Aran Sei

`இட ஒதுக்கீட்டில் வஞ்சகம்’ – மத்திய அரசைச் சாடும் திமுக தரப்பு

மருத்துவ மேற்படிப்பில் ஓ.பி.சி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கில், நடப்பாண்டு 50 சதவீத இட ஒதுக்கீடு தர முடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 15 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். கடந்த மே 3-ம் தேதி நடக்க இருந்த நீட் தேர்வு, கொரோனா பரவல் காரணமாக ஜூலை 26- ம் தேதிக்கு மாற்றப்பட்டுப் பிறகு செப்டம்பர் 13- ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுப் பல்வேறு கெடுபிடிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் இடையில் நடந்து முடிந்தது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட வேண்டிய 50 சதவீத இடங்களை வழங்க மத்திய அரசு மறுத்துவருவதாகவும் அதைச் செயல்படுத்த உத்தரவிட வேண்டுமென்று கோரி, திமுக-வின் சார்பில் வழக்கறிஞர் வில்சன் ரிட் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும், அங்குள்ள இடங்களை நிரப்பும்போது அந்தந்த மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படும், இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி அவற்றை நிரப்ப வேண்டும் என மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகள் இருக்கின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அகில இந்திய அளவில் இடங்களை நிரப்பும்போது, மாநில இட ஒதுக்கீடு கொள்கையின்படி இடங்கள் நிரப்பப்படுவதில்லை என தி.மு.க சார்பில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதைத் தொடர்ந்து அதிமுக, பாமக, மதிமுக போன்ற கட்சிகளும்  வழக்கு தொடர்ந்தன.

இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது மருத்துவ மேற்படிப்பில், 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு அல்லது 27 சதவீதம் இட ஒதுக்கீடு என எதையும் இந்த ஆண்டு வழங்க முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இது குறித்து திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான சு.திருநாவுக்கரசு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

“அகில இந்திய மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50% ஒதுக்கீடு மட்டுமல்ல 27% இட ஒதுக்கீடு கூட வழங்க இயலாது என்று மத்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாடு பின்தங்கிய மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய பிஜேபி அரசு இழைத்துள்ள அநீதியாகும். உயர்நீதிமன்ற வழிகாட்டுதலைக் கூட கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் ஓபிசி மாணவர்களுக்கு மிகப்பெரும் துரோகத்தை மத்திய பிஜேபி அரசு செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.”

இது குறித்து, திமுக சார்பாக உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்த வழக்கறிஞர் வில்சன் ரிட்டிடம் அரண்செய் பேசிய போது,  ”93-வது அரசியல் திருத்தச் சட்டம் கொண்டு வந்ததன் நோக்கமே காலம் காலமாகக் கல்வியில் ஒதுக்கிவைக்கப்பட்ட வகுப்பினரான பிற்படுத்தப்பட்டோருக்குச் சரியான பங்கு (கல்வியில்) கிடைக்க வேண்டும் என்பதுதான்.

2014-ம் ஆண்டிலிருந்தே அந்த மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டைத் தராமல், மத்திய அரசு வேண்டும் என்றே அவர்களை வஞ்சித்து வருகிறது. இட ஒதுக்கீடு விஷயத்தை மத்திய அரசு மிக அலட்சியமாகக் கையாள்கிறது. தமிழகத்தைக் கிள்ளுக்கீரையாகப் பார்க்கிறது. இதை மாநில அரசு தட்டிக்கேக்கக் கூடிய நிலையில் இல்லாமல் போனது வருந்தத்தக்க விஷயம்.” என்றார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்