Aran Sei

`பேட்டி கொடுப்பதைவிட மத்திய அரசுக்குக் கடிதத்தில் வலியுறுத்த வேண்டும்’: மு.க ஸ்டாலின்

Credits New Indian Express

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை எனத் தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். மாணவர் நலனைப் பாதிக்கும் வகையிலான உயர் சிறப்புத் தகுதி அண்ணா பல்கலைக்கழகத்திற்குத் தேவையில்லை எனக் கூறியுள்ளார்.

”அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் உயர் சிறப்புத் தகுதி, தமிழக மாணவர்களுக்கான 69% இட ஒதுக்கீட்டைப் பாதிக்கும் நிலை உள்ளது. தமிழக மாணவர்களின் நலனைப் பாதிக்கும் வகையிலான உயர் சிறப்புத் தகுதியைத் தமிழக அரசு அனுமதிக்காது.”

”நுழைவுத் தேர்வு முறை, கட்டண உயர்வு போன்றவற்றையும் தமிழக அரசு ஏற்காது.” என்று அமைச்சர் அன்பழகன் திட்டவட்டமாக மறுத்துக் கூறியுள்ளார்.

”ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழகம் உலகத் தரத்திலான கல்வியை வழங்கி வருகிறது. இது தவிர, தரத்தை மேலும் மேம்படுத்த வேண்டும் என்ற சூழலுக்கு ஏற்ப தமிழக அரசே கூடுதல் நிதி வழங்கி நிர்வகிக்கும்.” எனவும் தெரிவித்துள்ளார்.

”அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்புத் தகுதி தொடர்பாக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு தன்னிச்சையாக எழுதியுள்ள கடிதம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் தொடர் நடவடிக்கை அமையும்.” என்று அமைச்சர் அன்பழகன் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, புதிய கல்விக் கொள்கையில் 2035-ம் ஆண்டுதான் உயர்கல்வி பயின்றவர்களின் சதவீதம் 50% இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் கடந்த ஆண்டே 49% எட்டியுள்ளது என்றும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின் ஃபேஸ்புக் பக்கத்தில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு காலதாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://www.facebook.com/MKStalin/posts/1773326646160531

 

“அமைச்சர் இப்படிப் பேட்டி கொடுப்பதைவிட – தமிழக அரசின் இந்த முடிவினை உடனடியாக மத்திய அரசுக்குக் கடிதம் வாயிலாக, வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசின் கொள்கை முடிவில் தலையிட்டுத் தன்னிச்சையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிய அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவைப் பணி நீக்கம் செய்ய வேண்டி முதலமைச்சர் பழனிசாமி ஆளுநரிடம் பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்