Aran Sei

“இடஒதுக்கீட்டுக்காக வரலாறு காணாத போராட்டம்” – ராமதாஸ் அறிவிப்பு

வன்னியர் சமுதாய மக்களின் தனி இட ஒதுக்கீட்டுக்காக நடத்தவிருக்கும் போராட்டம் வரலாறு காணாத வகையில் அமையும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

கடந்த 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், வன்னியர் சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில்  உள் ஒதுக்கீடு கோரி, அச்சமுதாய மக்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் சமுதாய மக்களுக்கு 20 சதவீதமும், மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடங்கப்பட்ட போராட்டம் வட தமிழகம் முழுதும் பரவியது.

சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டு, மறியல்கள் செய்தனர். ஒரு வாரத்திற்கு மேல் நடந்த போராட்டத்தில், காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் பலியாகினர்.

ராமதாஸ் தனது முகநூல் பதிவில் இணைத்துள்ள போராட்ட படம்.

வன்னியர் சமுதாய மக்களுக்கான இடஒதுக்கீடு குறித்து,  இன்று ராமதாஸ் தனது  முகநூல் பக்கத்தில் ‘பாட்டாளி இளைஞர்களே, தனி இடஒதுக்கீட்டுப்
போராட்டத்திற்கு இப்போதே தயாராகுங்கள்’ என்ற தலைப்பில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது நமது 40 ஆண்டு கால கோரிக்கை ஆகும். இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்; எண்ணற்ற தியாகங்களை செய்து இருக்கிறோம்; 21 இன்னுயிர்களை இழந்திருக்கிறோம்.

ஆனால், தமிழ்நாட்டை கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்களும், இப்போது ஆட்சி செய்பவர்களும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. மீண்டும் ஒரு போராட்டம் நடத்தித் தான் நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்றால் அதற்கும் நாம் தயாராகவே இருக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்புகள் ஓரளவு குறைந்த பின்னர் புத்தாண்டில் வன்னியர் சமுதாய மக்களுக்கான 20 சதவீத தனி இடஒதுக்கீட்டுப் போராட்டம் தொடங்க இருப்பதாக கூறியுள்ள ராமதாஸ், இதற்கு முன் தனி இட ஒதுக்கீடு கோரி நடந்த போராட்டத்தை பற்றி கூறும் போது, “1987-ஆம் ஆண்டில், ஒரு வார கால தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தி 33 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.அந்தப் போராட்டம் குறித்த வரலாறுகள் இன்றைய இளைஞர்களுக்கு தெரியாது.

அந்த உணர்வுகளை அவர்கள் அனுபவித்திருக்க மாட்டார்கள். அந்த போராட்டத்தின் போது நாங்கள் பிறந்திருக்கவில்லையே என ஏராளமான இளைஞர்கள் ஏங்குவது எனக்குத் தெரியும். எங்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் சமுதாய நலனுக்காக மீண்டும் ஒரு போராட்டம் நடத்த மாட்டீர்களா அய்யா? என்று பலரும் என்னிடமே கேட்டிருக்கிறார்கள்.” என்று கூறியிருக்கிறார்.

மேலும், “வன்னியர்கள் தனி இட ஒதுக்கீட்டுக்காக இப்போது நாம் நடத்தவிருக்கும் போராட்டம் வரலாறு காணாத வகையில் அமையும். போராட்டத்தின் போதே,  ‘போராட்டத்தைக் கைவிட்டு வாருங்கள். வன்னியர்கள் தனி இடஒதுக்கீட்டுக்கான உடன்பாட்டில் கையெழுத்திடுங்கள்’ என்று அரசு நமக்கு அழைப்பு விடுக்கும் வகையில் இந்தப் போராட்டம் கடுமையாக அமையும்.” என்று கூறியுள்ளார்.

வன்னியர் சமுதாய மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாட்டாளிகள், பாட்டாளி இளைஞர்கள், பாட்டாளி தாய்மார்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இப்போதிருந்தே தயாராக வேண்டும் என்று பதிவில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதில் இருந்து, பாமக, பாஜக, தேமுதிக போன்ற கூட்டணிகளிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

நேற்று, மருத்துவ படிப்பில்  அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, ஆளுநர் வேண்டுமென்றே தாமதித்து அநீதியை ஏற்படுத்துவதாக ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில், “இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை. செய்யவும் மறுக்கிறார்கள்.” என்று ஆட்சியில் இருக்கும், பாமக-வின் கூட்டணி கட்சியான அதிமுக-வைக் கடுமையாகச் சாடியிருந்தார்.

சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி கட்சியான ஆளுங்கட்சிக்கு எதிராக, கண்டனங்களையும் போராட்ட அறிவிப்புகளையும், ராமதாஸ் தொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்