Aran Sei

மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இட ஒதுக்கீடு கிடையாது – உச்ச நீதிமன்றம்

ந்த ஆண்டுக்கான மருத்துவப் படிப்பில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீதமும் பழங்குடியினருக்கு 1 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

ஆனால், தமிழக அரசு, அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கும் இடங்களை நிரப்பும்போது மத்திய அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்றுவதில்லை.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு, திமுக, பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அகில இந்திய ஒதுக்குகீட்டை நிரப்பும்போது இட ஒதுக்கீட்டை பின்பற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிம மன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த ஆண்டு, ஜூலை 27-ம் தேதி வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், மாநில அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றுவதில் மத்திய அரசுக்குச் சட்ட ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ எந்தத் தடையும் இல்லை எனவும் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

அத்துடன், மத்திய மாநில அரசுகளின் சுகாதாரத் துறை செயலாளர்கள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், அந்த குழு கலந்தாலோசித்து இடஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க வேண்டும என்றும் தீர்ப்பளித்தது.

இதனை தொடர்ந்த இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமுல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் திமுக சார்ப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது மருத்துவ மேற்படிப்பில், 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு அல்லது 27 சதவீதம் இட ஒதுக்கீடு என எதையும் இந்த ஆண்டு வழங்க முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாகக் கூறியது.

இந்நிலையில், நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான உச்சநீதி மன்ற அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், இந்தாண்டுக்கான மருத்துவப் படிப்பில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என்று கூறியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்