Aran Sei

மருத்துவக் கலந்தாய்வு, முறைகேடுகளின் புகலிடம் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Credits The New Indian Express

கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள சூழலில் நேரடி மருத்துவக் கலந்தாய்வு நடத்துவது ஆபத்தானது என்று திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மாணவர்களின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% முன்னுரிமை இடஒதுக்கீடு உட்பட மொத்த மருத்துவ மாணவர் சேர்க்கையும் இணையவழி கலந்தாய்வு மூலமே நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

“நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை இந்தக் கொரோனா காலத்தில், நேரடி கவுன்சிலிங் நடத்திடத் திட்டமிட்டது ஆபத்தானது” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

“திமுகவின் தொடர் போராட்டத்தினால், நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 7.5 விழுக்காடு முன்னுரிமை இட ஒதுக்கீடு கிடைத்துள்ளதென்றும் அதற்கான மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு, ‘நேரடி கவுன்சிலிங்’ என்பது, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்குப் பலவகை இன்னல்களை ஏற்படுத்தும்” என்று அவர் கூறியுள்ளார்

மேலும், “மருத்துவக் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் கொரோனா சோதனை நடத்துவதும், கூட்டத்தைக் குறைக்கும் வகையில் நீண்ட நாட்கள் கலந்தாய்வினை நடத்துவதும், நடைமுறை சாத்தியமா என்பதை அரசு அதிகாரிகளோ- அமைச்சர் விஜயபாஸ்கரோ – ஏன் முதல்வரோகூட சிந்தித்துப் பார்ப்பதாகத் தெரியவில்லை” என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்பிபிஎஸ் இடங்களும், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பல் மருததுவத்திற்கான இடங்களும் உள்ளன.

தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 852 எம்பிபிஎஸ் இடங்களும், 690 பிடிஎஸ் இடங்களும் உள்ளன.

“கடந்த ஆண்டு மருத்துவ கலந்தாய்வு என்பது, ‘முறைகேடுகளின் சொர்க்கமாக’ அமைந்திருந்ததைச் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நினைவுபடுத்த விரும்புவதாகவும்ஆந்திரா, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த 218 மாணவர்கள், தமிழக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றதாகப் புகார் எழுந்தது. நீட் தேர்வில் 18 பேர் ஆள் மாறாட்டம் செய்ததாக, சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்தது. ஆனால், அவர்களில் பலரை ஆதார் முகவரியை வைத்துக்கூட சிபிசிஐடி போலீஸாரால் இதுவரை கைது செய்ய முடியவில்லை” என்று ஸ்டாலின் தனத அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

“கடந்த ஆண்டு நடந்ததைப் போல், எவ்வித முறைகேடுகளின் அணிவகுப்பினையும் நடத்தி விடாமல் – வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையுடனும், மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் எவ்விதச் சந்தேகமும் ஏற்பட்டுவிடாமல் மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்