Aran Sei

பாபர் மசூதியைப் பற்றிக் கவிதை: எழுத்தாளரின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

Image Credits: OpIndia

மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சலில் திரிபாதி, மின்ட் மற்றும் கேரவன் இதழ்களில் ஆசிரியராகப் பங்களித்து வருகிறார். பென் இன்டர்நேஷனல் (PEN International) எனும் உலகளாவிய எழுத்தாளர்கள் சங்கத்தில், ‘சிறையில் உள்ள எழுத்தாளர்கள் குழுவின்’ கூட்ட ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். அவரது ட்விட்டர் கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதைப் பற்றிச் சலில் திரிபாதி தனது தாயாருக்கு ஒரு கவிதையை எழுதியுள்ளார். அதைப் படித்துக் காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியைப் பதிவிட்டுள்ளார். இது ‘மனத்தைப் புண்படுத்தும்’ வகையில் உள்ளதாக ட்விட்டரில் புகார் அளிக்கப்பட்டுள்ளது (report). இதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கவிதை ‘குற்றம்: இந்து வழக்கு’ (Offence: The Hindu Case) என்ற பெயரில் சலில் திரிபாதி எழுதிய புத்தகத்தில் முழுமையாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கவிதை:

“நீ மற்ற ஏழு வயதுச் சிறுமிகளுடன் அணிவகுத்துச் சென்றாய்,

குஜராத்தின் கிராமப்புறத்தில், அதிகாலை வேளையில், சுதந்திரப் பாடல்களைப் பாடினாய்,

அதனால் ஆங்கிலேயர்கள் வெட்கப்படுவார்கள், அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என்று நீ நம்பிக்கையுடன் இருந்தாய்.

5 ஆண்டுகள் கழித்து உன் நம்பிக்கை பலித்தது.

நீ புன்னகைத்தாய்,

மக்பூல் ஃபிடா ஹுசைன் வரைந்த இந்துப் பெண் தெய்வங்களின் நிர்வாண ஓவியங்களை நீ முதலில் பார்த்தபோது சிரித்தாய்,

சிலர் அவருடைய படைப்புகளை எரிக்க விரும்பியதாக நான் கூறினேன்.

அவர்கள் புராணச் சிற்பங்களைக் கண்டிருக்கிறார்களா என்று நீ என்னிடம் கேட்டாய். அவை, இன்னும் மோசமாக இருக்கும் என்று நீ கூறினாய்.

1992-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 6-ம் தேதி,

சிங்கப்பூர் அலுவலகத்தில் இருந்த என்னை நீ அழைத்து இருந்தாய்

உன் குரல் உடைந்தது,

அன்று அவர்கள் பாபர் மசூதியை இடித்தார்கள்.

நாம் மீண்டும் காந்தியைக் கொன்றுவிட்டோம் என்று நீ சொன்னாய்

நாம் கொன்றுவிட்டோம்.

2002-ம் ஆண்டு, கோத்ராவில் ஒரு ரயில் பெட்டி எரிந்தது,

அதில் 58 இந்துக்கள் உயிரிழந்தனர்.

அதன் பிறகு, இந்துக் குழுக்கள் இஸ்லாமியர்களின் வீடேறி அவர்களைக் கொள்ள முயன்றனர்,

இந்தக் காட்சிகளைத் தொலைக்காட்சியில் உற்றுப் பார்த்தபடி,

யாராவது எந்த நேரத்திலும் இதுபோன்ற செயலைச் செய்ய முடியுமா?

என்று வருத்தத்துடன் நீ கேட்டாய்.

ஒவ்வொரு முறையும் நீ சொல்வது சரியாகத்தான் இருந்துள்ளது.

பல ஆண்டுகளாக நான் எழுதுவதைப் படித்தபிறகு, எனக்கு எதுவும் புரியவில்லை என்று சிலர் கூறுகிறார்கள்.

நான் வெளிநாட்டில் வசிக்கிறேன்: இந்தியாவைப் பற்றி எனக்கு என்ன தெரியும்?

ஆனால் எனக்கு உன்னைத் தெரியும்: அது போதுமானதாக இருந்தது.

அதனால்தான் நான் இவ்வாறு உள்ளேன்.”

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர் உட்பட பல பிரபலமான ட்விட்டர் பயனாளிகள் சலில் திரிபாதிக்கு ஆதரவாகக் கருத்துப் பதிவு செய்து வருகிறார்கள். அவர்கள், இந்தக் கவிதை மிக ‘உருக்கமாக’ உள்ளது என்றும் சமூக வலைத்தளமான ட்விட்டர் தேவையற்ற ‘தணிக்கை’ நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்