Aran Sei

கஞ்சா மீதான தடையை நீக்குவது தேவையா? – ஜெகதீசன் சைவராஜ்

கஞ்சா செடி

மீபத்தில் மிகவும் ஆபத்தான போதைப் பொருட்கள் பட்டியலிலிருந்து கஞ்சாவை நீக்குவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

கஞ்சா நம் நாட்டில் தடைசெய்யப்பட்ட ஒன்று. ஆனா அது எல்லோருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு, எளிதாகக் கிடைத்துக் கொண்டுதான் உள்ளது, .

ஆல்கஹால், புகையிலை போல் அல்லாமல் இதில் சில சாதகங்களும் உள்ளன, பல பாதகங்களும் உள்ளன. முதலில் பாதகங்களை பேசுவோம்.

பொதுவா கஞ்சா செடிகள் கடந்த காலங்களை காட்டிலும் அதிக ஆற்றல் மிக்கதாக மாற்றப்பட்டுள்ளன. ஆற்றல் மிக்கதாக என்றால், நன்மை பயக்கும் வழியில் அல்ல, தீமை விளைவிக்கும் வகையில். என்ன அது?

கஞ்சாவில் 104 கெனாபினாய்டுகள் (cannabinoids) இதுவரை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு முக்கியமான, செயல்தீவிரமான உள்ளடக்கக் கூறுகளை (active ingredient) பற்றி நாம் இங்கே பேசப் போகிறோம்.

  • ஒன்று டெட்ரா ஹைட்ரோ கெனாபினால் – THC (Tetra hydro cannabinol),
  • இன்னொன்று கெனாபி-டையோல் – CBD (Cannabidiol). இதில் CBD நல்ல கூறு.

THC கெட்ட கூறு. தெளிவாகச் சொன்னால் THC-யுடைய தாக்கத்தைக் குறைப்பதாக CBD உள்ளது.

கஞ்சா புகைக்கும் போது மூளையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று பார்ப்போம்.

பொதுவாக மூளையில உள்ள நரம்புகளின் ஆக்சான் என்ற பகுதியிலிருந்து வெளியிடப்படும் நரம்பியல் கடத்திகள் (நியூரோ டிரான்ஸ்மிட்டர்ஸ்), அடுத்து உள்ள நரம்பின் டெண்ட்ரைட் உடன் சேரும் போது அதன் மின் ஊட்டத்தை (electrical charge)-ஐ தூண்டிவிடும். தூண்டப்பட்ட அந்த சிக்னல் மற்ற நரம்புகளால் கடத்தப்படும். சுவாசிக்கும் போது, யோசிக்கும் போது, நடக்கும் போது இந்த மாதிரியான சிக்னல்கள் எல்லாம் மில்லி செகண்டுகளில் ஒன்றாகச் சேர்ந்து சிக்கலான வடிவமைப்புகளாக மாறி நம்மால் அந்தச் செயல்களைச் செய்ய முடிகிறது.

மூளையில் உளவியல் மற்றும் அறிவாற்றல் செயல்முறை (physiological and cognitive process)-களான பசி, தூக்கம், மகிழ்ச்சி, வலி உணர்தல், நினைவாற்றல், சிந்தனை போன்ற நிகழ்வுகளை ஒழுங்கமைக்கும் ஓர் அமைப்பு. உள்ளது. அதன் பெயர் எண்டோகெனாபினாய்ட் அமைப்பு – ECS (Endocannabinoid system).

இதன்படி, மேற்சொன்ன செயல்களை செய்ய, நியூரான்கள் அனாண்டமைட் (anandamide) என்ற ஒரு நியூரோடிரான்ஸ்மிட்டரை வெளியிடும் போது CB1, CB2 (cannabinoid receptors) போன்ற ஏற்பு புரதத்துடன் சேர்ந்து அந்த உணர்வுகளை உண்டாக்க வேண்டும்.

கஞ்சா புகைக்கும் போது, என்ன நடக்கிறத?

