தமிழ்நாட்டில் அரசியல் அமைப்புச் சட்ட சீர்குலைவுக்கு வழிகோலும் ஆளுநரை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனக் குடியரசுத் தலைவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 15-ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட பின்னர் இது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் அதற்கு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்த விவகாரம் குறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ’தமிழக ஆளுநரைத் திரும்பப் பெறுக.’ என்ற தலைப்பில், குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் தமிழக ஆளுநர் செயல் தமிழக அரசுக்குத் தடை போடுவது மட்டுமின்றி, அரசியல் அமைப்பில் சட்டச் சிக்கலை ஏற்படுத்தி, ஜனநாயகத்துக்குப் பெறும் அச்சுறுத்தலாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
#TakeBack: மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5%இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஒப்புதல்அளிக்காமல் மேதகு ஆளுநர் உள்நோக்கத்துடன் காலம் கடத்துகிறார்.
எனவே, அவரைத் மீள அழைக்க கோரி குடியரசுத் தலைவருக்கு மடல் அனுப்பப் பட.டுள்ளது. @rashtrapatibhvn @CMOTamilNadu #vck pic.twitter.com/NZUO7U57A8— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 22, 2020
கடிதத்தில் ஆளுநரின் செயற்பாடுகளைப் பற்றிக் கூறும் போது, “அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண்- 155’இன் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் தாங்கள் ஆளுநரை நியமிக்கிறீர்கள். அரசியலமைப்புச் சட்ட உறுப்பு எண்-163, ஆளுநரானவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைப் படி செயல்பட வேண்டும் என்று தெளிவாக வரையறுத்துள்ளது. ஆனால், தற்போதுள்ள தமிழக ஆளுநர் மேதகு பன்வாரிலால் புரோஹித் அவர்கள், இந்த அரசியலமைப்புச் சட்டக் கடமையை நிறைவேற்றாமல் இருப்பது மட்டுமின்றி மாநில அரசின் செயல்பாடுகளுக்குப்
பல்வேறு தடைகளையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மாநில அரசின் அதிகாரம்
இட ஒதுக்கீடு சட்டங்களில் மாநில அரசுகளின் அதிகாரம் பற்றிக் கடிதத்தில் குறிப்பிடும் போது, ”இந்திய உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 2020 இல் வழங்கிய தீர்ப்பிலும், சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 2020இல் வழங்கிய தீர்ப்பிலும் “இட ஒதுக்கீட்டுக்கு உள்ளே உள் ஒதுக்கீடு செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது” என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, தற்போது தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாகும். ஆனால், தமிழக ஆளுநர் அந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் தேவையற்ற கால தாமதத்தைச் செய்து கொண்டிருக்கிறார்.” என்று ஆளுநரின் தாமதத்தை விமர்சனத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
மருத்துவக் கலந்தாய்வு
நீட் தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியாகி, மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்குக் காத்திருக்கிறார்கள். மாநில அரசும் அதற்கான கலந்தாய்வு செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டது.
இந்நிலையில், ஆளுநரின் முரண்பட்ட அணுகுமுறை மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை நடவடிக்கை அனைத்தையும் சீர்குலைத்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.
மேலும், “தமிழக ஆளுநர் தமிழக அரசுக்குத் தடை போடுவது மட்டுமின்றி, அரசியல் அமைப்புச் சட்டச் சிக்கலையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். இது ஜனநாயகத்துக்குப் பெறும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது.” என்று ஆளுநரின் செயலைப் பற்றிச் சுட்டிக்காட்டுகிறார்.
இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, தமிழக ஆளுநரை உடனடியாகத் திரும்பப் பெற்று அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்குமாறு, குடியரசு தலைவரிடம் வேண்டிக் கேட்டுக்கொள்வதாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.