Aran Sei

சட்டப் படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை – டி.ஆர்.பாலு கடிதம்

Image Credits: Deccan Herald

தேசிய சட்டப்பல்கலைக் கழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் 2020 – 21 மாணவர் சேர்க்கையில், இளங்கலை மற்றும் முதுகலையில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோருக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

மத்திய கல்வி நிலையங்கள் சட்டம் 2006 மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில், மாணவர் சேர்க்கை மற்றும் வேலை வாய்ப்பில் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதை டி.ஆர்.பாலு கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், துணை வேந்தருக்கு இதுகுறித்து தெரிவிக்கப்பட்டும் இடஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

உதாரணத்திற்கு, பெங்களுருவில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப்படிப்பில் 120 இடங்கள் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள டி.ஆர்.பாலு அதில் 93 இடங்கள் பொதுப்பட்டியலுக்கும், 18 இடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கும், 9 இடங்கள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு இடம் கூட இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்படவில்லை என்றும் கடிதத்தில் டி.ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், தமிழ்நாட்டில் திருச்சியில் செயல்படும் தேசிய சட்டப்பல்கலைக்கழம் உட்பட 13 பல்கலைக்கழகங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பின்பற்றாத தேசிய சட்டப்பல் கலைக்கழகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு உத்தரவிட்டதை டி.ஆர்.பாலு கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இடஒதுக்கீட்டைப் பின்பற்றாததால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், நாட்டின் மதிப்பு மிகு சட்டப் பல்கலைக்கழகங்களில் நுழைய முடியா நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஆகவே, 27% இடஒதுக்கீட்டைப் பின்பற்றும்படி பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் டி.ஆர்.பாலு கேட்டுக்கொண்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்