Aran Sei

`இதுதாய்யா மநு நீதி’- இட ஒதுக்கீடு பிரச்சனையில் வலுக்கும் கண்டனங்கள்

ந்த ஆண்டுக்கான மருத்துவப் படிப்பில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளதைக் கண்டித்துப் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இட ஒதுக்கீடு கிடையாது – உச்ச நீதிமன்றம்

 

இந்தத் தீர்ப்பு குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மருத்துவக் கல்வி இடங்களில் இடஒதுக்கீடு வழக்கில் அதிமுக அரசு துணிச்சலுடன் வாதாடவில்லை! அதிமுக – பாஜக கூட்டணி சமூகநீதி மீது தாக்குதலை நடத்துகின்றது. இந்த ஆண்டே இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லையெனில் பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கும் தைரியம் முதல்வருக்கு இருக்கிறதா?” என்று கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”பெரும்பான்மை இந்துவிரோத- மனுவாத பாஜக அரசே இதற்கு முழு பொறுப்பு” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்தீர்ப்பு மிகவும் அதிர்ச்சியாகவும், ஏமாற்றம் தருவதாகவும் அமைந்துள்ளது என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். “இந்த வழக்கில் வாதாடிய வழக்குரைஞர் வழக்காடிகளான கட்சிகளின் சார்பில் எடுத்துவைத்த வாதங்களின்போது, குறைந்தபட்சம் இந்த ஆண்டிற்கு 50 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும், 27 சதவிகிதப்படி இந்தஆண்டிற்கு மட்டும் ஒதுக்கலாமே என்று சொன்ன நல்ல யோசனையின்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை – உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின் மூலம் கானல்நீர் வேட்டையாகி விட்டது!” என்று கூறியுள்ளார்.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பேராசியர் அருணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”மருத்துவக் கல்வியில் மத்திய தாெகுப்பில் ஒபிசியினருக்கு இந்த ஆண்டு இடஒதுக்கீடு இல்லை! இதுதாய்யா மநு நீதி!” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இத்தீர்ப்பு குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கின்ற இத்தீர்ப்பு, சமூக நீதிக்கும் இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான, பெரும் அதிர்ச்சி அளிக்கின்ற தீர்ப்பு என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான வஞ்சகப் போக்கை மேற்கொண்டு வந்ததற்கு, மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தீர்ப்பு குறித்து ஏமாற்றமளிப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.

“இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு(0BC)மருத்துவ படிப்பில் இந்தாண்டு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்களின் இறுதி நம்பிக்கையாக இருந்த நீதிமன்றமும் இட ஒதுக்கீட்டு உரிமையை நிராகரித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது.” என்று கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் “மருத்துவப் படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) நடப்பாண்டில் 50% இட ஒதுக்கீடு இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.” என்று கூறியுள்ளார்.

இது குறித்து, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் கருணாநிதியிடம் அரண்செய் பேசிய போது, “உச்ச நீதிமன்றம் இந்தாண்டு ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தரமுடியாது என்று திட்ட வட்டமாக தெரிவித்திருக்கின்றது. இது தொடர்பாக 2016-லேயே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக வழக்கு நிலுவையிலேயே இருக்கிறது. வழக்கு சம்பந்தமான எல்லாத் தகவல்களும் உச்ச நிதீமன்றத்திற்குத் தெரியும். ஆனால், அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கருத்தில் எடுத்துக்கொள்ளாமல், தற்போது மத்திய அரசு சொல்லுகிற வாதம், அதாவது இந்தாண்டு இட ஒதுக்கீடு தருவதற்கு நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது என்று சொல்வதை மட்டும் எடுத்துக்கொண்டு தீர்ப்பு வழங்கி இருப்பது முழுக்கச் சந்தர்ப்பவாதம்தான். இந்தத் தீர்ப்பால், பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைக்க வேண்டிய சமூகநீதி தள்ளிப்போகிறது.” என்று கூறினார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்