Aran Sei

‘இராம்கோபால் குழுவின் அறிக்கையை நிராகரித்து ஐஐடிகளில் இடஒதுக்கீட்டை உறுதிசெய்க’ – சு.வெங்கடேசன் எம்பி வலிறுத்தல்

ஐடிகளில் உள்ள இட ஒதுக்கீட்டில் ஓ. பி.சி , எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான சட்ட ரீதியிலான உரிமைகள் ஆசிரியர் நியமனம், மாணவர் அனுமதி இரண்டிலுமே கைவசமாக வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (ஆகஸ்ட் 6), சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐஐடி இட ஒதுக்கீடு மீறல்கள் குறித்த பிரச்சினைகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இட ஒதுக்கீட்டின் முறையான அமலாக்கம் பற்றி பரிசீலிப்பதற்காக டெல்லி ஐஐடி இயக்குனர் இராம் கோபால ராவ் தலைமையில் போடப்பட்ட நிபுணர் குழு ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை ஒழித்து விடலாம்; முனைவர் பட்ட அனுமதியில் கட்டாயமானதாக இருக்க வேண்டியதில்லை; மாணவர் அனுமதியில் நன்றாகவே அமலாகிறது என்ற வகையில் அறிக்கையை தந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.” என்று தெரிவித்துள்ளார்.

“இப்பிரச்னை குறித்து தொடர்ந்து கடிதங்களையும், நாடாளுமன்ற கேள்விகளையும் எழுப்பி வருகிறேன். மார்ச் 8, 2021 ல் நான் ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்து எழுதிய கடிதத்தில் இராம் கோபால் ராவ் குழு தனக்கு இட்ட பணியை செய்யாமல் வரம்பு மீறி எதிர் மாறான வேலையை செய்திருக்கிறது. ஆகவே உடனடியாக அந்த அறிக்கையை நிராகரித்து இட ஒதுக்கீட்டு அமலாக்கத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி இருந்தேன். அந்த நிபுணர் குழு அறிக்கையை ஐஐடி நிலைக் குழு பரிசீலிப்பதாக முதலில் பதில் வந்தது. ஐஐடி நிலைக் குழுவும் தனது எல்லைகளை மீறிவிடக் கூடாது என்று அறிவுறுத்துமாறு வலியுறுத்தி இருந்தேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அதற்கான 02.08.2021 தேதியிட்ட பதில் கடிதம் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இடம் இருந்து வந்துள்ளது. ஐஐடி நிலைக் குழுவிற்கு எனது கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனவும் அக்கடிதத்தில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை கவனத்தில் எடுத்திருப்பதாகவும், நிலைக் குழுவும் தனது பரிந்துரைகளை இறுதி செய்து அனுப்பும் போது இக்கருத்துக்களை கணக்கில் கொள்ளுமென்றும் தெரிவித்துள்ளார்.” என்று பதில் கடிதம் குறித்து சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

மேலும், “சட்டம் ஏற்கெனவே உள்ளது. அதன் அமலாக்கம் மட்டுமே பரிசீலிக்கப்பட வேண்டும். இந்த கல்வியாண்டும் கடந்து போய் விடக் கூடாது. சமூக நீதி உறுதி செய்யப்பட வேண்டும். ஓ. பி.சி , எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான சட்ட ரீதியிலான உரிமைகள் கைவசமாக வேண்டும். ஆசிரியர் நியமனம், மாணவர் அனுமதி இரண்டிலுமே.” என்று அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய பதிவுகள் :

ஐஐடி இட ஒதுக்கீடு: ‘சமூக நீதிக்கு எதிரான ஆய்வுக்குழுவை உடனே நிராகரியுங்கள்’- மத்திய அரசிடம் சு. வெங்கடேசன் கோரிக்கை

ஐஐடி-களில் அநியாயமாக மறுக்கப்படும் இட ஒதுக்கீடு –  ஆர்டிஐ மூலம் கிடைத்த அதிர்ச்சி தகவல்

ஐஐடி களில் இடஒதுக்கீடு ரத்து : அறிக்கையைக் குப்பையில் எறியுங்கள் – சு. வெங்கடேசன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்