தமிழ்நாட்டின் சிறப்பம்சமான 69% இடஒதுக்கீட்டை மாற்றுவதற்கு பல ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வந்தாலும், தமிழ்நாடு அரசு அதை பத்திரமாக பாதுகாத்தே வந்துள்ளது. ஆனால் தற்போது தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக பல்கலைக்கழகங்களே 69% இடஒதுக்கீட்டை காற்றில் பறக்க விட்டுள்ளன. என்ன தான் நடக்கிறது தமிழக பல்கலைக்கழகங்களில்?
GAT-B தேர்வு:
உயிரிதொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு படிப்புகளான பயோடெக்னாலஜி, மெடிக்கல் பயோடெக்னாலஜி, அக்ரிகல்சுரல் (விவசாய) பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டேஷனல் பயாலஜி, கால்நடை அறிவியல் உள்ளிட்ட பட்டமேற்படிப்புகளில் இந்தியாவெங்கும் உள்ள கல்லூரிகளில் மாத உதவித்தொகையுடன் சேர அகில இந்திய நுழைவுத் தேர்வான Graduate Aptitude Test – Biotechnology (GAT-B) என்னும் தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும்.
எம்.டெக் படிப்புகளுக்கு 12 ஆயிரம் ரூபாயும், எம்.எஸ்.சி படிப்புகளுக்கு 5 ஆயிரம் முதல் 7,500 ரூபாயும் மாத உதவித் தொகையாக மாணவர்களுக்கு வழங்கப்படும். கூடுதலாக, படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி நிதியும் மத்திய அரசின் கீழ் உள்ள உயிரிதொழில்நுட்பத் துறை (Dept. of Biotechnology – DBT, under Ministry of Science and Technology, Govt. of India) வழங்கி வருகிறது.
இடஒதுக்கீடு குறித்து GAT-B :
GAT-B தேர்வை நடத்துவது டெல்லி ஃபரிதாபாத்தில் உள்ள Regional center for Biotechnology – RCB. இது மத்திய அரசின் உயிரிதொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனமாகும்.
2020-21 கல்வி ஆண்டுக்கான GAT-B தேர்வு குறித்த அறிவிப்புகளில் தெளிவாக மாணவர் சேர்க்கையை அந்தந்த கல்வி நிறுவனங்கள் தங்கள் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு ஏற்ப நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு குறித்து UGC :
மாநில அரசு பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்பது பல்கலைக்கழக மானியக் குழுவின் தெளிவான உத்தரவு ஆகும்.
தமிழகத்தில் எங்கு சேரலாம்?
தமிழகத்தில் GAT-B நுழைவுத் தேர்வு மூலம் கீழ்கண்ட படிப்புகளில் சேரலாம்.
எண் | கல்வி நிறுவனம் | படிப்பு | இடங்கள் |
1. | அண்ணா பல்கலைக்கழகம், சென்னை | 1. எம்.டெக். – பயொடெக்னாலஜி
2. எம்.டெக். – கம்ப்யூடேஷனல் பயாலஜி |
25
20 |
2. | பாரதியார் பல்கலைக்கழகம், கோவை | எம்.எஸ்.சி – மெடிக்கல் பயோடெக்னாலஜி | 10 |
3. | அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி | எம்.எஸ்.சி – பயோடெக்னாலஜி | 10 |
4. | மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் | எம்.எஸ்.சி – பயோடெக்னாலஜி | 30 |
5. | தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை | எம்.எஸ்.சி – அக்ரிகல்சுரல் பயோடெக்னாலஜி | 30 |
6. | நேஷனல் கல்லூரி, திருச்சி | எம்.எஸ்.சி – பயோடெக்னாலஜி | 10 |
7. | கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரி, திருச்செங்கோடு | எம்.டெக். – பயொடெக்னாலஜி | 10 |
8. | வேல் டெக் ரங்கராஜன் Dr.சகுந்தலா அறிவியல் & தொழில்நுட்பக் கழகம், சென்னை | எம்.டெக். – பயொடெக்னாலஜி | 10 |
அகில இந்திய நுழைவுத் தேர்வை மத்திய அரசு நிறுவனம் நடத்தி தேர்வு முடிவுகளை வெளியிடும். அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களுக்குப் பிடித்த கல்வி நிறுவனங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து, அந்தந்த கல்வி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
தமிழக அரசு பல்கலைக்கழகங்கள் UGC விதிமுறையின்படி 69% இடஒதுக்கீட்டை பின்பற்றியிருக்க வேண்டும். RCB வெளியிட்ட அறிவிப்புகளிலும் 69% இடஒதுக்கீடே வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நடந்தது முற்றிலும் வேறாக உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன?
