Aran Sei

கேன்சர் மருந்து விலை உயர்வு : கொள்ளை லாபம் ஈட்டிய அமெரிக்க CEO

கேன்சர் நோய்க்கு மருந்தாக ரெவலிமிட் (Revlimid) என்ற மருந்து பெருவாரியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்தை அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மருத்துவ கம்பெனியான செல்ஜீன் (Celgene) நிறுவனம் தயாரித்து வருகிறது.

கேன்சருக்கான இந்த மருந்து 2005-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மருந்து அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது இதன் விலை 215 அமெரிக்க டாலராக இருந்தது. இதன்பிறகு செல்ஜீன் நிறுவனம் 22 முறை இதன் விலையை உயர்த்தி கடைசியாக இந்த மருந்தின் விலையை 763 அமெரிக்க டாலராக நிர்ணயித்துள்ளது. இந்த மருந்தை பயன்படுத்த வேண்டியிருக்கும் ஒரு புற்றுநோய் உள்ள ஒருவருக்கு மாதச் செலவு $16,023 (சுமார் ரூ 12 லட்சம்) ஆகும்.

பெருவாரியான மக்களின் உயிர்காக்கும் மருந்தான ரெவ்லிமிட் குறுகிய காலத்தில் இவ்வளவு உயர்ந்தது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

இதனை எதிர்த்து பிரபல வழக்கறிஞரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, கலிபோர்னியா மாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினருமான கேத்தி போர்ட்டர் (Katie Porter) நாடாளுமன்றத்தில் விசாரணை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கின் போது செல்ஜீன் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான (CEO) மார்க் அல்லஸை குறுக்கு விசாரணை செய்தார்.

அதன்படி நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளில் ரெவ்லிமிட் மாத்திரையில் உள்ள மூலக்கூறுகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். மூலக்கூறுகளின் விலையில் பெரிய அளவு மாற்றங்களும் கடந்த 15 ஆண்டுகளில் ஏற்படவில்லை. அதனால் தயாரிப்புச் செலவும் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. இந்த நிலையில் நிறுவனத்திற்கு லாபம் வர வேண்டும் என்ற ஒரே நோக்கில் உயிர்காக்கும் மருந்தான ரெவ்லிமிட் விலையை செல்ஜீன் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

இந்த மருந்து பெரும்பாலான மூத்த குடிமக்களால் வாங்க முடியாத விலையில் உயர்ந்துள்ளது. பென்ஷன் வாங்கும் வயதான சராசரி அமெரிக்கர் ஒருவர் 763 டாலர் கொடுத்து ஒரு மாத்திரை கூட வாங்க முடியாத நிலையை நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது என்று வாதிட்டார். அமெரிக்காவில் சோசியல் செக்யூரிட்டி வரி என்று ஒருவருக்கு பிடித்தம் செய்வார்கள். அப்படி செலுத்துபவர்கள் பணி ஓய்வு பெற்ற பிறகு பென்ஷனாக பெறுவார்கள். ஒரு சராசரி அமெரிக்க முதியவருக்கு செலவுகள் போக மாதத்துக்கு 528 டாலர் மட்டுமே மிஞ்சும். இந்தத் தொகையை வைத்து அவரால் ஒரு மாத்திரை கூட வாங்க முடியாது.

அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் இருந்து $330 கோடி (சுமார் ரூ 25,000 கோடி) மெடிகேர் திட்டத்தின் கீழ் இந்த மருந்துக்காக செலவிடப்பட்டிருக்கிறது என்பதை போர்ட்டர் சுட்டிக் காட்டினார்.

அல்லஸூக்கு செல்ஜீன் நிறுவனம் $1.3 கோடி (இந்திய மதிப்பில் ஏறக்குறைய 100 கோடி ரூபாய்) ஆண்டு ஊதியமாக வழங்குகிறது. இது அமெரிக்க அளவிலேயே மிகப்பெரிய ஊதியம் ஆகும். சராசரி அமெரிக்கர் வாங்கும் ஊதியத்தை விட 200 மடங்கு அதிகம். அல்லஸ் வாங்கும் $1.3 கோடியில் $21 லட்சம் நிறுவனத்தின் லாபத்தோடு தொடர்புடையது. நிறுவனம் அதிக லாபம் ஈட்டினால்தான் இந்தத் தொகை அல்லஸூக்கு கிடைக்கும்.