நமது மூளையில் உள்ள அனாண்டமைட் என்ற நியூரோடிரான்ஸ்மிட்டரின் பண்புகளை கஞ்சாவில் இருக்கும் THC யும் பெற்றிருக்கிறது. ஆக ஒருவர் கஞ்சா இழுக்கும் போது அனாண்டமைட் என்று தப்பாக நினைத்து அந்த ரிசப்டர்கள் (receptors) THC யை ஏற்றுக் கொண்டு நியூரான்களை கிளப்பி விடுகின்றன. இதனால் மூளையின் ரிவார்ட் அமைப்பு தூண்டப்பட்டு, மகிழ்வளிக்கும் நிகழ்வுகளான பாலியல் செயல்கள், சாப்பிடுவது போன்றவற்றின் போது உண்டாகும் அதே உணர்வை கொடுக்கின்றன. இன்னும் சொன்னால் பறப்பது போன்ற மகிழ்வளிக்கும் உணர்வு.

கஞ்சா இழுத்தால் அதிகமான கவனக் குவிப்பு கிடைப்பது எப்படி?

வழக்கமாக நியூரான்கள் எல்லாம் இந்த உணர்வு கடத்தலின் போது சிக்னல் கொடுத்தவுடன் சில விநாடிகள் எதற்கும் எதிர்வினை ஆற்றாமல் ஓய்வெடுக்கும். அப்போது மூளை மிகை செயல்பாடு இல்லாமல் அமைதியாக இருக்கும்.

ஆனால், கஞ்சாவில் உள்ள THC இந்த ஓய்வு காலத்தை குறைத்து விடுகிறது அதனால் நியூரான்கள் இடைவிடாமல் சிக்னல்களை கடத்தும், அதன் விளைவாக ஒருவர் எதைப் பற்றி நினைக்கிறாரோ, அதைப் பற்றியே அவரது மொத்த நினைப்பும் குவிக்கப்படும். எனவே, எதை நினைக்கிறீரோ அதனுடைய உந்துதலிலேயே பயணிப்பார். இந்தத் தாக்கம் இருக்கும் வரையில் நியூரான்கள் சிக்னலை தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டே இருக்கும் அதனால்தான் கஞ்சா அடித்தவர் அதிகமாக ஒரு விசயத்தின் மேல் கவனத்தை குவிக்க முடிகிறது.

அது மட்டுமில்லாமல், கஞ்சா புகைப்பது, டோப்பமைன், எபிநெப்ரின்அளவையும் அதிகப்படுத்தி விடுகிறது.

THC-க்கும் psychosis என்று சொல்லக்கூடிய மன நோய்க்கும் மிகவும் நெருக்கமான உறவு உள்ளது. இது தான் மனச் சோர்வு, பதற்றம் ஆகியவற்றை தூண்டிவிடும் காரணி என்று நிறைய ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மனச் சோர்வின் அறிகுறிகள் அல்லது ஆரம்ப கட்டமாக இருந்தால், கஞ்சா அதனை இன்னும் தீவிரப்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

அடுத்து நினைவாற்றல். எந்த அளவுக்கு கஞ்சாவை பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு நினைவாற்றலிலும் அது நிறைய தாக்கத்தை ஏற்படுத்தும். அது மட்டுமில்லாமல் எந்த வயதில் ஒருவர் அதனை பயன்படுத்த ஆரம்பிக்கிறார் என்பதும் இதில் ஓர் முக்கிய கருதுகோளாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மிகவும் சிறு வயதில் கஞ்சா எடுத்துக் கொள்பவர்களின் நினைவாற்றலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆக மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு இது தொடக்கப் புள்ளியாக உள்ளது. அதற்குக் காரணம் அதிக அளவான THC தான்.

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த கஞ்சா செடிகளின் CBD, THC விகிதம் 1:14, ஆனா இப்போது இதன் விகிதம் 1:80. இதிலிருந்தே THC யின் அளவை அதிகரித்து கஞ்சா செடிகள் வளர்த்தெடுக்கப்படுகின்றன என்று தெரிகிறது.

இதில் உள்ள சாதகங்கள் என்ன?

பல ஆண்டுகளாகவோ இந்தச் செடி மருத்துவகுணம் மிக்க செடியாகத்தான் பயன்பட்டு வந்துள்ளது. அதுவும் இந்தியாவில் அதற்கு மத ரீதியான முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் இருக்கும் இன்னொரு முக்கிய பொருளான CBD மனநோய், மனப் பதற்றம், பார்வை குறைபாடு, வலிப்பு போன்றவற்றுக்கு நிவாரணமாக பயன்படுகிறது. அது வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பொருளை வைச்சு போதைப்பொருள் அடிமை நீக்க சிகிச்சைக்கான மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன. இதன் பெயர் மருத்துவ மரிஜூவானா.

