Aran Sei

‘பிடுங்கப்பட்ட தீவுகளை மீனவப் பழங்குடிகளிடம் திருப்பிக் கொடுங்கள்’ – ஜோ டி குரூஸ்

மிழ்நாட்டில் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகக் கருதப்படாவிட்டாலும், தொடர் பிரச்சனையாக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனை உள்ளது. அதிலும், இராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு, அண்டை நாட்டு கடற்படைகளின் தொடர் தாக்குதல்கள், மீன் விற்பனைக்கு முறையான  சந்தைகள் இல்லாமல் இருப்பது, பெரிய அளவிலான முதலீடுகள் செய்ய முடியாமல் இருப்பது என்று பிரச்சனைகள் நீண்டுக்கொண்டே போகிறது.

சமகாலத்தில், மீனவ சமுதாயத்தின் வாழ்க்கையைக் கலைப்பூர்வமாகவும் உயிப்புடனும், தன் நாவல்கள் மற்றும் ஆவணப்படங்களில் பதிவு செய்து வருபவர் ஆர்.என்.ஜோ டி’குரூஸ்.  சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர், ஆவணப் பட இயக்குனர் என்பதை எல்லாம் தாண்டி, தன்னை ஒரு மீனவராக  அடையாளப்படுத்திக் கொள்வதில் ஆர்வமிக்கவர்.

அவரிடம் அரண்செய்  நேர்காணல் செய்துள்ளது.

ஆர்.என்.ஜோ டி’குரூஸ் (நன்றி : Scroll.in)

சென்ற பாஜக ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ், ‘நீலப்புரட்சி’ திட்டத்தின் கீழ், இராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் ட்ராலர்களையும் (விசைப்படகுகள்), இழு வலைகளையும்  வெளியேற்றி, அதற்கு பதிலாக அதிக குதிரைசக்திக் கொண்ட ஆழ்கடல் மீன் பிடி வலைகளை வழங்கப்போவதாக அறிவித்திருந்தார்.  அந்தத் திட்டம் இப்போது எந்த நிலையில் இருக்கிறது?

ஆழ்கடல் படகுகளுக்கான டிசைன் வடிவமைக்கப்பட்டதிலேயே பல சிக்கல்கள் உள்ளன. ஆழ்கடலில் பயன்படுத்துக்கூடிய படகுகள் எவ்வளவு நீளம் இருக்கணும், எவ்வளவு அகலம் இருக்கணும், ட்ரைவர் இருக்கை எங்கு அமைக்கப்படணும், மீன்களைப் பதனிட வைக்கும் இடம் எவ்வளவு வசதியுடன் இருக்க வேண்டும், மீனவர்கள் தங்கும் இடம் எவ்வளவு வசதிகளுடன் இருக்க வேண்டும், என்னென்ன தொலைத்தொடர்பு சாதனங்கள் இருக்க வேண்டும் என்று கள நிலவரத்தை உணராமல், தன் இஷ்டத்துக்கு ஒரு படகை அரசு மீனவனிடம் கொடுத்தால், அவர்கள் என்ன செய்வார்கள்?

படகு தயாரிப்பதற்கான ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்ட போதே இவற்றை அரசு கவனத்தில் கொள்ளவில்லையா?

இல்லை. இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, முதலில் 20 படகுகளைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. கொச்சின் ஷிப் யார்ட்டில் 12 படகுகளுக்கும், மற்றவை அதிகாரிகளின் விருப்பப்பட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. கொச்சின் ஷிப் யார்ட்டில் இருந்து வந்த 8 படகுகளில் பல சிக்கல்கள் இருக்கிறன.

இந்தத் திட்டத்தில் மீனவர்கள் எப்படி இணைய முடியும்? இந்த ஆழ்கடல் படகு கட்டுமான செலவுகளில் மீனவர்களின் பங்கு என்ன?

இந்தத் திட்டத்தில் நீங்கள் நுழைவதற்கு, முதலில் விசைப்படகு மீனவராக இருக்க வேண்டும். பாரம்பரிய மீனவர்களுக்கு அதில் இடம் இல்லை. படகுக்கு 8 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். 16 லட்சம் வங்கியில் கடன் வாங்கலாம். மீத 56 லட்சத்தை மாணியமாக மத்திய மாநில அரசுகள் கொடுக்கிறது. இதெல்லாம் சேர்த்து, படகின் மதிப்பு 80 லட்சம்.

