Aran Sei

2020 ஆம் ஆண்டின் தலைசிறந்த சிந்தனையாளர் யார்?

“வாக்குகள் எண்ணப்பட்டுவிட்டன. இதோ முடிவுகளும் நம் கையில் உள்ளன. இன்றைய கொரோனா நோய்த் தொற்று கால நெருக்கடியை சிறந்த முறையில் கையாண்ட முதல் பத்து பேரில் முதலிடத்தைப் பிடித்திருப்பவர் – இந்த பத்து பேரில் மிகவும் யதார்த்தமாக சிந்தித்து விரைவாக, சரியாக செயல்பட்டவர் இதோ”

கொரோனா உடலை பாதிக்கும் நோய்தான், ஆனால் தலைசிறந்த சிந்தனையாளர் என்பதற்கான தேவைகளையும் மறுவரையறை செய்து விட்டது. கொரோனா நோய்த் தொற்றை எதிர்கொண்டு, சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறந்த நடைமுறை சிந்தனை வேண்டும். நாங்கள் உலகம் முழுவதும் இருந்து அத்தகைய 50 பேரை தேர்வு செய்தோம். அது இந்த கொரோனா நோய்த் தொற்று காலத்திற்கான புத்தம் புதிய பட்டியல் ஆகும்.

பொது வாக்கெடுப்பில் 20,000 வாக்குகள் செலுத்தப்பட்டு எண்ணப்பட்டன. முடிவும் வந்துவிட்டது. அது ஒரு தலைசிறந்த நடைமுறை சிந்தனையாளருக்கு அபார வெற்றியாக அமைந்துள்ளது.

அந்த முதலிடத்தைப் பிடித்துள்ளவர் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப்  பெற்றிருக்கிறார். அவர் ஜீன் பால் சாத்ரே வகையிலான மிகப் பெரிய அறிவு ஜீவி அல்ல. மாறாக K.K.சைலஜா என்ற ஒரு கம்யூனிஸ்ட்; தென் இந்தியாவின் தென் மூலையில் உள்ள கேரள மாநிலத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அரசின் மாநில சுகாதாரத் துறை அமைச்சர். அவரது முந்தைய வேலையால் “டீச்சர்”என மக்களால் அன்போடு அழைக்கப்படும் சைலஜா யாராலும் மறுக்க முடியாத அளவுக்கு உலகின் தலைசிறந்த சுகாதாரத் துறை அமைச்சர்.

2018-ல் ‘நிபா’ வைரஸ் தாக்குதல் தொடுத்த போதே வியக்க வைக்கும் செயல் திறனுடன் பணியாற்றி (இது virus 2020 என்ற திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது) மக்களை நோயிலிருந்து காப்பாற்றினார். அவர் சரியான இடத்தில் அமர்த்தப்பட்ட சரியான மனிதர்.

2020 ஜனவரி வரை கொரோனா நோய்த் தொற்று ‘சீனக் கதையாக’இருந்த போதே இது நம்மையும் கட்டாயம் தாக்கும் என்பதை அவர் மிகச் சரியாக முன் அனுமானித்தது மட்டுமல்ல அது ஏற்படுத்தப் போகும் விளைவுகளையும் முழுமையாக உணர்ந்து கொண்டார்.

உடனே விரைவாக உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து ‘பரிசோதனை-கண்டுபிடித்தல்- தனிமைப்படுத்துதல்’ செயல்முறைகளைப் முழுமையாகப் பெற்று தனது மாநிலத்தில் நடைமுறைப்படுத்தினார். அந்த நெருக்கடியான, குறுகிய நேரத்திலும் விமான நிலையம் மூலமே நோய்த் தொற்று உள்ளே நுழையும் எனச் சரியாக அனுமானித்து சீனாவில் இருந்து வந்த முதல் நோய்த் தொற்று உடையவரை உடனடியாக கண்டறிந்து தனிமைப் படுத்தினார். எனினும் வைரஸ் மீண்டும் வரத்தான் செய்தது. ஆனால், தடுப்பு நடவடிக்கைகள்கைகள் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. கடும் கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்துதல் மூலம் – சில சமயங்களில் தற்காலிக முகாம்கள் மூலமாகக் கூட- நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்.

பொது மக்களுக்கு சரியான உண்மையான தேவையான தகவல்கள் உடனுக்குடன் அவரால் நேரடியாகவே தொடர்ந்து தரப்பட்டன. இரவு பத்து மணிவரை கூட நீடித்த இத்தகைய சந்திப்புகளில் சைலஜா மிகக் கவனமாக சமூக இடைவெளியுடனும், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும் கலந்து கொண்டார்.

கோடைக்காலத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு குறைவாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் முடிவுறும் நிலையிலும்கூட இருந்தது. ஆனால் சைலஜா ஏற்கனவே அனுமானித்திருந்தது போல நோய்த் தொற்று மீண்டும் வேகமாக பரவ ஆரம்பித்தது. இங்கிலாந்தின் மக்கள் தொகையில் பாதியைக் கொண்டுள்ள கேரளாவில் நோய்த் தொற்று வீதமும், இறப்பு வீதமும் பிரிட்டனை விட மிக குறைவாகவே உள்ளது என்பதை தரவுகள் காட்டுகின்றன.

இத்தகைய பொது நிர்வாகத்தை அசாதாரணமாக, திறமையாகக் கையாளும் அவரது திறமை எதிர்காலத்தில் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் நிலையில் மக்களை வைத்துள்ளது என்பதில் ஐயமில்லை.

15ஆண்டுகளுக்குமுன் ‘prospect’உலகின் தலைசிறந்த 100 பேரை தேர்வு செய்த போது அதில் பெண்கள் வெறும் பத்து பேரே இருந்ததை பலரும் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் இன்று முதல் பத்து பேரில் ஏழு பேர் பெண்கள். எங்கள் முதல் 50 பேர் தேர்வில் பல ஆங்கிலேயர்கள் இருந்த போதும் அவர்களில் ஒருவர் கூட முதல் பத்தில் இடம் பெற இயலவில்லை. இதன்மூலம் மக்கள் தாங்கள் சார்ந்த இனத்தின் அடிப்படையில் இல்லாமல் சிறந்த கருத்துக்களின் அடிப்படையிலேயே வாக்களித்துள்ளனர் என்பதையும் இந்த 2020 காலகட்டத்தில் ஆண்களும் வெள்ளை இனத்தவரும் மங்கிப் போயிருப்பதை எங்களால் உணர முடிகிறது.

(புராஸ்பெக்ட் இதழில் வெளியான கட்டுரையின் சுருக்கம்)

நன்றி : www.prospectmagazine.co.uk

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்