மத்திய அரசின் இடஒதுக்கீட்டு (49.5%) கொள்கையை மாநில அரசு ஏற்றுக்கொள்ள முடியாதததால், இந்த ஆண்டு எம்.டெக் பயொடெக்னாலஜி மற்றும் எம்.டெக். கம்ப்யூடேஷனல் பயாலஜி படிப்புகளில் உள்ள 45 இடங்களுக்கு மாணவர் சேர்க்கையை கைவிடுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.
- மாநில பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் இடஒதுக்கீட்டு கொள்கையை (69%) கடைபிடிக்க வேண்டும் என UGC விதிமுறை உள்ளபோது, மாநில பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு கொள்கையை (49.5%) கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது யார்?
மற்ற தமிழக பல்கலைக்கழகங்களில் நடந்தது என்ன?
கோவை பாரதியார் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஆகிய நான்கு தமிழக பல்கலைக்கழகங்களும் 69% இடஒதுக்கீட்டை காற்றில் பறக்க விட்டு, மத்திய அரசின் 49.5% இடஒதுக்கீட்டை, மேற்கண்ட படிப்புகளில் நடைமுறைப்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
மேற்கண்ட நான்கு பல்கலைக்கழகங்களும் மத்திய அரசின் நிதியுதவி இல்லாமல் கூடுதலாக சில இடங்களை ஒதுக்கி, அதில் 69% இடஒதுக்கீட்டை பின்பற்றியிருக்கின்றன.
- கூடுதலாக எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டாலும், மாநில அரசின் பல்கலைக்கழகங்களான இவை எக்காரணம் கொண்டும் 69% இடஒதுக்கீட்டு முறைக்கு மாறாக எப்போதும் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்று UGC விதிமுறை உள்ளபோது, இவை 49.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் கொடுத்தது எப்படி?
- 10% உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு (EWS – Economically Weaker Section) தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படாது என்று, தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் கீழ் உள்ள இந்த பல்கலைக்கழகங்கள் 10% EWS முறையை அமல்படுத்தியது எப்படி?
- இந்த பல்கலைக்கழகங்கள் நடத்தியுள்ள மாணவர் சேர்க்கையில், குறிப்பாக 50% இடங்கள் முற்படுத்தப்பட்ட சாதியினருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட மோசடியும் அரங்கேறியுள்ளது.
பொய்யுரை 1 :இந்தப் படிப்புகளுக்கு மத்திய அரசின் DBT நிதியுதவி அளிப்பதால் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டுள்ளது.
விளக்கம் :
நிதி ஒதுக்கும் எந்த அமைப்புக்கும் இடஒதுக்கீட்டு முறை குறித்து உத்தரவு போடும் அதிகாரம் இல்லை. இடஒதுக்கீடு என்பது முழுக்க பல்கலைக்கழக மானியக் குழுவால் வரையறுக்கப்படும் பல்கலைக்கழகம் குறித்தான விதிமுறை ஆகும். எந்த நிதியுதவி தரும் அமைப்பும் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைக்கு எதிராக பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவு போட இயலாது.
பொய்யுரை 2 :
கடந்த ஆண்டு வரை பின்பற்றப்பட்டு வந்த 49.5% இடஒதுக்கீடே இந்த ஆண்டும் பின்பற்றப்பட்டது. இதில் புதிதாக ஒன்றும் மாற்றவில்லை
விளக்கம் :
கடந்த ஆண்டு வரை தேர்வையும் நடத்தி, மாணவர் சேர்க்கையையும் நடத்தியது மத்திய அரசின் நிறுவனம் தான். கடந்த ஆண்டு வரை இந்த தேர்வின் பெயர் CEEB (Combined Entrance Exam for Biotechnology). இதை நடத்தியது டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU). மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகளை பட்டியலிட்டு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பினார்கள். மாணவர்களின் தரவரிசைக்கு ஏற்ப 49.5% இடஒதுக்கீட்டு முறையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், கல்லூரிகளை ஒதுக்கியது.