`மத்திய அரசு துரோகத்தை நிறுத்த வேண்டும்’ – தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம்

ஆனால், படகு கட்டுமானங்களில் இருக்கக்கூடிய கொச்சின் ஷிப் யார்ட் போன்ற நிறுவனங்கள், இந்த ஆழ்கடல் படகுகளை 80 லட்சத்திற்குத் தயாரிக்க முடியாது என்று திரும்ப திரும்ப சொல்லி வருகிறது. மத்திய அரசு இந்தத் திட்டத்தைத் தேர்தல் பரப்புரையில் சொல்லியிருக்கிறது. அதனால் அந்தத் துறையில் உள்ள அதிகாரிகளும் அமைச்சர்களும், கொச்சின் ஷிப் யார்ட்டை வற்புறுத்தி படகுகளைச் செய்ய வைக்கிறார்கள்.

அதனால் அந்த ஷிப் யார்டில் உள்ள கார்ப்ரேட் சோசியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி நிதியில் இருந்து, படகுக்கு 16 லட்சம் எடுக்கப்பட்டு, மொத்தம் 96 லட்சத்திற்கு படகுகளைச் செய்து கொடுத்தார்கள்.

ஒப்பந்தம் போடப்பட்ட மற்ற படகு கட்டும் நிறுவனங்கள் தயாரிப்பை கொடுத்து விட்டதா?

இன்னும் இல்லை. 80 லட்சம் போதாது என்று சொல்லி விட்டன. அதனால் இன்னும் அவை எந்தப் படகையும் கொடுக்கவில்லை. ஆனால், இந்தப் படகுக்குப் பணத்தைக் கட்டிவிட்டு, படகு வராமல், வங்கி கடன் வாங்கிய நாளில் இருந்து வங்கியில், மீனவர்கள் வட்டி கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – இலங்கை கடற்படை அட்டூழியம்

96 லட்சத்திற்கு தயாரிக்கப்பட்ட ஒரு ஆழ்கடல் மீன்பிடிப்பு படகு தயாராகி மீனவரின் கைக்கு வருகிறது. அந்த படகை தொழிலுக்கு எடுத்து செல்ல, அந்த மீனவருக்கு எவ்வளவு செலவு ஆகும்?

அவை வெறும் படகுகள் மட்டும் தான். இதை வைத்துக்கொண்டு ஆழ்கடல் மீன் பிடிப்புக்குப் போக முடியாது. குறைந்த பட்சம் 8 டன் வலைகள் கொண்டு போனால் தான் அவர்களால் 15 நாளில் இருந்து ஒரு மாதம் வரை கடலில் தங்கியிருந்து ஆழ்கடல் மீன் பிடிப்பைச் செய்ய முடியும். ஒரு டன் வலையைத் தயாரிக்க ஐந்து லட்சம் ரூபாய் வரை ஆகும். 8 டன்னுக்கு 40 லட்சம். இந்த செலவைப் படகை வாங்கிய மீனவரே செய்தாக வேண்டும்.

மேலும், எரிப்பொருளுக்கு 5 லட்சம் தேவைப்படும். மீன் பதப்படுத்த தேவைப்படும் ஐஸ் கட்டிகள், மீனவர்களின் சாப்பாட்டிற்குத் தேவையான ரேஷன் பொருட்கள், குடிநீர் போன்றவற்றைச் சேர்த்தால், இதற்கே தனியாக 50 லட்சம் ஆகும். மீனவரிடம் இந்த பணம் இருந்தால்தான், ஒரு மீனவர் முதல் தடவை அந்தப் படகுடன் கடலுக்கு போக முடியும்.

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் (நன்றி : Deccan Chronicle)

அடுத்த முறை, வலைகளுக்கான செலவு போக, 5 முதல் 8 லட்சம் செலவு ஆகும்.  இவ்வளவு செலவு செய்து நாங்கள் கடலுக்குப் போவதற்குப் பதிலாக, 10 லட்சம் மதிப்பில் சிறியளவு படகுகளை வாங்கி, தொழில் செய்துக்கொள்வோமே என்று மீனவர்களுக்கு எண்ணம் வருவது இயல்பு தானே?

பூர்வீக மீனவர்களை இந்தத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளவில்லையா?

ஆம். இந்த ஆழ்கடல் மீன் பிடிப்பு என்பது விசைப்படகு மீனவர்களுக்கு தானா?  அவர்கள் மட்டும் தான் மீனவர்கள் என்று அரசு அங்கீகரிக்கிறதா? பாரம்பரிய மீனவர்களுக்கு இந்தத் திட்டத்தில் இடமில்லை. அவர்கள் தான் பிறப்பால் மீனவர்கள். விசைப் படகு மீனவர்களில், இதுபோல முதலீடு செய்து தொழில் செய்பவர்கள் வணிக மீனவர்கள். பூர்வீக மீனவர்களுக்கும் இந்த வாய்ப்பு வேண்டும். ஆனால் கள நிலவரத்தை அறிந்து, திட்டமிடப்பட்டதாக இருக்க வேண்டும்.

