Aran Sei

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி – தியேட்டர்களும் திறக்கப்படுகின்றன

Credits The Hindu

நவம்பர் 16-ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்தாண்டு மார்ச் 25-ம் தேதி முதல் அரசு ஊரடங்கு அறிவித்தது. ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது.

இது குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் நவம்பர் 16-ம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல, பள்ளி மற்றும் கல்லூரிகளின் விடுதிகளுக்கும் நவம்பர் 16-ம் தேதி தொடங்கி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவை தற்போது அரசு பணியாளர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் சேவைக்கும் ரயில்கள் இயக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 10-ம் தேதி முதல் அனைத்து திரையரங்குகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

100 நபர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் மதம், அரசியல், சமுதாயம், பொழுதுபோக்கு தொடர்பான கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், உயிரியல் பூங்காக்கள் நவம்பர் 10-ம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

கடற்கரை, நீச்சல் குளங்கள், சுற்றுலா தளங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள தடை உத்தரவு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் மற்றும் ஊட்டி, கொடைக்கானல். ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களுக்கு செல்வதற்கு, நடைமுறையில் உள்ள இ-பதிவு முறை தொடரும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் நடத்தியுள்ள பல்வேறு ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் கருத்துக்கள் அடிப்படையிலும் இந்தத் தளர்வுகள் அறிவிக்கப்படுவதாக முதல்வர் அறிக்கையில் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்