்லிவிள ஆகிய கடலோர கிராமங்களில் சமூகப் பரவல் தொடங்கியதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார். கடந்த ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில், அசாம் மாநிலத்திலும் சில இடங்களில் சமூகப் பரவலுக்கான அறிகுறிகள் தென்பட்டன.

மேலும், நாட்டில் பல பகுதிகளில் சமூகப் பரவல் உள்ளதாகவும், அதை மத்திய அரசும் மாநில அரசுகளும் வேண்டுமென்றே மறைப்பதாகவும் சர்ச்சைகள் எழுந்தன.

சமீபத்தில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, மாநிலத்தில் சமூகப் பரவல் உள்ளதாக ஒப்புக்கொண்டார். மேலும், துர்கா பூஜை கொண்டாட்டங்கள் வருவதையொட்டி, அம்மாநில மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

நன்றி : India Tv News

கடந்த ஜனவரி மாதம், 30-ம் தேதி, கேரள மாநிலத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவரிடம் தொற்று கண்டறியப்பட்டது. இதுதான் இந்தியாவில் கண்டறியப்பட்ட முதல் தொற்று.

மத்திய அமைச்சர் டாக்டர்.ஹர்ஷவர்தன் சமூகப் பரவல் குறித்து பேசியதைப் பற்றி, மருத்துவர் எழிலன் நாகநாதனிடம், அரண்செய் பேசிய போது, ”பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இருப்பதை இம்போர்டட் கேஸ் என்பார்கள். என்னால் வீட்டில் உள்ளவர்களுக்குப் பரவினால், அது லோக்கல் ட்ரான்ஸ்மிஷன். அடுத்து என் வீட்டில் உள்ளவர்கள் மூலம், ஊர்மக்களுக்குப் பரவுகிறது. அதான் சமூகப் பரவல். இதுதான் உலக சுகாதார மையம் சொன்னது. ஆனால் உலக நாடுகள் அனைத்தும், சமூகப் பரவலை ஒத்துக்கொள்ளவில்லை.

இந்தியாவில் சமூகப் பரவல் தொடங்கிவிட்ட பிறகும், தில்லி மாநாடு மூலம் பரவியது என்று இஸ்லாமிய வெறுப்பைப் பரப்பினார்கள். பின் கோயம்பேடு மார்கெட் மூலம் பரவியது என்றார்கள்.

இப்போது மக்களுக்குக் கொரோனா தொற்று மேல் உள்ள பயமே போய்விட்டது. அவர்களே தொற்றோடு பழகத் தொடங்கிவிட்டார்கள். இப்போது வந்து சமூகப் பரவல் உள்ளது என்று சொல்வது, மத்திய அரசின் நிர்வாகத் திறமையின்மையாலேயே தொற்று பரவியது என்பதை மறைப்பதற்குதான்.” என்றார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்