`பாஜகவுக்குக் கார்ப்பரேட்கள்தான் முக்கியம்; நாங்கள் அல்ல’ – மீனவத் தலைவர் கொந்தளிப்பு

ஆழ்கடல் மீன் பிடிப்பிற்கு செல்வதற்கான தேவையும்? போதுமான வளமும் இந்திய ஆழ்கடல் பகுதியில் உள்ளதா?

ஒவ்வொரு வருடமும் இந்திய கடலோரப் பகுதிகளில் இருந்து, ஒரு லட்சத்தி எம்பது ஆயிரம் டன் தற்காலிகமாக தீர்ந்துபோகக்கூடிய வளங்கள் (Temporarily exhaustible resource) இருக்கிறது. இந்த வளத்தை நாம் நம் கரைக்கு கொண்டு வர வேண்டும் என்றால், அதற்கு ஆழ்கடல் மீன் பிடிப்பு தான் சரி. ஆனால், பல வெளிநாட்டு கப்பல்களுக்கு நமது கரையில் அனுமதிக்கொடுக்கப்பட்டு, நம் கடல் வளம் அவர்களால் சூரையாடப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

மீனவர்களுக்கு தேவையான தொழிற்நுட்ப சாதனங்களை அரசு வழங்குவதில்லை என்று தொடர் புகார்கள் எழுகிறது. அழ்கடலில் இருக்கும் மீனவர்களுக்கு அதன் தேவை என்ன?

ஓக்கி புயல் காலத்தில், கன்னியாகுமரி ஆழ்கடல் மீனவர்கள் சரியான தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாததால், நடுக்கடலில் நிர்கதியாக நின்றார்கள். புயல் மற்றும் மழை காலங்களில், கரைக்கும் கடலில் இருக்கும் படகிற்கும் சரியான தகவல் தொடர்பு வேண்டும். இல்லையென்றால், அவர்கள் கடலில் துண்டிக்கப்பட்டு திண்டாட வேண்டியிருக்கிறது.

கச்சத்தீவை ஏன் மீட்க வேண்டும்? – மீனவ சங்க தலைவருடன் நேர்காணல்

இத்தனை இடர்பாடுகளையும் கடந்து, ஒரு மீனவர் மீன்களைக் கரைக்கு கொண்டு வந்து, சேர்த்தால், அதை விற்பதற்கான சந்தைக் கட்டமைப்பு அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறதா?

மீன்களைச் சந்தைப்படுத்துவதற்கு முறையான வசதிகள் இல்லை. முதலில் விசைப்படகுகளிலும் சரி, கரையிலும் சரி. பதனிடுவதற்கான வசதிகள் இல்லை. அதனால் பிடித்து வரப்பட்ட மீன்களை உடனே, கேட்கும் விலைக்கு விற்க வேண்டியுள்ளது.

பாம்பன் மீன்பிடித் துறைமுகம்

மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு போனால் சூரை மீன்களைப் பிடித்து வருவார்கள். இந்த மீன்கள் சர்வதேச சந்தைகளில் ஒரு கிலோ அறுபது டாலர்களுக்கு விற்கப்படுது. இங்கு இவை ஒரு கிலோ அறுபது ரூபாய்க்கு கூட விற்கப்படுவதில்லை. இந்த பார தூர வித்தியாசத்தை கலைந்தால், பெரும் பொருளாதார வளம் கிடைக்கும்.

தமிழக மீனவர்கள் படுகாயம் – தொடரும் இலங்கைக் கடற்படைத் தாக்குதல்

இராமநாதபுரம், தூத்துக்குடி மாவாட்ட கடற்பகுதிகளை உள்ளடக்கிய மன்னார் வளைகுடாலில், முயல் தீவு, உப்புத் தண்ணி தீவு உட்டப 20க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இவை முதலில் பாரம்பரிய மீனவக் பழங்குடிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. இப்போது அவர்களிடமிருந்து அவை பிடுங்கப்பட்டுள்ளன. அதனால், தீவிற்கு என்ன பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கிறது?