இதன் காரணமாக ஒவ்வொரு முறை மருந்தின் விலை அதிகரிக்கும் பொழுது அல்லஸூக்கு வழங்கப்படும் போனஸ் தொகை அதிகரிக்கும். ரெவ்லிமிட் மருந்து விலையை உயர்த்தியதன் மூலம் மட்டும் அல்லஸூக்கு $5,00,000 (சுமார் ரூ 3.75 கோடி) அதிக போனஸ் கிடைத்துள்ளது என்பதை போர்ட்டர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதன் மூலம் உற்பத்தி செலவு அதிகரிக்காத பொழுதும் லாப நோக்கிலும், அல்லஸ் தனிப்பட்ட முறையில் போனஸ் பெறும் நோக்கத்திலும், மருந்தின் விலையை உயர்த்தி மக்களின் உயிரோடு விளையாடுவது தெளிவாகிறது என்று வாதிட்டார். நிறுவனம் கடந்த ஆண்டுகளில் ஆராய்ச்சிக்காக எந்தப் பெரிய தொகையையும் செலவிடவில்லை. இந்த மருந்தின் விலை நிறுவனத்தின் லாப நோக்கத்திற்காக செயற்கையாக உயர்த்தப் பட்டுள்ளது என்றும் வாதிட்டார்.

இந்த விவாதம் இப்பொழுது அமெரிக்காவில் இணையத்தில் மிகப்பெரிய வைரலாக ஆகியள்ளது. இது மருத்துவத் துறை சார்ந்த நிறுவனங்கள் உயிர் காக்கும் மருந்துகளில் எவ்வாறு விளையாடுகின்றன என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

மக்களின் உயிர் பயத்தை மூலதனமாக வைத்து இது போன்ற பல நிறுவனங்கள் மருந்துகளை அதிக விலைக்கு விற்பது வாடிக்கையாக உள்ளது. அதனால்தான் உயிர் காக்கும் இந்த மருந்துகள் ஏழைகளுக்கு எட்டாத மருந்தாக உள்ளன. இந்த மருந்தினை அதிக விலை கொடுத்து வாங்க முடியாமல் பலர் மரணமடையும் நிலையும் உள்ளது.

இது போன்ற மருத்துவ நிறுவனங்களுக்கு கடிவாளம் போடுவது அரசின் கடமையாகும். பெருவாரியான மருந்துகளின் உற்பத்தி விலையை விட பல மடங்கு அதிக விலையில் அவை விற்கப்படுவதை நாம் பார்க்கிறோம். மருந்துகளையும் ஜெனரிக் வகையில் பரிந்துரை செய்யாமல் குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்துகளை பரிந்துரை செய்வதால் அதிக விலைக்கு மருந்து வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. நமது அரசும் மருத்துவர்கள் ஜெனரிக் பெயரை குறிப்பிட்டு மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் இது இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. மருத்துவத்துறை என்பது பணம் காய்க்கும் மரம். மனிதனுக்கு உயிர் பயத்தை காட்டி விட்டால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்வதற்கு தயங்க மாட்டார்கள். அவர்களின் உயிர் பயத்தை காசாக்க மருந்து நிறுவனங்களும், மருத்துவமனைகளும், மருத்துவர்களும் செயல்படும் துர்ப்பாக்கிய நிலையே இது போன்ற பிரச்சனைகளுக்கு மூல காரணம்.

நிச்சயமாக அனைத்து மருந்து நிறுவனங்களும், மருத்துவமனைகளும், மருத்துவர்களும் இதுபோல செய்வதில்லை. கொரோனா காலத்தில் தமது உயிரை துச்சமாக மதித்து பலரை காத்த சிறந்த மருத்துவர்களை நாம் கண்டிருக்கிறோம். என்றாலும் நெல்லுக்கு நடுவே புல் இருப்பது போல தவறான தரப்பினரும் இல்லாமல் இல்லை.

செல்ஜீன் நிறுவனம் இந்த மருந்தை இந்தியாவில் தயாரிப்பதற்கு இந்திய மருத்துவ நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அமெரிக்க நாட்டில் இந்த மருந்தின் விலை உயர்ந்தால் அது நேரடியாக இந்திய நோயாளிகளை பாதிக்கும். இதுபோன்றுதான் பல மருந்துகளும் பிற நாட்டைச் சேர்ந்த மருத்துவ நிறுவனங்களால் காப்புரிமை (patent) செய்யப்பட்டுள்ளன. மருத்துவ சந்தை என்பது உலக முழுவதற்கான மார்க்கெட். அமெரிக்காவில் மின்னல் வெட்டினால் சென்னையில் மழை பெய்யும்.

அதனால் இந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை வழங்குவது அரசின் கடமையாகும். அரசினால் தான் இந்த நிறுவனங்களுக்கு கடிவாளம் போட முடியும். உயிர் காக்கும் மருந்துகள் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். காசு இல்லாத காரணத்தினால் மருந்து வாங்க முடியாமல் ஒருவர் மரணம் அடைந்தால் கூட அது அரசின் தோல்வியாகும். அதனால் உயிர் காக்கும் மருந்துகள் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

அமெரிக்காவில் நடைபெறும் இந்த வழக்கின் தீர்ப்பு உயிர்காக்கும் கேன்சர் மருந்தின் விலையை குறைக்கும். தாங்கள் அந்த மருந்தை வாங்கி உயிர் பிழைத்துக் கொள்ளலாம் என்று மக்கள் காத்திருக்கிறார்கள்.

– ஷியாம் சுந்தர்
(கட்டுரையாளர் ஐடி துறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்