Aran Sei

ஹரியானாவிலும் “லவ் ஜிகாத்”துக்கு எதிராகச் சட்டம் – தொடரும் வெறுப்பு அரசியல்

credits : tribune india

”லவ் ஜிகாத்”துக்கு எதிராகச் சட்டம் இயற்றும் ஆலோசனையில் இறங்கியுள்ளது ஹரியானா அரசு. இஸ்லாமிய இளைஞர், இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலதுசாரிகள் அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள்.

லவ் ஜிகாத்திற்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்படும் என்று உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவரை தொடர்ந்து ஹரியானா மாநிலமும் சட்டம் இயற்றும் ஆலோசனையில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மத்திய அரசும் லவ் ஜிகாத்திற்கு எதிராகச் சட்டம் இயற்ற திட்டமிட்டருப்பதாக மனோகர் லால் கட்டார் கூறியதாக என்டிடிவி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத் மாவட்டத்தில் நிகிதா எனும் 21 வயது பெண். அவரை வெகுநாட்களாகப் பின் தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டிருந்த ஒரு நபரால் கல்லூரிக்கு வெளியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் “இந்தக் கொலையை லவ் ஜிகாத் என்ற கோணத்தில் பார்க்க வேண்டும்” என்றும் ”லவ் ஜிகாத்தை ஒரு முக்கியப் பிரச்சனையாக மத்திய மாநில அரசுகள் கையிலெடுக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் ‘லவ் ஜிகாத்’துடன் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கருத்து தெரிவித்த அவர், இதனை மத்திய மாநில அரசுகள் தீவிரமாக விசாரித்து வருவதாக” கூறியுள்ளார். “சட்டரீதியாக இந்தப் பிரச்சனையை அணுகுவதன் மூலம்  குற்றவாளி தப்பித்துச் செல்ல முடியாது” என்றும் “நிச்சயம் தண்டிக்கப்படுவார்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹரியானாவின் உள்துறை அமைச்சர் அனில் விஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘லவ் ஜிகாத்’துக்கு எதிராகச் சட்டம் இயற்ற சிந்தனை செய்ய தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் “லவ் ஜிகாத் மூலம் இந்தியாவில் இருக்கும் இந்துக்களை இஸ்லாமியர்களாக மாற்ற முயற்சிகள் நடப்பதாகவும் அதைத் தடுக்க வேண்டும்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

”ஃபரிதாபத்தில் நடந்த விவகாரத்தில், மரணமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் இஸ்லாத்தை தழுவ நிர்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள்” என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது மிகவும் முக்கியமான பிரச்சனை என்று கூறிய அவர் ”இதைச் சட்டம் இயற்றிதான் சரி செய்ய வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டால், அதையும் செய்யத் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார் அனில் விஜ்.

இந்தச் சட்டம் குறித்து கூட்டணிக் கட்சிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

நிகிதாவின் மரணத்திற்கு நீதிக் கேட்டுப் பல சமூக அமைப்புகள் மகாபஞ்சாயத்தை நடத்தினார்கள். மாநில அரசு இந்த வழக்கை விசாரிக்க மூன்று பேரைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு (special investigation team – sit) அமைத்தது. இது வரை காவல்துறை அதிகாரிகள் தவ்ஷீஃப் மற்றும் ரேஹன் என்ற இருவரைக் கைது செய்துள்ளனர். இது மதமாற்றத்திற்காக சில இயக்கங்களின் பின்னணியில் நடக்கப்பட்டதா எனும் கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார் ஹரியானாவின் உள்துறை அமைச்சர்.

அலாகாபாத் உயர்நீதி மன்றத்தின் சமீபத்திய தீர்ப்பில் ”கல்யாணம் செய்ய வேண்டும் என்பதற்காக மதம் மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது”  என்று கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி பேசிய உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், “லவ் ஜிகாத்திற்கு எதிராகச் சட்டம் இயற்றப்படும்” எனக் கூறியுள்ளார். மேலும் ”இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தங்களை மாற்றிக்கொள்ளா விட்டால், அவர்களுக்கு இறுதி ஊர்வலம் நடத்தப்படும்” என்று யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்