Aran Sei

`ட்ரம்ப்-க்குக் கொரோனா வந்ததில் ஆச்சர்யமில்லை’ : அமெரிக்க சுகாதார நிபுணர்

Credits Scroll

மெரிக்காவின் தலைசிறந்த பொது சுகாதார நிபுணரை அதிபர் ட்ரம்ப் ‘பேரழிவு’ என விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திங்களன்று பிரச்சார ஊழியர்களுடனான உரையாடலின்போது, தொற்று நோய் நிபுணரான அந்தோனி ஃபாசியைக் கடுமையாக விமர்சித்து, “ஃபாசி மற்றும் இந்த முட்டாள்கள் கூறுவதைக் கேட்டு மக்கள் அலுத்துப்போய் இருக்கிறார்கள்.” எனக் கூறியதாக நியூயார்க் டைம்ஸ்  குறிப்பிட்டுள்ளது.

 

சிபிஎஸ் தொலைக்காட்சி, மருத்துவர் ஃபாசியுடனான 60 நிமிட நேர்காணலை ஒளிபரப்பு செய்த மறுநாள் அதிபர் ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

நேர்காணலில் மருத்துவர் ஃபாசி, “ட்ரம்ப்க்கு சமீபத்தில் கொரோனா தொற்று நேர்ந்தது குறித்து எந்த ஆச்சர்யமும் இல்லை. நோய்க்கான அறிகுறி தென்படாத வரையில் அவர் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல், முகக்கவசம் அணியாமல் பெரிய அளவில் கூட்டங்கள் நடத்தி வந்தார்.” என நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்வுகளில் பங்கெடுப்பதில் வெள்ளை மாளிகை தலையிட்டதாகக் கூறியதோடு, “பல நிகழ்ச்சிகளுக்கு நான் அழைக்கப்பட்ட போதும் அவற்றில் பங்குகொள்ள என்னை அனுமதிக்கவில்லை.” என்று அந்தோனி தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் ட்ரம்ப், “மருத்துவர் டோனியைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேச அனுமதிக்கவில்லை எனக் கூறியிருக்கிறார். ஆனாலும் ‘60 நிமிடங்கள்’ நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றதை நேற்று பார்த்தேன். மற்ற யாரையும் விட அதிக ஒளிபரப்பு நேரம் அவருக்கு ஒதுக்கப்படுவது போல தோன்றுகிறது.”

“அவரிடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். அவர் சிறந்த முடிவுகளை எடுக்க வேண்டும். ‘முகக்கவசம் தேவையில்லை. சீனாவை உள்ளே அனுமதிக்கணும்.’ எனக் கூறியவர் அவர்.” என்று குற்றம் சாட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

ஃபாசியை ஒரு முட்டாள் என்று அறிவித்ததோடு மட்டுமல்லாமல், அவர் ஒரு “நல்ல” மனிதர், ஆனால் ட்ரம்பின் கருத்தில் தேவைக்கதிகமான காலத்துக்கு நீடிக்கிறார் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

உரையாடலின் போது ட்ரம்ப், ”ஃபாசி நல்ல மனிதர். ஆனால் அவர் 500 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.” எனக் கூறியுள்ளதாக தி கார்டியன் வெளியிட்டுள்ளது.

1984-ம் ஆண்டு முதல் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் தலைமையாக இருந்துவரும் அந்தோனி ஃபாசி, ‘முன்மாதிரி தலைமை’க்கான விருது பெற்றுள்ளார். விருது வழங்கும் நிகழ்வில் பேசியபோது, அமெரிக்காவில் சமூகத்தின் சில பகுதிகள் கவலையளிக்கும் வகையில் அறிவியலுக்கு எதிரான பாதையில் பயணித்து வருவதாக எச்சரித்துள்ளார்.

கொரோனா நோய்த் தொற்று ஆரம்பித்தது முதலே தனக்கும் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக சிபிஎஸ் நேர்காணலில் அந்தோனி ஃபாசி கூறியுள்ளார்.

“உயிர்களைக் காப்பதற்கான ஒரு பொதுச் சுகாதாரச் செய்தி, இதுபோன்ற விஷத்தையும் பகைமையையும் தூண்டியுள்ளது. என்னுடைய வாழ்க்கைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது என்பது மிகவும் கவலையளிக்கிறது.” என மருத்துவர் அந்தோனி சிபிஎஸ் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்