’தி ஃபேமிலி மேன்’ தொடரின் இரண்டாம் சீசன் ஒரு வழியாக வெளியாகிவிட்டது. தமிழ்நாட்டில் பல்வேறு இயக்கங்கள் முன்வைத்த எதிர்ப்புகளையும், தமிழ்நாடு அரசு சார்பாக ஒன்றிய அரசுக்கு இந்தத் தொடரைத் தடைசெய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் புறந்தள்ளி தற்போது அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் முன்னணியில் இருக்கிறது இந்தத் தொடர்.
சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர் மேன் போல உருவாக்கப்பட்டது தான் ‘தி ஃபேமிலி மேன்’. இந்த சூப்பர்ஹீரோக்கள் இரண்டு வாழ்க்கைகளை வாழ்பவர்கள். மக்களைக் காப்பாற்றும் சூப்பர்ஹீரோ வாழ்க்கை ஒரு புறமும், தனிப்பட்ட வாழ்க்கையில் சாதுவாக மறுபுறமும் அவர்களது கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த வரிசையில், இந்தியாவின் உளவுத்துறையில் ‘டாஸ்க்’ என்ற பிரிவில் ஏஜெண்ட்டாக இருக்கிறார் ஸ்ரீகாந்த் திவாரி. தேசியப் பாதுகாப்பு அவரது ‘சூப்பர்ஹீரோ’ பணி. தனது வீட்டைப் பொறுத்த வரை, அவர் ஓர் அரசு ஊழியர்; பரம சாது. வீட்டின் பிரச்னைகளையும், நாட்டின் பிரச்னைகளையும் காக்கும் ஹீரோவைப் பற்றிய கதை தான் இந்தத் தொடர்.
அறிவின் “எஞ்சாயி எஞ்சாமி” – வேர்களை கண்டுபிடிப்பதற்கும் சமத்துவத்தைக் கொண்டாடுவதற்குமான ஒரு பயணம்
முதல் சீசனில், கேரளாவில் இருந்து ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த இளைஞர்கள் இருவரை வைத்து, பாகிஸ்தான் உளவுத்துறை டெல்லியில் ரசாயனத் தாக்குதலுக்குத் தயார்படுத்துகிறது. இந்த விசாரணையில் காஷ்மீர் விவகாரம், பசு குண்டர்கள் மேற்கொள்ளும் கும்பல் படுகொலை, இந்திய அரசு அதிகாரிகள் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைத் தீவிரவாதிகள் எனக் கருதி சுட்டுக் கொல்வது முதலான விவகாரங்களைத் தொட்டிருந்தது முதல் சீசன். அப்பாவி முஸ்லிம் இளைஞனுக்குத் தீவிரவாதி பட்டம் அளித்து கொன்றதையும், அரசு தனது தவறை மறைக்க அந்த இளைஞனை நிரபராதி என அறிவிக்காததையும், தனது குடும்பத்தின் அழுத்தம் காரணமாகவும் ‘டாஸ்க்’ பிரிவில் இருந்து விலகிய ஸ்ரீகாந்த் திவாரியின் கதையாக வெளியாகியிருக்கிறது இரண்டாவது சீசன்.
முதல் சீசனில், பாகிஸ்தான் உளவுத்துறையால் தூண்டிவிடப்பட்ட காஷ்மீரிகளும், இந்திய முஸ்லிம் இளைஞர்களும் வில்லன்கள் என்றால், இரண்டாவது சீசனில் பாகிஸ்தான் உளவுத்துறையால் தூண்டிவிடப்பட்ட விடுதலைப் புலிகள் போன்ற ஆயுதம் தாங்கிய ஈழ விடுதலை அமைப்பும், அவர்களுக்கு உதவும் தமிழ்த் தேசியர்களும் வில்லன்கள். இலங்கையின் செய்தித்தாள் ஒன்றில், ’தமிழ்ப் போராளித் தலைவர் பாஸ்கரன் மறைந்தார்’ என்ற காட்சியோடு தொடங்குகிறது இரண்டாம் சீசன். பிரபாகரன் ’பாஸ்கரன்’ என்று மாற்றப்பட்டிருக்கிறார். அவரோடு வரும் நடிகர் அழகம்பெருமாளின் கதாபாத்திரம் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், ஆண்டன் பாலசிங்கம் முதலானோரைத் தழுவிய கதாபாத்திரங்களாக அமைக்கப்பட்டிருக்கிறது.
