Aran Sei

’பள்ளிகள் திறப்பில் அவ்வளவு அவசரம் ஏன்?’-ஸ்டாலின் கேள்வி

கொரோனா தொற்றுக் காலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பில் தமிழக அரசின் அவசரக்கோலமான அறிவிப்பு ஏன் ?  என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க நாடு முழுவதும், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.

இப்போது ஊரடங்கில் படிப்படியான தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. இந்நிலையில், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், நவம்பர் 16 ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதேபோல, அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் நவம்பர் 16 முதல் வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திமுக-வின் தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாணவர்களின் பாதுகாப்பு, விடுதி, உணவு போன்றவைக் குறித்துக் குழப்பங்கள் நிலவுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

”தொடக்கப் பள்ளிகளை விட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அதிக பாதிப்பு, ஆசிரியர்களுக்குள் கொரோனா பரவல் அதிகம் போன்ற ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய அறிவிப்புகளில் எடப்பாடி அதிமுக அரசின் நிர்வாகக் குழப்பம் தலை தூக்கி நிற்கிறது என்றும், தனது தொடர் தோல்விகளுக்கு ’மக்கள் ஒத்துழைக்கவில்லை’ என்று பழி சுமத்துவது முதலமைச்சருக்குக் கைவந்த கலை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், “வட-கிழக்குப் பருவ மழை-தட்ப வெப்ப மாறுபாடுகள், பருவ கால நோய்கள் எல்லாம் கொரோனா தொற்றுடன் சேர்ந்துகொண்டு மாணவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தினை விளைவிக்கக் கூடும்.” என்று எச்சரித்துள்ளார்.

இறுதியாக, “பொங்கல் விடுமுறை முடிந்து 2021 ஜனவரி இறுதியில் அப்போதிருக்கும் சூழ்நிலைகளை ஆய்வு செய்து பள்ளிகளைத் திறக்கலாம்.” என்று யோசனை தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்புக் குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் பற்றி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் பேச அரண்செய் , அவரைத் தொலைப்பேசியில் அழைத்தது. அழைப்பை எடுத்த அமைச்சரின் உதவியாளர், “அமைச்சர் நாளை இதுகுறித்து பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கவுள்ளார். அப்போது இதை பற்றி விளக்கங்கள் கொடுப்பார்.” என்று கூறினார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்