சரி இதை இந்தியாவில் சட்ட சம்மதமாக்கினால் என்ன ஆகும்? சமீப காலத்தில் கஞ்சா வீரியம் அதிகமானதாக மாற்றப்பட்டுள்ளதற்கு என்ன காரணம்?

முதல் விசயம் கள்ளச்சந்தை. கஞ்சா எந்த அளவுக்கு வீரியமிக்கதோ (higher THC level) அந்த அளவுக்கு அது விலை போகும். இதை கவனிக்க கட்டுப்படுத்த எந்த ஒரு அமைப்போ சட்டமோ இல்லாத பட்சத்தில் இதன் வீரியம் அதிகரிக்கப்பட்டு, அதிக விலைக்கு விற்கப்படும். வீரியம் அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்ப பயன்படுத்துபவர்களுக்கு உடல் /மன நல பிரச்சனைகளும் உருவாகும். பல்வேறு குற்றச் செயல்களுக்கு இது ஓர் ஆரம்பப் புள்ளியாக செயல்பட வாய்ப்பு இருக்கின்றது.

ஆனால், தடைசெய்யப்பட்டு இருப்பதாலேயே யாருக்கும் கிடைக்கவில்லை என்று சொல்ல முடியாது. பதினான்கு வயது சிறுவனால் கூட பெற முடியும் நிலை உள்ளது. கவலைக்குரிய விசயம் என்னவென்றால் இத்தொழிலில் சிறார்களும் ஈடுபடுத்தப்படுகின்றார்கள்.

கஞ்சாவின் மீதான தடை நீக்கப்பட்டு CBD அதிகமுள்ள கஞ்சா, அனுமதி மற்றும் கட்டுபாடுகளுடன் விற்கப்படும் பட்சத்தில் கஞ்சா ஏற்படுத்தும் பாதிப்பு குறைக்கப்படும் என்பது ஓர் பார்வை. கஞ்சாவின் ஊடான போதை என்பதன் வரையறையும் மாற்றியமைக்கப்படும்.

மேலும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் எடுத்துக்கொள்பவர்களின் பிரச்சனைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். சிறுவயதில் ஏற்படும் வன்முறை, சமூக கட்டமைப்பினால் பாதிப்பிற்குள்ளாபவர்கள், ஏமாற்றங்களினால் உண்டாகும் வெறுப்பு போன்ற காரணங்கள் இதற்கான தொடக்க நிலையாக அமைந்திருக்கும். அவர்கள் நிஜ உலகத்திலிருந்து தப்பிக்க விரும்புகிறார்கள்.

கஞ்சா பயன்படுத்துவதற்கான எண்ணம் சிகரெட்டிலிருந்து தொடங்குகிறது என்கிறது ஓர் ஆய்வு. பான், குட்காவில் ஆரம்பிப்பவர்கள், சிகரெட், குடிப்பழக்கம் என அடுத்த கட்டத்திற்கு செல்கிறார்கள். இதிலும் போதையில்லாமல் போகும் போது கஞ்சாவிற்கு செல்கிறார்கள். இவை எல்லாமே ஒன்றுடன் ஒன்று இணக்கமான விசயங்கள்.

இதை பயன்படுத்துபவர்கள் மற்றவற்றையும் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. அதே போல ஹெராயின் போன்ற மிகைபோதை பொருட்களையும் பயன்படுத்துவதற்கான வழியாக இது அமைகிறது. போதை பழக்கத்தின் பரிணாமம் இப்படியாகத்தான் செல்லும்.

