Aran Sei

நீட் முதுகலைத் தேர்வுகள்: ‘11600 தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திற்குள்ளேயே மையங்கள்’ – சு. வெங்கடேசன் கோரிக்கை ஏற்பு

நீட் முதுகலைத் தேர்வுகளுக்கான தமிழ்நாடு, புதுச்சேரி மையங்கள் இணையவழி விண்ணப்பங்களுக்கான நேரம் துவங்கி 4 மணி நேரத்திற்குள்ளாகவே நிரம்பிவிட்டதை சுட்டிக் காட்டி, தேர்வர்கள் அனைவருக்கும் தமிழகம், புதுச்சேரியிலேயே மையங்கள் அமைக்கப்பட வேண்டுமென பிப்ரவரி 24 அன்று கடிதம் வழியாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியிருந்தார்.

அக்கோரிக்கையை தேசிய தேர்வுக் கழகம்  ஏற்றுக் கொண்டுள்ளதாக தற்போது பதில் அளித்துள்ளது.

தேசிய தேர்வுக் கழக நிர்வாக இயக்குனர் பேரா. பவானிந்திரா லால்  மார்ச் 3 அன்று அளித்த முதல் பதிலில், அஞ்சல் முகவரி உள்ள மாநிலத்தில் மையத்தை ஒதுக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுமென்றும், அது முடியாத பட்சத்தில் அருகில் உள்ள மாநிலங்களின் மையங்கள் ஒதுக்கப்படுமென்றும் தெரிவித்திருந்தார்.

தமிழக மருத்துவத் துறையை சீர்குலைக்கும் நீட் தேர்வு – சி.நவநீத கண்ணன்

கட்டமைப்பு, நிர்வாக வசதிகளைக் காரணம் காட்டிய அவர், கொரோனா சூழலில் தனி மனித விலகலுக்காக அடுத்த இருக்கைகளைக் காலியாக விட்டு விட்டுத் தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் இருப்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார்.

அதன் மீது மார்ச் 8 ஆம் தேதி மீண்டும் கடிதம் எழுதிய சு. வெங்கடேசன், கொரோனா சூழலுக்கு தனி மனித விலகல் அவசியம். ஆகவே மையங்களில் இட நெருக்கடி என்று கூறி கோவிட் சூழலில் தேர்வர்களை வெளி மாநிலங்களுக்கு பயணிக்கச் செய்வது முரணான அணுகுமுறையென்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு – மாணவர்கள் அலைக்கழிப்பு

அதைத் தொடர்ந்து, மார்ச் 19 ஆம் தேதி தேசிய தேர்வுக் கழகத்தின் கடிதத்தில்,  “8131 தமிழக தேர்வர்களுக்கும், 63 புதுச்சேரி தேர்வர்களுக்கும் ஏற்கனவே சம்பந்தப்பட்ட மாநிலத்திற்குள்ளேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு விட்டன. மொத்தம் 11013 தேர்வர்களுக்கு தமிழகத்திலும், 603 தேர்வர்களுக்கு புதுச்சேரியிலும் அஞ்சல் முகவரிகள் உள்ளன. அவர்கள் இணையவழி பதிவின் போது தமிழக, புதுச்சேரி மையங்கள் கிடைக்காமல் மற்ற மையங்களுக்கு பதிவு செய்திருந்தனர்.  அவர்கள் அனைவருக்குமே தமிழக, புதுச்சேரி மையங்கள் கிடைக்க தேசிய தேர்வுக் கழகம் எல்லா முயற்சிகளையும் மேற் கொள்ளும்.” என்று உறுதியளித்துள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்