Aran Sei

‘முதல்வர் வேட்பாளராக சூரப்பாவும் போட்டியிடுகிறாரோ?’: உதயநிதி

Credits kalaignar seithigal

ண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே தொடர வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்த 2017-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த உயர் கல்வி சிறப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகமும் தேர்வாகி இருந்தது. மேம்பாட்டுக்கான நிதி உதவியை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே தொடரும் என்று தமிழக அரசு சிறப்பு அந்தஸ்தை ஏற்க மறுப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கோரி துணை வேந்தர் சூரப்பா உயர்கல்வித்துறைச் செயலாளர் அமித் கரேவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

5 ஆண்டுகளில் ரூ.1500 கோடி நிதியைப் பல்கலைக்கழகமே திரட்டிக்கொள்ள முடியும் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் உயர்கல்வித்துறை மாநில அரசின் ஒப்புதலைக் கோரியுள்ளது.

தமிழக அரசு இதற்கு இன்னும் பதிலளிக்காத நிலையில், பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து பெறுவது தொடர்பாக திமுக உட்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.

”69% இடஒதுக்கீடு குறித்து எந்த உத்தரவாதமுமில்லாத போதும் உயர் சிறப்பு அந்தஸ்து கோரி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறார்! இதற்கு ரகசிய அனுமதி அளிக்கத்தான் ஆளுநரைச் சந்தித்தாரா தமிழக முதல்வர்? காவி பூச, துணைவேந்தரோடு ரகசியக் கூட்டணியா? திமுக போராடும்!” என்று திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதையடுத்து சென்னை, கோவை, தருமபுரி ஆகிய இடங்களில் திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “மத்திய அரசு நமது கல்வியை முடக்கப் பார்க்கிறது. தமிழகத்தில் இருந்து உருவாகிய மருத்துவர்களை நீட் தேர்வு கொண்டுவந்து முடக்கியது போலவே, பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களைத் தடுப்பதற்காக மட்டுமே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.

”முதல்வர் வேட்பாளருக்கான போட்டியில் சூரப்பாவும் இருப்பார் போல. துணை முதலமைச்சர் போல தன்னிச்சையாகக் கடிதம் எழுதுவதும், ரூ.1500 கோடி எங்களால் நிதி திரட்டிக்கொள்ள முடியும் என்று சூரப்பா கூறுவதும் மிகவும் கண்டனத்துக்கு உரியது. மாநில அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதாக சூரப்பா கூறுவதை அமைச்சர் மறுக்கிறார்.”

”இது அதிமுக-வின் இரட்டை வேடம். கட்சியை பாஜகவிடம் அடகு வைத்தது போல அறிஞர் அண்ணா பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தையும் அடகு வைக்கிறார்கள்.” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து மாணவர்களை ஏமாற்றுவதற்காக நடத்தும் நாடகம் இது என்றும் உதயநிதி கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்