இந்த ராமேஸ்வரம் தீவு பகுதியில் பாரம்பரிய மீனவர்கள் தான் 95 சதவீதம். பல சாதிகளைச் சேர்ந்தவர்கள் இதில் அடக்கம். அவர்களின் கண்கானிப்பில் இந்தத் தீவுகள் இருந்த வரை, செழுமையாக இருந்தன. அந்தத் தீவுகளுக்கு மீனவர்கள் குடும்பத்தோடு சென்று, கல்யாணகாட்சிகள் நடத்தி இருக்கிறார்கள். அந்த அளவுக்கு தீவின் செழிப்பு இருந்திருக்கிறது.

பழங்குடி மக்களிடம் இருந்து, பிடுங்கப்பட்டு வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பின், குடிநீர் அற்று, வறண்டு பாலைவனம் போல ஆகிவிட்டது. இது முழுக்க அரசின் தவறுதானே?

இந்த தீவுகளில் இரண்டு மூன்று தீவுகளை எடுத்து, பழங்குடி மீனவ மக்களிடமே குத்தகைக்குக் கொடுங்களேன். இதை ஒரு சவாலாக அரசு செய்ய வேண்டும். அங்கு அவர்கள் பாசி,மீன், சங்குசிப்பி வளர்த்தல், சில அறிய வகை மீன் வகைகளை வளர்தல் போன்றவற்றைச் செய்வார்கள். அரசு துறைகள் கட்டுப்படுத்துவதற்கு மட்டும் தானா? வளர்ச்சியை பெருக்க இல்லையா?

மீன் பிடி ஜெட்டிகள் (சிறிய படகு தளங்கள்) போன்ற வளர்ச்சிக்கான கட்டுமானங்கள், இராமேஸ்வரம் தீவை எப்படி பாதிக்கின்றது?

தீவில் இயற்கைக்கு மாறாக நிறைய தடுப்பு சுவர்களை அமைக்கிறார்கள். இது தீவு என்பதையே மறந்துவிடுகிறார்கள். குறிப்பாக, ஐந்து வருடத்திற்கு முன்னாள் தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதிகளில் உள்ள மீனவர்கள், தங்களுக்குச் சரியான தொழில் இல்லாததால், ஏர்வாடி, பாம்பன், மண்டபம், கோட்டைப்பட்டினம் போன்ற பகுதிகளுக்குப் போக வேண்டியுள்ளது, அதனால் தங்களுடைய பகுதியிலேயே ஒரு ஒருங்கிணைந்த துறைமுகம் கேட்டார்கள்.

“மீண்டும் ஒரு தெர்மாகோல் சாதனை” – மீனவத் தொழிலாளர் சங்கம்

ஆனால், அவர்கள் கட்டிக்கொடுத்தது, கடலுக்குள் துருத்திக்கொண்டு நிற்கும் ஒரு ஜெட்டி. இதனால் கச்சாங்காலத்திலும் (தென்மேற்குப் பருவகாற்று வீசும் காலம்), வாடைக்காற்றிலும் பயனில்லை. இது யாருக்காக அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையை எதிர்த்து கடலுக்குள் ஜெட்டி ஒன்று துருத்திக்கொண்டு நிற்கிறது. அவ்வளவு தான் அதன் பயன்.

இயற்கையை எதிர்த்து கடலுக்குள் ஒரு பொருள் போனால், தீவின் சூழலுக்கு என்ன பிரச்சனை வரும்?

கடலுக்கென்று ஒரு குணம் இருக்கிறது. தன்னை வருத்தி, ஒரு பொருள் உள்ளே வந்தால், அதை உடைக்க முயற்சி செய்யும். ஒரு இடத்தில் கிள்ளி, இன்னொரு இடத்தில் சேர்க்கும். தங்கச்சி மட ஜெட்டி போன்ற இயற்கைக்கு எதிரான கட்டமைப்புகளின் காரணமாக, தங்கச்சி மடம் முதல் பாம்பன் வரையிலான வடகடல் பகுதி பிராந்தியம் முழுவதுமாகக் கடலுக்குள் போய்விடும் நிலைமையில் இருக்கிறது.

இப்போது வாடை காலம் ஆரம்பித்து விட்டது. வட கடல் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சனையை யார் பார்ப்பது. இவர்கள் திட்டங்களை முன்னெடுக்கிறோம் என்று எடுத்து விட்டு போய் விடுகிறார்கள்.

தனுஷ்கோடி தென் கடல் பகுதியில், முகந்தராயர் சத்திரத்தில் இதே போல ஒரு ஜெட்டி துருத்திக்கொண்டு, நிற்கும். அந்த பகுதியில், ‘இது அபாயமான பகுதி. யாரும் நெருங்க வேண்டாம்.’ என்று போர்ட் எழுதிப்போட்டிருக்கிறார்கள். பிறகு அதை யாருக்காக இந்த அரசு கட்டியது.

