Aran Sei

’ஆண்டவருக்கு நன்றி’ கூறிய லோகேஷ் கனகராஜ்

Lokesh Kanagaraj's Next

மாநகரம், கைதி மற்றும் மாஸ்டர் திரைப்படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் கமல் ஹாசனுடன் இணைகிறார்.

2017-ம் ஆண்டில் வெளியான மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிமுகம் ஆனார். அந்த ஆண்டின் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விஜய் அவார்ட்ஸ் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

நடிகர் கார்த்தி நடிப்பில் 2019-ல் வெளிவந்த கைதி திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இரண்டாவது திரைப்படம். நார்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகர், சிறந்த வில்லன் மற்றும் சிறந்த படத்தொகுப்புக்கான விருதுகளை கைதி திரைப்படம் வென்றுள்ளது.

கைதி படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்-ஐ கதாநாயகனாக வைத்து ‘மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கினார். படத்தின் முன்னோட்டம் மார்ச் மாதம் 26-ம் தேதி யூ டியூபில் வெளியிடப்பட்டது.

இந்தாண்டு ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளிவர இருந்த இத்திரைப்படம், கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளாதால் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் கதாநாயனாக நடிக்கும் படத்தை எழுதி இயக்க இருப்பதாக டிவிட்டரில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ளார். திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு ‘ஆண்டவருக்கு நன்றி’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

’எவனென்று நினைத்தாய்’ என்ற பெயரில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். கமல் ஹாசனின் 232-வது திரைப்படமான இது 2021-ல் வெளிவரும் எனவும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்