Aran Sei

பாட்டுத் தலைவர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் மரணம் – துயரத்தில் ரசிகர்கள்

ந்தியத் திரையிசையின் தன்னிகரற்ற கலைஞர், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் செப் 25-ம் தேதி மதியம் 01.04 மணியளவில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் எஸ்.பி.பியின் உடல் நலம் குறித்து பல்வேறு ஆதாரமற்ற தகவல்களும் உலவி வந்தன. கொரோனோ தொற்றிலிருந்து அவர் மீண்டு விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் செப் 24-ம் தேதி இரவு அவர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்கிற தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து செப் 25-ம் தேதி மதியம் 01.04 மணிக்கு எஸ்பிபி இறந்து விட்டார் என்கிற தகவலை அவரது மகன் பாடகர் எஸ்பிபி சரண் அறிவித்தார்.

ஆந்திராவின் நெல்லூரில் 1946-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி பிறந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். 1966-ம் ஆண்டு தெலுங்குப் படத்தில் பாடியதன் மூலம் பின்னணிப் பாடகராகத் திரையுலகில் அறிமுகமானார். 1969-ம் ஆண்டு வெளியான அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்ற ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

இவர் திரையுலகுக்கு அறிமுகமாகி இந்த 54 ஆண்டுகளில் 16 மொழிகளில் மொத்தம் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். கன்னட இசையமைப்பாளர் உபேந்திரகுமாருக்காக 1981 பிப்ரவரி 8 அன்று ஒலிப்பதிவுக்கூடத்தில் ஒரே நாளில் 21 பாடல்களைப் பாடி சாதனை நிகழ்த்தினார்.

சங்கராபரணம் என்கிற தெலுங்குப் படத்க்தில் பாடிய பாடலுக்காக முதல்முறையாகத் தேசிய விருது பெற்றார். 1981-ம் ஆண்டு இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘ஏக் துஜே கே லியே’ படத்தின் மூலம் இந்தித் திரையுலகில் நுழைந்த எஸ்.பி.பி அப்படத்துக்கென தனது இரண்டாவது தேசிய விருது பெற்றார். தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிப்படங்களையும் சேர்த்து மொத்தம் 6 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

2001-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் 2011-ம் ஆண்டு பத்மபூஷன் விருதினையும் வென்ற எஸ்பிபி திரை இசை உலகின் ஒரு சகாப்தம். இந்தியத் திரையிசையில் அழிக்க முடியாத ஓர் தடத்தினை ஆழமாகப் பதித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவரது மறைவு உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களை சோகத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் எஸ்பிபிக்கு தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பாடும் நிலா என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மேதை எஸ் பி பாலசுப்ரமணியம் காலமாகி விட்டார். இந்திய இசை ஓர் சிறந்த மெல்லிசைக் குரலை இழந்து விட்டது’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ‘தன் இசையாலும் குரலாலும் சில தசாப்தங்கள் இந்தியத் திரை ரசிகர்களை கட்டிப்போட்ட எஸ் பி பாலசுப்ரமணியத்தின் இழப்பு என்பது நமது கலாச்சார உலக்குக்கே ஏற்பட்ட பெரும் இழப்பு’ என தெரிவித்துள்ளார்.

‘பல மொழிகளில் பல கோடி மக்களின் இதயங்களைத் தொட்ட எஸ்.பி.பியின் குரல் இனியும் வாழும்’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

“அரை நூற்றாண்டுக்கும் மேலாக தனது காந்தக் குரலால் கோடிக்கணக்கான நெஞ்சங்களை கட்டிப்போட்ட எஸ் பி பாலசுப்ரமணியத்தின் மறைவு திரையுலகுக்கும், இசையுலகுக்கும் ஈடில்லா பேரிழப்பு” என தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் என்பதைத் தாண்டியும் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே எஸ்.பி.பியுடன் நட்பு கொண்டிருந்த இளையராஜா “எல்லாத் துக்கத்துக்கும் ஓர் அளவு இருக்கிறது. ஆனால் இந்தத் துக்கத்துக்கு அளவே இல்லை” எனப்பேசி வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.

Isaignani Ilaiyaraaja's Heartfelt Tribute To SPB

Isaignani Ilaiyaraaja's Heartfelt Tribute To SPB "பாலு எங்க போன? ஏன் போன?"

Posted by Ilaiyaraaja on Friday, September 25, 2020

 

திமுக தலைவர் மு க ஸ்டாலின் “மன அழுத்தத்துக்கு இயற்கையான மாமருந்தாக இருந்த எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவை கோடிக்கணக்கான ரசிகர்கள் தம் சொந்தக்குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பாகவே கருதுகிறோம்” எனக் கூறியுள்ளார்.

‘எஸ் பி பியின் தங்கக்குரல் இன்னும் பல தலைமுறைகளுக்கு நினைவுகூரப்படும்’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

எஸ் பி பியின் மறைவுக்கான தனது இறங்கற்பாவை பதிவிட்டுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

“எஸ்.பி.பியின் குரலை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரை நேரில் அறிந்தவர்களுக்கு அவரது குரலை விடவும் அவரை மிகவும் பிடிக்கும். வயது பாகுபாடின்றி அனைவரையும் அன்போடு, மரியாதையோடு நடத்தும் மனித நேயமே இதற்குக் காரணம். முகமது ரஃபி, கிஷோர்குமார், டி. எம். செளந்தரராஜன் இந்தியாவில் எத்தனையோ பாடகர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இல்லாத சிறப்பு எஸ்.பி.பிக்கு இருக்கிறது. அவர் இந்தியா முழுவதும் உள்ள மொழிகளில் பாடியிருக்கிறார். அவரது கம்பீரமான குரல் இன்னும் நூறு ஆண்டுகள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.” என நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருக்கிறார்.

‘அண்ணன் எஸ்.பி.பி அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு’ எனக்கூறி நடிகர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராட்டி, பெங்காலி என பல மொழி சார்ந்த திரைத்துறையினர், இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், கர்நாடக சங்கீத கலைஞர்கள் என பலரும் எஸ்.பி.பிக்கு தனது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். எளிதில் இட்டு நிரப்பி விட முடியாத ஒரு வெற்றிடத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

இப்பெருங்கலைஞனுக்கு அரண் செய் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்