Aran Sei

போபால் விஷவாயு தாக்குதலில் உயிர்பிழைத்த 13 பேர் கொரோனாவால் மரணம்

போபால் விஷவாயு தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த 13 பேர், கொரோனா தொற்றின் காரணமாக இறந்துள்ளதாக போபால் நினைவு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (பி.எம்.எச்.ஆர்.சி) ஒப்புக்கொண்டுள்ளது. இது, மார்ச்-அக்டோபர் மாத காலக்கட்டத்தில் நடந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

போபால் தகவல் மற்றும் செயற்பாட்டு அமைப்பைச் சேர்ந்த ரச்னா திங்க்ரா, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில கேள்விகளைக் கேட்டுள்ளார். அதில், மருத்துவமனை பொது வார்டு மற்றும் அதன் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை குறித்து கேட்டுள்ளதாக ‘தி இந்து’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதற்கு நவம்பர் 9 ஆம் தேதி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் போபால் மருத்துவமனை இந்த பதில் அளித்துள்ளது.

மருத்துவமனை நிர்வாகம் மாநில அரசைத் தவறாக வழிநடத்தியதாக ரச்னா திங்க்ரா குற்றம்சாட்டுகிறார். மருத்துவமனையின் செயல் இயக்குநர், மாநில தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலருக்கு அக்டோபர் 1 ஆம் தேதி அன்று அனுப்பிய கடிதத்தை ரச்னா திங்க்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.

“அக்டோபர் மாதம் வரை மருத்துவமனையில் ஒன்பது கொரோனா தொற்று மரணங்களே ஏற்பட்டுள்ளன.” என்று அதில் செயல் இயக்குநர் கூறியுள்ளதாக ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

​​ரச்னா திங்க்ரா, பொது சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார். “போபால் விஷவாயு தாக்குதலில் இருந்து உயிர் தப்பியவர்களில் சிலர், கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். அந்த இறப்பு  எண்ணிக்கையைக் குறைத்துச் சொன்னதற்கு, மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்.” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மருத்துவமனையில் ஏற்பட்ட கொரோனா தொற்று இறப்புகள் குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்படவில்லை என்றும் இதை மாநில அரசு உடனே கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளதாக ‘தி இந்து’  குறிப்பிட்டுள்ளது.

“தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் பணிபுரிந்த மருத்துவர்களின் பட்டியலை மருத்துவமனை வெளியிடவில்லை. ஏனெனில் அங்கு யாரும் பணியமர்த்தப்படவில்லை. இதற்கு, நிர்வாகம் பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும்.” என்று அவர் ‘தி இந்து’ விடம் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்