Aran Sei

’சிறைபடுத்தப்பட்ட கலைஞர்களுக்கும், அதிகாரத்தின் செல்லப் பிள்ளைகளுக்குமான நாடாக மாறும் இந்தியா’ – நகைச்சுவைக் கலைஞர் குணால் கம்ரா

மும்பையைச் சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளரைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, உச்ச நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார். தனி மனித சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் அவருக்குப் பிணை அளிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவைப் பல பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் ஒருதலைபட்சமான செயல்பாடு என்று குற்றஞ்சாட்டியிருந்தனர். இதற்கிடையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்த மேடை நகைச்சுவைக்கலைஞர் குனால் கம்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அர்னாப் ஜாமீன் வழக்கு – விமர்சனம் செய்த குணால் கம்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

குணால் கம்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்வதற்கு ஒப்புதல் அளித்த அட்டார்னி ஜெனரல், குனால் கம்ராவின் பதிவுகள் ’நகைச்சுவை என்னும் எல்லையைக் கடந்து உச்ச நீதிமன்றத்தைக் கொச்சைப்படுத்தியுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று (ஜனவரி 29) தன்மீதான நீதிமன்ற வழக்கு தொடர்பாக, ஆறு பக்க பதிலை உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா தாக்கல் செய்துள்ளார்.

குணால் கம்ரா முதல் பாமரன் வரை – வெறுப்பு அரசியலும் சிரிப்பின் வலிமையும்

அதில், “என்னுடைய ட்வீட்டுகள் உலகின் மிகச் சக்திவாய்ந்த நீதிமன்றத்தின் அடித்தளங்களை அசைக்கக்கூடும் என்ற கருத்து, என்னுடைய திறமைகளை மிகைமதிப்பீடு செய்வது போல உள்ளது. உச்சநீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மதிப்பதை போலவே, நீதிமன்றமும் மக்களை நம்பவேண்டுமேயொழிய, ட்வீட்டரில் பதியப்படும் சில நகைச்சுவைகளை வைத்து தன்னுடைய கருத்தை உருவாக்கி கொள்ளக் கூடாது. என்னுடைய ட்வீட் பதிவுகள் உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை குறைக்கும் நோக்கில் பதியப்படவில்லை. ஒருவர் தன்னை புண்படுத்திவிட்டார் என்று கருதிக் கொள்வதே, இப்போதெல்லாம் ஒரு அடிப்படை உரிமையாக பார்க்கப்படுகிறது. முனாவர் ஃபாரூக்கி போன்ற மேடை நகைச்சுவை கலைஞர்கள், தான் செய்யாத கேலிக்காக சிறையில் அடைக்கப்படுகிறார்கள். தேசத்துரோகம் செய்ததாகக் கூறி பள்ளி மாணவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

“பேச்சு சுதந்திரம் என்பது அரசியலமைப்பின் ஒரு முக்கியமான அம்சம் என்பதை நீதிமன்றம் நிரூபித்துக்காட்டும் என்று நம்புகிறேன். சக்திவாய்ந்தவர்களால் கண்டனத்தையும் விமர்சனங்களையும் சகித்துக் கொள்ள முடியாவிட்டால், சிறைபிடிக்கப்பட்ட கலைஞர்களுக்கும், அதிகாரத்தின் செல்லப்பிராணிகளுக்கான நாடாக நாம் சுறுங்கி போவோம். நகைச்சுவைகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள தேவையில்லை. இந்த நகைச்சுவைகள் என்பது கலைஞரின் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. அந்தக் கருத்துகளினூடாக அவர் தனது பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களைச் சிரிக்க வைக்கிறார்.” என்று குணால் கம்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.

குணால் கம்ரா, ரச்சிதா தனேஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றம் நடவடிக்கை

மேலும், “தங்களுக்கு சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைகளை, அரசியல்வாதிகள் விமர்சனங்களை புறந்தள்ளுவதை போல மக்கள் புறந்தள்ளுகிறார்கள். அவ்வளவுதான் நாங்கள் சொல்லும் நகைச்சுவையின் வாழ்நாள். ஒரு நகைச்சுவையின் எல்லை அங்குதான் முடிய வேண்டும். நீங்கள் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்களோ, அது அவ்வளவு பேரைச் சிரிக்க வைக்கும் என்ற நம்பகத்தன்மையை உங்களுக்குத் தரும். ” என்று குணால் நீதிமன்றத்திடம் பகிர்ந்துள்ளார். கவன பொருளாதாரத்தின்(Attention Economy) வரையறையின்படி ஒரு விமர்சனத்தின் மீது எந்தளவு கவனம் செலுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு அது நம்பகத்தன்மையுடையதாகிறது. “

 

நீதிமன்ற அவமதிப்பு – ட்வீட்டுகளுக்காக குணால் கம்ரா, ரச்சிதா தனேஜாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

“நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை, நீதிமன்றத்தின் சொந்த செயல்பாடுகள்தான் தீர்மானிக்கிறதேயன்றி, அவற்றின் மீதான விமர்சனங்களும் கருத்துகளும் அல்ல. நீதித்துறை அலுவலகங்கள் உட்பட அனைத்து அரசியலமைப்புசார் அலுவலகங்களுக்கு  நகைச்சுவைகளிடமிருந்து எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை. நையாண்டிகளையும் நகைச்சுவைகளையும் நீதிபதிகள் எதிர்கொள்வதால், அவர்களால் சரியாகச் செயல்பட முடியவில்லை என்ற வாதத்தை நான் ஏற்கவே மாட்டேன்.” என்று குணால் கம்ரா குறிப்பிட்டுள்ளதாக தி இந்து கூறியுள்ளது.

“இச்சமூகத்தின் பொது பிரச்சினைகளை ஒரு நகைச்சுவை கலைஞர் தனக்கே உரித்தான தனித்துவமான முறையிலும் வழியிலும் மக்களின் முன்பு வைப்பார். அத்தகைய அவரின் மொழியும் பாணியும் அவமதிப்பதற்காக அல்ல. மாறாக, மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகத்தான். சுருங்கச் சொல்லுதல் என்பது நகைச்சுவையின் ஆத்மா. இந்த முறையானது சட்டரீதியிலான முறைக்கும் அந்நியமாகக்கூட இருக்கலாம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘கவிஞர்களால் சிறையை நிரப்பாதீர்கள்’ – வரவர ராவ் விடுதலைக்கு இஸ்ரேலிய கவிஞர்களின் குரல்

“மனுதாரருக்கு நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும் என்ற முன்நிபந்தனையின் அடிப்படையில், எதிர்தரப்பின் அனைத்து விதமான ஆலோசனைகளையும் ஏற்க தயாராக இருக்கிறேன். என்னுடைய வேலையின் கொள்கையென்பது, அல்லற்படுபவர்களை ஆற்றுப்படுத்துவதும், சவுரியமானவர்களைத் அல்லற்படுத்துவதும்தான். இதையே நான் மனப்பூர்வமாகப் பின்பற்ற முயற்சிக்கிறேன். நகைச்சுவை என்பது ஒரு சூழலின் இறுக்கத்தை மழுங்கடித்து, அதை இலகுவாக்க முயற்சிக்கும்” என்று கூறியுள்ளதாக தி இந்துவின் செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் உத்தரவிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்