இந்த ஆண்டு முதல் தேர்வின் பெயரும் GAT-B என மாற்றப்பட்டது. தேர்வு நடத்தும் அமைப்பும் மாற்றப்பட்டது (RCB). மேலும், தேர்வை மட்டும் தாங்கள் நடத்துவதாகவும், மாணவர் சேர்க்கையை அந்தந்த கல்வி நிறுவனங்கள் நடத்திக் கொள்ள வேண்டும் என்று விதிமுறையும் மாற்றப்பட்டது. எனவே, முதல்முறையாக தமிழக பல்கலைக்கழகங்கள் இந்த தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. கடந்த காலங்களில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்பட்ட 49.5% இடஒதுக்கீடும் தவறு என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். யார் கலந்தாய்வு நடத்தினாலும், தமிழக பல்கலைக்கழகங்களில் மாணவர்கள், 69% இடஒதுக்கீட்டு முறையிலேயே நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.
பொய்யுரை 3:
தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்காததால் 69% இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியவில்லை
விளக்கம் :
மொத்தம் 10 இடங்கள் என்று எடுத்துக் கொண்டால், 7 இடங்கள் (69%) போக, மீதம் உள்ள 3 இடங்களுக்கு (31%) மட்டும் தான் வெளிமாநில மாணவர்கள் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். அதை விடுத்து, தமிழக பல்கலைக்கழகங்கள் UGC விதிமுறைகளுக்கு எதிராகவும், தமிழக அரசின் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராகவும் மாணவர் சேர்க்கையை நடத்தியது தவறு.
உணர்த்தும் பாடங்கள்:- INSTITUTE OF EMINENCE (IOE) என்னும் உயர்சிறப்பு அந்தஸ்து நடைமுறைப்படுத்தப்பட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கு, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டிருப்பது ஒரு எடுத்துக்காட்டு ஆகும். IOE அந்தஸ்து கிடைத்தாலும் 69% இடஒதுக்கீட்டிற்கு எந்த பாதிப்பும் வராது என்று உறுதிகொடுத்த துணைவேந்தர் திரு.சூரப்பாவால், ஒரே ஒரு துறையில் உள்ள 45 இடங்களுக்கு கூட 69% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இயலவில்லை என்பதே இந்த விவகாரம் உணர்த்தும் முக்கியப் பாடங்களில் ஒன்று.
- புதிய கல்விக் கொள்கையின் படி பல்கலைக்கழகங்களுக்கு முழு தன்னாட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டால், இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி கொள்கைகள் எவ்வாறு காற்றில் பறக்க விடப்படும் என்பதற்கு, நான்கு தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் நடந்த, 49.5% இடஒதுக்கீடு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆகும். பல்கலைக்கழகங்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்குவது அதன் பொருள் என்பதும் வெளிப்பட்டுள்ளது.
- பல்கலைக்கழக மானியக் குழுவை கலைப்பது என்பது சமூக நீதிக் கொள்கைக்கு எதிராக அமையும் என்பதும் இந்த இடஒதுக்கீடு மோசடிகளின் மூலம் வெளிப்படுகிறது.
மாணவர்களின் கோரிக்கை :- அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். பயொடெக்னாலஜி மற்றும் எம்.டெக். கம்ப்யூடேஷனல் பயாலஜி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை கைவிடும் முடிவை உடனே கைவிட்டு, இந்த ஆண்டே 69% இடஒதுக்கீடு முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.
- கோவை பாரதியார் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகங்கள் செய்துள்ள 49.5% இடஒதுக்கீட்டிலான மாணவர் சேர்க்கை உடனடியாக ரத்து செய்யப்பட்டு, 69% இடஒதுக்கீடு அடிப்படையிலான மாணவர் சேர்க்கை உடனே நடத்தப்பட வேண்டும்
- UGC விதிமுறையை மீறி மாணவர் சேர்க்கையை நிறுத்தியவர்கள் மீதும், 49.5% இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை நடத்தியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
(கட்டுரையாளர் தமிழ் நாசர் முதுநிலை மாணவர்)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.