Aran Sei

நீட்டிக்கப்படும் துணைவேந்தர்களின் பதவிக்காலம் – ’தமிழக ஆளுநர் தன்னிச்சை முடிவா?’ – பொன்முடி கேள்வி

தவிக்காலம் முடிவடைந்து, பிரிவு உபச்சார விழாவும் நடத்தப்பட்ட பிறகு, பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் பதவியை தமிழக ஆளுநர் நீட்டிப்பது சரியான செயலல்ல என்று திமுகவை சேர்ந்த முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“ஆளுநர் வெளியேற வேண்டும்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

இதுகுறித்து பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் பதவிக் காலத்தை நீட்டித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இருவரின் பதவிக்காலமும் நிறைவுற்று, பிரிவு உபச்சார விழாவும் நடத்தப்பட்டு, பொறுப்புகளை ஒப்படைத்த பிறகு பணி நீட்டிப்பு வழங்கியிருப்பது ஆரோக்கியமான செயலன்று என்பது மட்டுமல்ல, அவசியமற்றதுமாகும். வெளிப்படையான தேர்வு முறைக்கு “விடை” கொடுக்கும் மிக மோசமான செயலாகும்.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

“புதிய துணைவேந்தர்களைத் தேர்வு செய்ய “தேர்வுக் குழு” அமைக்கப்பட்ட பிறகு, துணைவேந்தர்களுக்கு ஏன் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்? அதிமுக அரசின் சார்பில் அந்தக் கோரிக்கை வைக்கப்பட்டதா? தமிழக ஆளுநர் தன்னிச்சையாக இந்த முடிவினை எடுத்தாரா?” என்று பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார்.

`ஆளுநருக்குப் பேனா அனுப்பும் போராட்டம் ‘ – இந்திய மாணவர் சங்கம்

துணைவேந்தர்கள் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு, உயர் கல்வித்துறைச் செயலாளர் தலைமையில், துணைவேந்தர் பொறுப்புக் குழுவும் அமைக்கப்பட்ட பிறகு, ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியாகியுள்ள இந்த அவசர பணி நீட்டிப்பு, கல்வியாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பையும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்ப்பினையும் ஏற்படுத்தியிருக்கிறது என்று பொன்முடி சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர்கல்வித் துறையை எந்த அளவிற்குச் சீரழிக்க முடியுமோ அந்த அளவிற்கு அதிமுக அரசு சீரழிப்பதும், அதை ஆளுநர் அமைதியாக வேடிக்கை பார்ப்பதும் அவர் வகிக்கும் வேந்தர் பொறுப்பிற்கு ஏற்றதல்ல என்று பொன்முடி அறிக்கையில் கூறியுள்ளார்.

எழுவர் விடுதலையில் ஆளுநரின் கள்ள மௌனம் கண்டனத்திற்குரியது – சீமான் குற்றச்சாட்டு

மேலும், “பணி நீட்டிப்பு வழங்கிய துணைவேந்தர்களை வைத்துக்கொண்டு உயர்கல்வியின் தரத்தை எப்படி உயர்த்த முடியும் எனத் தமிழக ஆளுநர் கருதுகிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. அதிமுக அரசும் இதற்கு எப்படி ஒப்புதல் கொடுத்தது என்பதும் திரை விலகாத மர்மமாக இருக்கிறது. ‘பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறேன். ஊழலுக்கு இடமில்லை’ என்று அடிக்கடி கூறி வந்த ஆளுநரின் இந்தப் பணி நீட்டிப்பு உத்தரவு, மிகுந்த வேதனையளிக்கிறது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது உயர் கல்வியின் தரத்தைத் தாழ்த்தி- தமிழக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தினை வீழ்ச்சிப் பாதையில் தள்ளும் என்று தெரிந்தே வேந்தர் பொறுப்பில் உள்ள ஆளுநர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகுந்த வேதனையளிக்கிறது என்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் பணி நீட்டிப்பு உத்தரவினை வேந்தர் பொறுப்பில் உள்ள ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் பொன்முடி குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு – ஆளுநரின் தாமதத்தால் நிகழவிருக்கும் ஆபத்து

அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட வேறு எந்தப் பல்கலைக்கழகத்திற்கும் துணைவேந்தர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கும் முயற்சியில் வேந்தர் பொறுப்பில் உள்ள ஆளுநர் ஈடுபட வேண்டாம் என்று, திமுக சார்பில் க.பொன்முடி கேட்டுக் கொண்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்