Aran Sei

இந்த ஆண்டு புத்தக கண்காட்சி: காணொளியில் நடத்த பபாசி முடிவு

கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக சென்னை புத்தகக் கண்காட்சியை நடத்த முடியாத சூழல் நிலவுவதால், அதனை இணையத்தின் வழியாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறது தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி). ‘மெய் நிகர் புத்தகக் கண்காட்சி’ என்றழைக்கப்படும் இக்கண்காட்சி மூலம் உலகின் எந்த நாட்டிலிருந்தும் இக்கண்காட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளதாக பபாசி தெரிவித்திருக்கிறது.

“இந்த பொதுமுடக்க சூழலில் இது போன்ற இணைய வழி புத்தகக் கண்காட்சி நல்ல ஒரு திட்டமாக இருக்கும். அதனை திறம்பட நடத்துவதற்கான திட்டமிடல்களை மேற்கொண்டு வருகிறோம். இது பற்றிய ஆராய்ச்சியில் இறங்கிய போது, உலக அளவில் ‘மெய் நிகர்’ புத்தகக் கண்காட்சி இதுவரை எங்கும் நடைபெற்றதில்லை என்பது தெரிய வந்தது. இந்த ஆண்டு ஜெர்மன் ஃப்ராங்பர்ட் புத்தகக் கண்காட்சி இணையத்தில் நடைபெறவிருக்கிறது. நேரடி புத்தகக் கண்காட்சி நடந்தாலும் ஐரோப்பிய நாடுகளைத் தவிர பிற நாடுகளைச் சேர்ந்தவர்களால் அதில் பங்கேற்க முடியாது என்பதால் இணையத்திலும் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த புத்தகக் கண்காட்சியில் பபாசி ஏற்பாட்டில் 25 தமிழ் பதிப்பகங்களும் கலந்து கொள்ளவிருக்கின்றன. இக்கண்காட்சியும் எங்களுக்கு முன் மாதிரியாக இருக்கிறது” என்கிறார் பபாசி அமைப்பின் துணைத்தலைவர் ஒளிவண்ணன்.

மெய்நிகர் புத்தகக் கண்காட்சியில் பபாசி என்னென்ன புதுமைகளையெல்லாம் மேற்கொள்ளவிருக்கிறது?

“ஆன்லைன் புத்தக விற்பனையின் மேம்படுத்தப்பட்ட வடிவம்  என்று இதனைச் சொல்லலாம். அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற தளங்களில் நம்மால் பதிப்பக வாரியாக புத்தகங்களைத் தேட முடியாது. புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்து ஒவ்வொரு பதிப்பகத்தின் ஸ்டாலுக்கும் சென்று புத்தகங்களைப் பார்த்து வாங்குவது போலவே இதனை வடிவமைக்கத் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் ஒளிவண்ணன்.

“அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற தளங்களிலிருந்து நாங்கள் முற்றிலும் வேறுபட்டு இயங்க உள்ளோம். புத்தகத்துக்கான ஆர்டரை வாங்கி பதிப்பகத்தாருக்கு தருவதாக அல்லாமல் அதை நாங்களே விற்பனை செய்து அதற்கு உண்டான தொகையை பதிப்பகத்தாருக்கு வழங்க இருக்கிறோம். இதன் மூலம் சிறிய பதிப்பகங்கள் கூட உலகளவில் தங்களது புத்தகங்களை கொண்டு சேர்க்க முடியும். உலக அளவில் இந்த மாதிரியை பபாசிதான் முதலில் அறிமுகப்படுத்துகிறது. மெய்நிகர் புத்தகக் கண்காட்சிக்கான அடித்தளப் பணிகள் போய்க்கொண்டிருக்கின்றன. விரைவில் கண்காட்சிக்கான தேதிகள் அறிவிக்கப்படும்” என்று கூறுகிறார் ஒளிவண்ணன்.

“கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் புத்தகப் பதிப்பாளர்களுக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடைகள் திறக்கவில்லை. புத்தகக் கண்காட்சிகள் நடக்கவில்லை. இணையம் வழியான விற்பனை ஓரளவுக்கு நடைபெற்று வருகிறது. ஆனால், இழந்த விற்பனையை மீட்டெடுப்பது மிகவும் கடினமாகும். இப்படிப்பட்ட நிலையில், தற்காலத்தை மனத்தில் கொண்டும், எதிர்காலத்தைக் கருதியும், புதிய பல மாதிரிகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. மெய்நிகர் புத்தகக் கண்காட்சியை இந்த அடிப்படையில்தான் பார்க்க வேண்டும். அதன் முக்கியத்துவம் அப்போதுதான் புரியும். இது மிகவும் வரவேற்கத்தக்க புது முயற்சி. இதில் நாங்கள்  கலந்துகொள்வோம். இது எங்களது புத்தகங்களைப் புதிய வாசகர் தளத்துக்குக் கொண்டுசெல்லும் என்று நம்புகிறோம்” என்கிறார் கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனர் பத்ரி சேஷாத்ரி.

“புத்தகங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து, தேர்வு செய்த புத்தகங்களை வாங்குவதற்கும், வாசிப்பில் ஈடுபாடு கொண்ட நண்பர்களை சந்திப்பதற்குமான இடமாக புத்தகக் கண்காட்சி இருந்து வருகிறது. புத்தகங்களை நேரடியாகப் பார்த்து வாங்கும் அனுபவம் அலாதியானதுதான் என்றாலும் இது போன்ற மெய்நிகர் புத்தகக் கண்காட்சி என்கிற முயற்சி வரவேற்கப்பட வேண்டியது. இதன் மூலம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளில் உள்ளவர்களும் பங்கேற்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. எங்களைப் போன்ற சிறிய பதிப்பகங்களை பெரிய சந்தைப் பரப்புக்குக் கொண்டு செல்லும் வழியாக இதனைப் பார்க்கிறோம்” என்கிறார் வாசகசாலை பதிப்பகத்தைச் சேர்ந்த அருண்.

மெய்நிகர் புத்தக கண்காட்சி குறித்து ஷ்ருதி என்ற வாசகரிடம் கருத்து கேட்டபோது, “இப்ப மட்டுமில்லை. இணையம் வழியா புத்தகங்கள் வாங்குறதை நான் எப்பவும் விரும்புவேன். நேரம் எவ்வளவு விரயம் ஆனாலும் அந்த புத்தகங்களை பத்தின விமர்சனங்களைப் படிச்சிட்டு வாங்கறது ஒரு சுகம். ஒரு சுதந்திரம். 2 ஆண்டுகளா கிண்டில் உபயோகிக்கிறேன். தமிழ் புத்தகங்கள் மட்டுமில்லாம உலகளாவிய இலக்கியத்தையும் எளிதாக தேடிப்படிக்க முடியுது. புத்தகக் கண்காட்சிக்கு நேரடியா போறது ஓர் அனுபவம். அந்த அனுபவத்தையும் நான் ரொம்ப விரும்புறேன். ஆனால் இன்றைய சூழலுக்கு இது மாதிரியான முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியது. பதிப்பக வாரியா புத்தகங்களைத் தேட முடியும்கிறது நல்ல விசயம்தான்” என்று கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்