Aran Sei

`இடஒதுக்கீட்டை அரசு மறுப்பது மிகவும் வேதனைக்குரியது’: உயர்நீதிமன்ற நீதிபதி

Credits The Hindu

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து தமிழக அரசின் பதிலைக் கேட்டு வழக்கை விசாரித்த நீதிபதி மிகவும் வருத்தமடைந்துள்ளார்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனத் தமிழக சட்டசபையில் செப்டம்பர் 15-ம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தாண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் உள் இடஒதுக்கீடு தொடர்பாக மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன், உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5% இடஒதுக்கீடு வழங்குவது சம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்திய பிறகே நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டத்தை 2020-2021-ம் கல்வி ஆண்டிலே அமல்படுத்த வேண்டும் என்பது மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனை அவசர வழக்காக எடுத்துக்கொண்டு விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர், 7.5% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவின் நிலை என்ன என்பதை நீதிமன்றத்தில் ஆளுநரின் செயலாளர் தெரிவிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதாகவும், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி ஆளுருக்கு நீதிமன்றம் உத்தரவிடவும் காலக்கெடு விதிக்கவும் முடியாது என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயண் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

அரசு தரப்பு வழக்கறிஞரின் பதிலைக் கேட்டு அதிருப்தியடைந்த நீதிபதி கிருபாகரன் “கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும் வேதனைகளும் அளவிட முடியாதது. அவர்கள் தாங்கள் மருத்துவராகி கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை புரிய வேண்டும் என்ற கனவோடு படிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய இடஒதுக்கீட்டை அரசு மறுக்கிறது என்பது மிகவும் வேதனைக்குரியது.” என்று கூறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

Credits The Hindu

இன்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் வழங்கப்படாமல் மருத்துவக் கல்லூரிகள் கலந்தாய்வு தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடப்படாது என உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் உறுதியளித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்