Aran Sei

அவசியமா ஆன்லைன் வகுப்புகள் – கல்வியா? உயிரா?

செய்தி 1: உளுந்தூர்பேட்டை அருகே மேட்டு நன்னாவரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் ஆன்லைன் வகுப்பில் படித்து வந்தனர். வறுமை காரணமாக ஒரு ஸ்மார்ட் போன் மட்டுமே அவர்களது தந்தையால் வாங்கிக் கொடுக்க முடிந்திருக்கிறது. ஃபோனை பங்கிட்டுக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில் மூத்த மகள் எலி மருந்து சாப்பிட்டு கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 30ம் தேதி அவர் உயிரிழந்தார்.

செய்தி 2: திருச்சி மாவட்டம் பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் லலிதா. தனியார் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் ஆன்லைன் மூலம் எடுக்கப்படும் வகுப்பு புரியவில்லை என்பதால் அவர் செப் 7ம் தேதி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செய்தி 3: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட சாஸ்தா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முருகேசனின் மகள் ரித்திகா. ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த இவர் ஆன்லைன் வகுப்புக்காக பெற்றோர் ஸ்மார்ட் போன் வாங்கித்தராத காரணத்தால், ஆகஸ்ட் 26ம் தேதி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியதிலிருந்தே ஸ்மார்ட் ஃபோன் வாங்க வழியில்லை, ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என்பது போன்ற காரணங்களால் தற்கொலைகள் நடந்து வருகின்றன.  மேற்கண்ட செய்திகள் அவற்றில் சில உதாரணங்களே.

“ஆன்லைன் வகுப்புகள் தேவையா? என்கிற விவாதத்துக்கு முன் எந்த வித அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்காமல் ஆன்லைன் வகுப்புக்கென மாணவர்களை கட்டாயப்படுத்துவது அரசின் தவறு” என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன்.

“கல்வியா? உயிரா? என்றால் உயிர்தான் முக்கியம். கல்வியை முன்னிட்டு எந்த உயிரும் பறிபோவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இங்கே 70 சதவிகித மாணவர்கள் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கக்கூடியவர்கள். 30 சதவிகித மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். அனைத்து மாணவர்களின் குடும்பத்தின் வாழ்க்கைத்தரமும் ஒன்றுதானா? என்றால் இல்லை. இந்நிலையில், எந்த வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்காமல் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்பு என்பது எப்படி சமத்துவமாகும்?

தற்போதைய பொதுமுடக்கத்தால் பலரும் வேலையின்மையால் அல்லாடி வரும் சூழலில் ஸ்மார்ட் ஃபோன் வாங்கும் நெருக்கடியை ஏற்படுத்துவது முறையற்றது. ஆன்லைன் வகுப்புகள் மூலம் குழந்தைகள் எந்த அளவு கற்றுக் கொள்வார்கள் என்கிற கேள்வி முக்கியமானது. வகுப்புகள் நடத்த வேண்டும் என்கிற சம்பிரதாயத்துக்காகவே ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. முறையற்ற இந்நடவடிக்கைதான் மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டுகிறது. எனவே, சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும்படி ஒவ்வொரு பகுதியிலும் சமூக வகுப்பறைகள் அமைத்து பயிற்றுவிக்கும்படியான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும்” என்கிறார் நெடுஞ்செழியன்.

ஆன்லைன் வகுப்பில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக தனது மகனுக்கு ஆன்லைன் வகுப்பு வேண்டாம் என நிராகரித்து விட்டதாகக் கூறுகிறார் இறைச்சிக்கடை நடத்தி வரும் கிரி.

“அரசு உதவிபெறும் பள்ளியில் என் மகன் 9ம் வகுப்புப் படிக்கிறான். ஆன்லைன் வகுப்பு நடத்தப் போறதா பள்ளி நிர்வாகம் அறிவிச்சதும், என் மகனுக்கு வேண்டாம் நான் வீட்டுலயே சொல்லிக் குடுக்குறேன்னு சொல்லிட்டேன். நேர்ல சொல்லிக் கொடுக்கும்போதே நிறைய விசயங்களைப் புரிஞ்சுக்கிறதுல பிரச்னை இருக்கப்ப ஃபோன் மூலமா எப்படி புரிஞ்சுக்குவாங்க. அது மட்டுமில்லாமல் ஆன்லைன் வகுப்புக்காக இவங்க கையில ஸ்மார்ட் ஃபோனைக் கொடுக்குறது மூலமா இவங்க கேம்களுக்கு அடிமையாகுற ஆபத்தும் இருக்கு. அதனால்தான் அதை மறுத்துட்டேன்” என்கிறார் கிரி.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்