Aran Sei

க்ரியா’ ராமகிருஷ்ணன் மறைவு : எழுத்தாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல்

க்ரியா ராமகிருஷ்ணன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் இயற்கை எய்தினார். இவருக்கு எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

பதிப்புலகில் தனக்கெனத் தனிப் பாணியோடு இயங்கிவந்தவர் க்ரியா ராமகிருஷ்ணன். குடும்பம், இலக்கியம் ஏதாவது ஒன்றிற்குத்தான் என்னால் நேர்மையாக இருக்க முடியும் என்று திருமணம் செய்துகொள்ளாமல் முழுக்க முழுக்க மொழிக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். பதிப்புலகில் இவர் நுழைந்த பிறகு எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்தன. முக்கியமாக நூலின் தரம், வடிவமைப்பு உள்ளிட்டவற்றில் க்ரியாவுக்கு நிகரான இன்னொரு பதிப்பகம் தமிழில் இல்லை என்று சொல்லலாம். மேலும், க்ரியா மூலம் வெளியான மொழிபெயர்ப்புகள் அதுவரை யாரும் முன்னெடுக்காதவையாகும்.

க்ரியா ராமகிருஷ்ணன் முயற்சியால் பிரெஞ்சிலிருந்து நேரடி மொழிபெயர்ப்புகள் தமிழில் வெளிவந்தன. உதாரணமாக, ஆல்பர் காம்யுவின் `அந்நியன்’, முதல் மனிதன், சார்த்தரின் `மீள முடியுமா?’, ழாக் ப்ரெவரின் சொற்கள், ஜோஷ் வண்டேலுவாவின் அபாயம், ஷார்ல் போத்லெரின் `தீமையின் மலர்கள்’ என எண்ணற்ற படைப்புகள் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் பெரும் மாற்றங்களை உண்டாக்கின.

கச்சிதமான எழுத்துருக்களோடும் வடிவத்தோடும் அமைந்த ‘க்ரியாவின்’ தற்காலத் தமிழ் அகராதி இப்போது இன்னொரு மைல்கல்லை எட்டியுள்ளது; மேலும் அது விரிவாக்கப்பட்டு மூன்றாம் பதிப்பாக சமீபத்தில் வெளிவந்திருந்தது.

Photo Credit :  தி இந்து

க்ரியா ராமகிருஷ்ணன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் இயற்கை எய்தினார். இவருக்கு எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

“என் வாழ்வில் மிகப் பெரிய உயிராக நான் போற்றி மதிக்கும் க்ரியா ராமகிருஷ்ணன் இன்று அதிகாலை நாலரை மணியளவில் காலமாகி விட்டார். எல்லாம் முடிந்துவிட்டதான உணர்வும் மீள முடியாத வெறுமையும் மனதை ஆக்கிரமித்திருக்கின்றன. கண்ணீர் அஞ்சலி.” என்று எழுத்தாளர் சி.மோகன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“ழாக் ப்ரெவர் கவிதைகள் என் போன்ற இளையோருக்கு உருவாக்கிய பரவசம் சொல்லில் அடங்காதது. எது நவீன கவிதை என்று தேடலுடனும் தவிப்புடனும் அலைந்துகொண்டிருந்த நாட்களில் ப்ரெவர் எளிமையின் வசீகரத்துடன் வந்தார். அன்றாடங்களின் ஏதுமின்மைகளில் ஒளிந்திருக்கும் கவித்துவங்களையும், மதிப்பற்ற எளிய விஷயங்களின் தத்துவகணங்களையும் சுட்டிக்காடினார். கவிஞன் எப்போதும் மகத்தான விஷயங்களின் உபாசகனாக இருக்க வேண்டியதில்லை என்றும் அவன் சிறிய விஷயங்களின் கடவுளாகவும் இருக்கலாம் என்றும் வழிகாட்டினார்” என்று கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“இன்று புதிதாய் பதிப்புத் துறைக்குள் நுழையும் இளைஞர்களுக்கும் அதில் இருக்கும் சவால்கள் என்னென்ன, செய்ய வேண்டியவை என்னென்ன என்று போதித்த நல்லாசான். பெரியவருக்கு அஞ்சலிகள்” எனக் கூறியுள்ளார்.

“மரணப் படுக்கையில் இருந்துகொண்டு ‘தற்காலத் தமிழ் அகராதி’யின் மூன்றாம் பதிப்பைக் கொண்டு வர தமிழ்ப் பணி செய்த தகைமையாளர். அவர் நலமடைந்து வழக்கமான இலக்கியப் பணியைத் தொடருவார் என்ற நம் நம்பிக்கையை இயற்கையின் கோணல் புத்தி பறித்து விட்டது!” என்று திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், “ ‘தமிழுக்குத் தொண்டு செய்தோன்
சாவதில்லை’ என்றார் புரட்சிக் கவிஞர். இன்றும், என்றும் தமிழ்கூறும் நல்லுலகின் சிந்தனையில் அகராதிக்கருவூலமாக க்ரியா ராமகிருஷ்ணன் வாழ்வார் என்பது உறுதி!” என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

“தமிழ்ப் பதிப்புலகத்தின் முக்கிய ஆளுமையான ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் மறைவு வேதனையைத் தருகிறது.” என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“பதிப்பைத் தவமாகக் கொண்டு, மரணப் படுக்கையிலும் பணியாற்றியவர்; அவர் வெளியிட்ட ‘தற்காலத் தமிழ் அகராதி’ அரிய கருவூலம்! குடும்பத்தினர்- தமிழ்ப் பதிப்புலகத்தினர் அனைவர்க்கும் என்னுடைய ஆறுதல்!” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்