ஆக கஞ்சாவை சட்டசம்மதமாக ஆக்குவது ஏற்கனவே இருக்கும் மது, சிகரெட் உடன் கூடுதல் ஒரு தலைவலியாகச் சேரும். ஆனால் சட்ட சம்மதமானதோ இல்லையோ இங்க யார் எப்போ கேட்டாலும் அது கிடைக்கிறதே. அது பிரச்சனை உண்டாக்கும் தானே. ஆகையால மேற்சொன்ன மனம் சார்ந்த பிரச்சனைகளை அணுகாமல் தடை செய்தால் மட்டும் எப்படி ஒருவனுடைய சமூகத் திறனை மாற்ற முடியும்? பாதுகாப்பில்லாத விசயங்களை அழிக்க அதை பாதுகாப்பானதாக மாற்றுவது தானே நியாயம் என்று வாதிடப்படுகிறது. மீறியும் அடிமையாகும் போது அவனுக்கான மீள் சிகிச்சைக்கான உத்திரவாதத்தையாவது அரசு கொடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

நம் நாட்டில மதுவிலேயே நிறைய பிரச்சனைகள் உள்ளன. முக்கியமாக கலப்படம். அரசாங்கம் சாமானியனோட மனநிலையையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளுமா என்று யோசிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

ஒரு வேளை சட்டசம்மதமாக்கப்பட்டால் இந்த மாதிரியான போதைப்பொருள் பயன்பாட்டுக்கு பிறகு நடக்கும் விசயங்களினால் ஏற்படும் இறப்புகள் (HIV, overdose) இதெல்லாம் குறைய வாய்ப்பு ஏற்படலாம். மற்ற நாடுகளில் இதற்கான எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.. தடை மீதான முடிவை பரிசீலிக்கும் போது இதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

1985-ல் அமெரிக்காவின் அழுத்தத்தால இந்தியாவில் போதை மருந்துகள் மற்றும் உளவியல் பொருட்கள் (Narcotic Drugs & Psychotropic Substances (NDPS) Act) சட்டம் கொண்டுவரப்பட்டு கஞ்சா வைத்திருந்தால் கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டு 20 ஆண்டு சிறைத் தண்டனை கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்திய கலாச்சாரத்துக்கும் கஞ்சாவுக்கும் ஏக போக பந்தம். இப்போது கூட வட இந்தியாவில் ஹோலி பண்டிகையின் போது பாங் பால் குடிக்கின்றனர். ஹிமாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, காஷ்மீர், உத்ரகாண்ட், கேரளா என்று பல மாநிலங்களில் கஞ்சா பயிரிடப்படுகிறது. சட்ட சம்மதமாக்கபடவில்லை என்றாலும், பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் எல்லாம் வழமையான ஒரு விசயமாகத்தான் இது உள்ளது.

சரி, ஒரு முதலாளியாக பேசுவோம். இப்போது உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் CBD அளவு அதிகமா உள்ள கஞ்சாவை சாக்லெட், கூல் டிரிங் இந்த மாதிரியான உணவுப்பொருட்களில் பயன்படுத்தலாம் என்று ஐடியா வந்து, அதற்கு முயற்சித்து வருகிறார்கள். ஒரு வேளை சட்டசம்மதமாக்கப்பட்டால் இந்தியாவுடைய வருமானம் நிச்சயமா அதிகமாகும். கள்ளச்சந்தை காலியாகும். (என்னதான் செய்தாலும் வீரியமிக்க கஞ்சாவை விற்க அது இயங்கும், ஆனால் அதைத் தடுக்க அதே வீரியமான சட்டங்களும் இயற்றப்பட வேண்டும்).

இதை சட்டசம்மதக்குவது குறித்து இந்திய சட்டசம்மத இயக்கம் (the Great Legalisation Movement – India), டெல்லியில் போராட்டம் நடத்தியது. மேலும் மருத்துவ நலன் மிக்க கனாபிஸை சட்டசம்மதமாக்குவது குறித்து மேனகா காந்தி தனிநபர் மசோதா கொண்டு வந்தார். அதற்கு இரண்டு பேர் ஆதரவு தெரிவித்தனர்.

தடைசெய்ய காரணமாக இருந்த அமெரிக்காவிலேயே இது சட்ட சம்மதமாக்கப்பட்டது. இங்கேயும் அதை செய்யலாமே என்று ஒரு வாதம் வைக்கப்பட்டது.

