அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞருக்கு 2020-ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், உலக நாட்டு மக்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் இலக்கியத்துக்கான நோபல் பரிசினை அமெரிக்கப் பெண் கவிஞர் லூயி க்ளக் பெறுகிறார்.
BREAKING NEWS:
The 2020 Nobel Prize in Literature is awarded to the American poet Louise Glück “for her unmistakable poetic voice that with austere beauty makes individual existence universal.”#NobelPrize pic.twitter.com/Wbgz5Gkv8C— The Nobel Prize (@NobelPrize) October 8, 2020
1968-ம் ஆண்டு அவருடைய முதல் கவிதைத் தொகுப்பான First born வெளிவந்தது முதலே, சமகால அமெரிக்க இலக்கிய உலகில் மிக முக்கியமான கவிஞர் என லூயி க்ளக் பாராட்டப்பட்டு வந்துள்ளார்.
லூயி க்ளக் இதுவரையில் 12 கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். The triumph of Achilles மற்றும் Ararat ஆகிய தொகுப்புகள் மூலமாக அமெரிக்காவிலும், வெளிநாடுகளிலும் அவருக்கு நிறைய வாசகர்கள் கிடைக்கப் பெற்றார்கள்.
The Wild Iris என்ற தொகுப்புக்காக 1993-ம் ஆண்டு லூயி க்ளக் புலிட்சர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இது அவருடைய மிகச் சிறந்த கவிதைத் தொகுப்பாகவும் பாராட்டப்பட்டுள்ளது.
கனவுகள் மற்றும் மாயப் பிம்பங்களைக் கடந்து சுயசிந்தனைக்கு மதிப்பளிக்கும் வகையில் உள்ள இவருடைய கவிதைகள், பெரும்பாலும் குழந்தைப்பருவம், குடும்ப அமைப்பு, பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் உடனான உறவு, போன்றவற்றைச் சார்ந்தே அமைக்கப்பட்டுள்ளன.
கவிஞரும் கட்டுரையாளருமான லூயி க்ளக், கனட்டிக்கட் மாகாணத்தில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகவும் பணிபுரிகிறார்.
2018–ம் ஆண்டு தேர்வுக் குழுவில் எழுந்த முறைகேடுகளால் இலக்கிய நோபல் விருது வழங்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. 2019-ம் ஆண்டில் முந்தைய ஆண்டுக்கான பரிசும் சேர்த்து ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டது.
பரிசுக்குத் தகுதியானவர்கள் யாரும் இல்லை என்று கூறி 1935-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு மறுக்கப்பட்டும் உள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்-க்கு 1913-ம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் வழங்கப்பட்டபோது, விருதினைப் பெரும் முதல் ஐரோப்பியர் அல்லாதவர் என்ற பெருமையும் அவரைச் சேர்ந்தது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.