‘சென்னை வரும் இந்தியப் பிரதமரைக் குண்டு வெடிக்கச் செய்து கொல்லும் ஈழப்பெண் போராளி’ என்பது இரண்டாம் சீசனின் ஒன்லைன். ராஜீவ் காந்தி படுகொலையைப் போல களம் அமைத்து, சமந்தாவை ஈழப்பெண் போராளியாக்கிப் பூச்சாண்டி காட்டியிருக்கிறது ‘தி ஃபேமிலி மேன்’ இரண்டாம் சீசன். ஸ்ரீகாந்த் திவாரியின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தவிர்த்து, மற்ற காட்சிகள் அனைத்து ஆபத்தான சித்திரிப்புகளைக் கொண்டிருக்கின்றன. தமிழுணர்வை முன்வைத்துத் தாய்நாட்டிற்காக நிகழ்ந்த போரும், அதன்பின் நிகழ்ந்த இனப்படுகொலையும் மிகச்சாதாரண பழிவாங்கல் கதையாக சுருக்கப்பட்டிருக்கிறது.
’தி ஃபேமிலி மேன்’ இந்தியத் தேசியத்தின் பார்வையை, அதன் பாதுகாப்பைக் காக்கும் சூப்பர்ஹீரோவின் கதையைச் சொல்கிறது. அந்த சூப்பர்ஹீரோ இந்தியத் தேசியக் கட்டமைப்பு தன் மக்கள் மீது மேற்கொள்ளும் தவறுகளைக் கண்டு குற்றவுணர்வு கொள்பவனாக இருக்கிறான்; அவற்றைத் தவறு என்று சொல்லத் தெரிந்தவனாக இருக்கிறான். ’தீவிரவாதிகள் என்பவர்கள் காலத்திற்குக் காலம் மாறுவர்; தீவிரவாதிகளை அரசுகள் தான் அடையாளம் பிரிக்கின்றன’ என்று சொல்லத் தெரிந்த அதே ஹீரோ தான், ‘அரசாங்கம் மாறலாம்; அரசியல்வாதிகள் மாறலாம்; ஆனால் தேசியப் பாதுகாப்பு தான் நமது பணி’ என்று பெருமையுடன் கூறுகிறான்.
என் தந்தையை கொன்றவர்களை நான் மன்னித்துவிட்டேன் – ராகுல் காந்தி
காலனியம் உருவாக்கிய தேசம் – அரசுகள் தங்கள் நலனுக்காக, மதம், மொழி முதலான பண்புகளை வைத்து அப்பாவிகள்மூலம் தீவிரவாதத்தையும், போர்களையும் உற்பத்தி செய்வதாக கூறுகிறார் அரசியல் ஆய்வாளர் மஹ்மூத் மம்தானி. முதல் சீசனில் இந்திய அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான பிரச்னையில், காஷ்மீரி தேசியப் பிரச்னையும், இந்தியாவின் முஸ்லிம் இளைஞர்களின் மத ஒடுக்குமுறையும் பாகிஸ்தான் உளவுத்துறையால் பகடையாகப் பயன்படுத்தப்படுவதாக சித்தரிக்கப்பட்டிருந்தது.
’தி ஃபேமிலி மேன்’ தொடரின் இரண்டாம் சீசனில் விறுவிறுப்புக்கும் சுவாரஸ்யத்திற்கும் பஞ்சமில்லை என்ற போதும், அது கொடுத்திருக்கும் விலை, தமிழர்களின் மாபெரும் போராட்ட வரலாறு. ஏற்கனவே தேசிய நீரோட்டத்தில் தமிழ்நாடு கலப்பதில்லை என்ற இந்தியத் தேசியப் பொதுப்புத்திக் குற்றச்ச்சாட்டிற்கு வலுசேர்க்கும் விதமாக இந்தச் சித்தரிப்புகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
முதல் சீசனில் பாகிஸ்தான் – காஷ்மீர் – முஸ்லிம்கள், இரண்டாவது சீசனில் ஈழம் – தமிழர்கள் என்ற இந்தியத் தேசியத்தின் எதிரிகளைச் சித்தரித்திருக்கும் ‘தி ஃபேமிலி மேன்’ மூன்றாவது சீசனில் சீனா – வடகிழக்குப் பகுதி எனத் தொடரப் போவதாக முடிவடைகிறது. மீண்டும் திவாரியும், அவரது ’டாஸ்க்’ பிரிவின் உயர்சாதி சகாக்களும் இந்தியத் தேசியப் பாதுகாப்புப் பணிசெய்யப் புறப்பட்டுவிட்டார்கள்.
கட்டுரையாளர் – ர. முகமது இல்யாஸ்.
ஊடகவியலாளர், தமிழின் முன்னனி பத்திரிகைகளில் எழுதி வரும் இவர் தற்போது ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.