ஆனால், விவசாயத்தில் பணப்பயிர் எப்போது உள்ளே வந்தாலும் அதற்காக விவசாய நிலங்கள் அதிகப்படுத்தப்படும், அதனால உணவுப் பயிர்களின் உற்பத்தி குறையும். முக்கியமா இது கார்ப்பரேட்டுகளிடம் போனால் நிச்சயம் இது நடக்கும். கஞ்சா மற்ற பயிர்களை போல இல்லை, அதனால் காசு நல்லா வரும் என்று எல்லாரும் அதையே பயிரிட ஆரம்பிப்பார்கள். இதை காரணம் காட்டி கள்ளச்சந்தை மாஃபியாக்களும் அவங்களே பயிரிட ஆரம்பித்து விடுவார்கள்.

ஆக சட்டசம்மதமாக்குவதிலும் சரி தடைசெய்திருப்பதிலும் சரி பிரச்சனைகள் இருக்கதான் செய்கின்றன.

சட்டசம்மதமாக்க நம்மிடம் இருக்கும் ஒரு நல்ல காரணம் அதோட மருத்துவ குணங்கள் தான்.

ஏதோ ஒரு வலி நிவாரணிக்கு அடிமை ஆகி விட்ட ஒரு ஒரு பெண்ணுக்கு இது தீர்வை கொடுக்கும். அதாவது CBD என்கிற மூலக்கூறு வலிப்பு அல்லது தண்டுவட முடக்கத்துக்கு (cerebral palsy) மருந்தாக பயன்படுத்தும் ஓர் குழந்தைக்கு இது தீர்வாக பயன்படும், கீல்வாதம் வந்த ஒரு பாட்டிக்கு இது தீர்வை கொடுக்கும்.

சட்டசம்மதமாக்கப்படாமல் இதை மருந்தாக பயன்படுத்துவது எளிதான காரியமல்ல. சட்டசம்மதமாக்குவது என்பது அரசாங்கம் இதனை பொறுப்பெடுத்து கொள்வது போன்றது. யாருக்கு கிடைக்க வேண்டும் யாருக்குக் கிடைக்க கூடாது, எப்படி பயன்படுத்த வேண்டும் போன்ற சட்டங்களை இயற்றுவதற்கான பொறுப்பு. அப்போதுதான் இதன் பாதிப்புகள் குறித்து ஆராய முடியும்.

ஆனால் இந்தியாவில் குடிகாரர்களின் நோக்கமே வேறு. தேவை என்பதைத் தாண்டி எதற்காக குடிக்கின்றோம் என்று அவர்களுக்கே தெரியாது.. குடித்த ஆட்களின் மனைவிமார்கள், பிள்ளைகள் படும் கஷ்டங்கள் எண்ணிலடங்கா. இதை போல் கஞ்சாவும் மாறிவிடுமா என்கிற அச்சம் ஒரு புறம் இருந்தாலும், CBD அதிகம் உள்ள கஞ்சா அடிமையாக்காது என்பதை நினைத்து ஆசுவாசப்பட்டுக் கொள்ளலாம்.

மேலும் சிகெரெட், மது ஆகியவற்றினால் ஏற்படும் உடல் பிரச்சனைகள் இதில் குறைவு தான். ஆனால் மன நோய்கள் வெகு சாதாரணமாக புழங்கிக் கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டில் இது பிரச்சனையை கொடுக்கத்தான் செய்யும்.

எனவே கஞ்சாவை மருத்துவ நோக்கில் பயன்படுத்துவதை சட்டசம்மதமாக்குவதும், குறைந்த THC, அதிக CBD கொண்ட கஞ்சாவை சரியான அனுமதி மற்றும் கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்வதும் சரி. ஆனால் அது மது மற்றும் புகையிலை மீதான சட்டங்களை போல் அல்லாமல் சரியான சட்டதிட்டங்களுடன் செயல்படுத்தப்படாவிடின் பிரச்சனையிலும் பிரச்சனை.

இயற்கை தந்துள்ள ஒவ்வொரு விஷயத்திலும் நன்மைகள் உள்ளன..ஆனால் அதை மனிதன் தன்னுடைய தேவைக்கு ஏற்ப மாற்ற ஆரம்பித்து போது அதிலிருந்த பிரச்சினைகளும் ஆரம்பமாகின.

புகையிலை, கஞ்சா இரண்டும் இதற்கு எடுத்துக்காட்டுகள்..

கட்டுரையாளர் ஜெகதீசன் சைவராஜ் ஒரு அறிவியல் ஆர்வலர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்