Aran Sei

`ஆளுநருக்குப் பேனா அனுப்பும் போராட்டம் ‘ – இந்திய மாணவர் சங்கம்

ரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்திற்குத் தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம்  நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கடந்த மார்ச் 21-ம் தேதி குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு உள் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாகக் கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தி அதன் அடிப்படையில் அறிக்கை தயார் செய்து முதல்வரிடம் சமர்ப்பித்தது.

இதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 15-ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி , அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

ஆனால் ஆளுநர் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததால் சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு தமிழ்நாடு அரசின் 5 அமைச்சர்கள் ஆளுநரைச் சந்தித்தனர். அமைச்சர்களின் சந்திப்பிற்குப் பின்பும் கால தாமதம் ஏற்பட்டு வந்தது.

மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு – ஆளுநரின் தாமதத்தால் நிகழவிருக்கும் ஆபத்து

இந்நிலையில், விரைந்து ஒப்புதல் அளிக்கக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்குக் கடிதம் எழுதினார். அதற்குப் பதிலளித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இதுகுறித்து முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்கள் அவகாசம் தேவை என்றும், தன்னைச் சந்தித்த அமைச்சர்களிடமும் இதையேதான் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து, திமுகவிற்கும் அதிமுகவிற்குமான அறிக்கைப் போர் நடைபெற்று வந்தது. சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் ஆளுநரைக் கண்டித்து ஆளுநர் மாளிகையின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது திமுக.

`நீட் மற்றும் 7.5 % இட ஒதுக்கீட்டில் அடிமை அரசின் நாடகங்கள்’ – விளக்கும் ஸ்டாலின்

இந்தச் சட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் அளிக்குமாறு தமிழகத்தில் இருக்கும் ஏறக்குறைய அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்திற்குத் தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறித்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் செய்து வருகிறது.

சென்னையில் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை தாங்க, ஆளுநர் மாளிகை அருகே (சின்னமலை ராஜிவ்காந்தி சிலை) சென்னை மாவட்டக் குழுக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய மாநில அரசுகளையும், ஒப்புதல் தராமல் தாமதமாக்கி வரும் ஆளுநரையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து, மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணனிடம் அரண்செய் பேசிய போது, “வேண்டும் என்றே தாமதித்து வரும் ஆளுநரைக் கண்டித்து அடுத்த கட்டமாக, எல்லா மாவட்ட குழுவில் இருந்தும் ஆளுநருக்குப் பேனா அனுப்பும் போராட்டத்தைச் செய்ய முடிவு எடுத்துள்ளோம். அவர் கையெழுத்து இடும் வரை, தொடர்ந்து போராட்டங்கள் செய்ய உள்ளோம்.” எனத் தெரிவித்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்