Aran Sei

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு – ஆளுநருக்கு வைகோ கடிதம்

ரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநருக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த மார்ச் 21-ம் தேதி, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு உள் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தி அதன் அடிப்படையில் அறிக்கை தயார் செய்து முதல்வரிடம் சமர்ப்பித்தது.

இதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 15-ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி , அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய முதல்வர், “தமிழ்நாட்டில் 7,968 மேல்நிலைப் பள்ளிகளில், 3,054 பள்ளிகள், தமிழ்நாடு அரசின் சார்பில், நடத்தப்பட்டு வருகின்றன. இது 38.32 சதவீதமாகும். தமிழ்நாட்டில் பிளஸ் 2 பயிலும் 8 லட்சத்து 41 ஆயிரத்து 251 மாணவர்களில், 3 லட்சத்து 44 ஆயிரத்து 485 மாணவர்கள் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். இது 41 சதவீதமாகும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5,550 மொத்த மருத்துவ இடங்களில், மாநில அரசின் ஒதுக்கீடாக 4,043 இடங்கள் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களில் 0.15 சதவீதம் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் கிடைக்கின்றன.” என்று அரசு பள்ளிகள் தொடர்பான புள்ளி விவரங்களை அடுக்கினார். சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேட்ட பின்னர் இது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

தற்போதுள்ள மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களில், இந்த 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதால், சுமார் 300-க்கு மேற்பட்ட இடங்கள் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவம் படித்து டாக்டர் ஆவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

ஆளுநருக்குக் கடிதம்

இதுகுறித்து இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், மதிமுக கட்சியின் தலைவருமான வைகோ, தமிழக ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியுள்ளார்.

தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு அரசு பள்ளி மாணாக்கர்கள், அதாவது ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உட்பட நகராட்சி, மாநகராட்சி, ஆதி திராவிடர் நலன், பழங்குடியினர் நலன், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, கள்ளர் சீர்மரபினர், மாற்றுத் திறனாளிகள் நலன், வனம், சமூகப் பாதுகாப்பு (சிறார் சீர்திருத்தப் பள்ளிகள்) ஆகிய துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் மற்றும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009-ன் கீழ் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயின்று, பின்னர் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவப் பட்டப் படிப்பு சேர்க்கையின்போது மாநில ஒதுக்கீட்டில் 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கவும், மேற்படி இடஒதுக்கீட்டு முறையினை நீட் தகுதியின் அடிப்படையில் உள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் விரிவாக்கம் செய்யவேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மேற்படி இடஒதுக்கீட்டு முறையினை அனைத்து மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி உள்ளடக்கிய அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் சுயநிதிக் கல்லூரிகளுக்கும் அரசால் ஒதுக்கப்பட்ட அனைத்துப் பிரிவு இடங்களுக்கும் இச்சட்ட முன்வடிவில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 8,41,251 மாணவர்களில் சுமார் 41 விழுக்காடு மாணவர்கள் அரசுப் பள்ளிகளில்தான் பயில்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இருக்கும் 5,550 மொத்த மருத்துவ இடங்களில், மாநில அரசின் ஒதுக்கீடாக 4,043 இடங்கள் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களில் 0.15 விழுக்காடு மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் பட்டப் படிப்பில் சேர இடம் கிடைக்கிறது. இது சமூக சமநீதி கோட்பாட்டிற்கு எதிரானது என்று சுட்டிக்காட்டுகிறார்.

”இதனைக் கவனத்தில் கொண்டு காலம் தாழ்த்தாமல், உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றி உள்ள சட்ட முன்வடிவுக்குத் தமிழக ஆளுநராகிய தாங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதாக எழுதியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்