Aran Sei

ரமலான் பண்டிகையில் சி.பி.எஸ்.இ தேர்வு : தேதி மாற்ற பரிசீலிப்பதாக சு. வெங்கடேசனுக்கு கல்வி அமைச்சர் பதில்

மலான் பண்டிகையன்று சி.பி.எஸ்.இ தேர்வுகள் நடந்தேறுகிற சூழல் இருப்பதைச் சுட்டிக் காட்டி தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வி அமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். அக்கோரிக்கை பரிசீலிக்கப்படுமென்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் பதில் அளித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் முக்கியமான திருநாளான ரமலானுக்கு, தமிழக அரசும், மத்திய அரசும் இவ்வாண்டு மே 14 ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளன.

ரமலான் திருநாள், பிறை தென்படுவதைப் பொறுத்து மாறுமென்பதால் ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று சுட்டிக்காட்டி, “இதை கணக்கிற் கொள்ளாமல் சி.பி.எஸ். இ 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை மே 13 மற்றும் மே 15 தேதிகளில் அறிவித்துள்ளது. இந்தத் தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகளை வேறு தேதிகளுக்கு மாற்ற வேண்டும்.” என்று சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்து, பிப்ரவரி 8 ஆம் தேதி  மத்தியக் கல்வி அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

ரமலான் திருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வுகளா? – தேதியை மாற்ற வேண்டும் என சு.வெங்கடேசன் கோரிக்கை

இதற்கு, பிப்ரவரி 23 ஆம் தேதியிட்ட கடிதத்தின் வழியாக மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அளித்துள்ள பதிலில்,  “சி.பி.எஸ்.இ தேர்வுத் தேதிகளை மாற்றுவது குறித்த உங்கள் பிப்ரவரி 8 ஆம் தேதியிட்ட கடிதம் கிடைத்தது. அதன் மீது பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இக்கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில், சு.வெங்கடேசன் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து, இன்று (மார்ச் 5) கருத்து தெரிவித்துள்ள சு.வெங்கடேசன், “எனது கோரிக்கை பரிசீலிக்கப்படுவது மகிழ்ச்சி. நல்ல முடிவு விரைவில் வருமென்று நம்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்