ஒரு திட்டம் செயலாக்கத்துக்கு வருவது ஒப்பந்ததாரர் மூலம். அவர் லாப குறிக்கோளுடனே வருவார். ஆனால் அதை அந்தத் துறை தான் கண்காணிக்க வேண்டும். அதையும் செய்யாமல், பாரம்பரிய மீனவர்கள் சொல்லும் அனுபவம் வாய்ந்த கருத்தையும் கேட்க மறுக்கிறார்கள். ”அய்யா கச்சாங்காலத்துல இப்டி காத்து அடிக்கும், வாடகாலத்துல இப்டி காத்து இருக்கும்ய்யா’ என்று சொன்னால், ‘போய்யா நா படிச்சுட்டு வந்துருக்கேன்.’ என்று அதிகாரிகள் சொல்வார்கள்.

சமீபத்தில், பலத்த காற்றால், பாம்பன் ரயில் பால பணிகளுக்காகக் கடலில் நிறுத்திவைக்கப்பட்ட கிரேன், பாலத்தில் மோதி விபத்து நேர்ந்ததே?

வாடகாலம் வந்துடுச்சு. மிஷின்கள எல்லாம் கொஞ்சம் அப்புறப்படுத்துங்க. காத்து புறப்படும் காலம் என்று மீனவர்கள் சொன்னால், அதிகாரிகள் யாரும் கேட்கவில்லை. அதனால், பாலத்தில் க்ரேன் போய் சொறுகியது. 10 நாட்களுக்கு மேல், ரயில் போக்குவரத்து இல்லை. இதனால் மக்களுக்கு தான் நட்டம். ஒப்பந்ததாரர் இன்ஸூரன்ஸ் போட்டு, இழப்பீட்டை வாங்கிவிட்டு போய்விடுவார். வரிச்சுமை மக்கள் மீதுதான் விழும்.

இராமேஸ்வரம் தீவில் சமீப காலங்கள் குடிநீர் பிரச்சனை அதிகம் எழுகிறதே. ஏன்?

இந்தத் தீவின் குடிநீர் ஆதாரம் பருவமழையை நம்பிதான் இருக்கிறது. அந்த மழை நீரை, இங்குள்ள மணற்குன்றுகள் தான், வங்கிகளை போல சேகரித்து வைத்திருக்கின்றன. இந்தத் தீவில் உள்ள குடிநீர், இந்தத் தீவிற்குள்ளேயே தான் பயன்படுத்தப்பட வேண்டும். அதைவிடுத்து, இராமேஸ்வரத்தை தாண்டி, பெருநிலப்பரப்பிற்கு கொண்டு சென்று விற்கப்பட்டால், தீவிற்குள் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் எங்கு போவது? அரசாங்கத்தின் இரயில்வே துறையே, பொந்தம்புளி அருகில் இராட்தச குழாய் பதித்து, தண்ணீர் கொள்ளைச் செய்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதனால், மணற்குன்றுகள் இல்லாமல் போய், மற்ற தீவுகளை போல, இராமேஸ்வரம் வறண்ட பாலைவனமாகி விடும். இன்னும் இருபது வருஷத்தில் இராமேஸ்வரம் தீவு இருக்குமா என்று தெரியாது.

இராமேஸ்வரத்தில் நிறைய நீர் ஊற்றுகள், ராமர் தீர்த்தம், சீதா சீர்த்தம், ஜடா தீர்த்தம் போன்ற பெயர்களில் புண்ணிய தீர்த்தங்களாக, மக்களால் பார்க்கப்படுகிறது. அவற்றை முறையாக அரசு பராமரிக்கிறதா?  

தீர்த்தங்களுக்குப் பெயர்கள் வைக்கிறார்கள். சுற்றிக் கோட்டைச் சுவர்கள் எடுக்கிறார்கள். ஆனால், அந்த தீர்த்த தண்ணீர் வெளியேற வடிகால் அமைப்பு வேண்டும் அல்லவா? அது முறையாக இல்லாததனால், பாழடைந்து போய், வறண்டு போய், நாற்றம் அடித்துக்கொண்டிருக்கிறது.

ஜடா தீர்த்தம்

அரசு மனப்பூர்வமாக அந்தத் தீர்த்தங்களை பராமரிக்க வில்லை என்று தானே அர்த்தம். அவற்றை காட்சிப்படுத்த வேண்டும், விளம்பரப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக செய்திருக்கிறார்கள்.

நேர்காணல் : அரவிந்ராஜ் ரமேஷ்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்