புதிய கல்விக்கொள்கைக்கு மேற்கு வங்காளம் ஒப்புதல் அளிக்காது என மமதா பானர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் மாநில அளவில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய மேற்கு வங்காள முதலமைச்சர் மமதா பானர்ஜி, மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கைக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
மாணவர்களைக் கல்வி பயில ஊக்குவிக்கும் தன்மை புதிய கல்விக்கொள்கையில் இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
”வசதி குறைவான குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு இடையே படித்து தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கும்போது அதை ஒரு சாதனையாகக் கருதுகிறார்கள். அந்தச் சாதனை அவர்களுக்கு அவசியப்படுகிறது.
ரேங்கிங் முறையில் மட்டுமே மாணவர்களின் திறமை மற்றும் கடின உழைப்பு அங்கீகரிக்கப்படுகிறது. ஆனால், புதிய கல்விக்கொள்கையில் இந்த ரேங்கிங் முறைக்கு இடமிருப்பது போல தெரியவில்லை.
இதுபோன்ற குறைபாடுகள் உள்ள கொள்கைக்கு நாங்கள் ஒப்புதல் அளிக்க முடியாது என்பதை விளக்கி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி இருக்கிறேன்.
We are constructing about 8 government medical colleges in the state. We also have 88 new Polytechnic universities. We are also constituting universities in Alipur Duar, Raiganj, Dakshin Dinajpur & almost in all districts of the state: Mamata Banerjee, West Bengal CM pic.twitter.com/pMk9mdYn1Q
— ANI (@ANI) October 5, 2020
மேற்கு வங்காளத்தில் 8 அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்றன. நம் மாநிலத்தில் 88 புது பாலிடெக்னிக் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அலிபூர், துவார், ராய்கஞ்ச், தக்ஷின் தினஜ்பூர் மேலும் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் பல்கலைக்கழகங்கள் வர உள்ளன.
மாணவர்களே நம் நாட்டின் எதிர்காலம். ஒற்றுமை உணர்வையும் சகோதரத்துவத்தையும் நீங்கள் நினைவில்கொள்ள வேண்டும். சிலர் சாதி மற்றும் மதத்தின் பேரால் மக்களைப் பிரித்தாள விரும்புகிறார்கள். ஆனால், ரத்தம் ஒரே நிறம்தான். நாம் அனைவரும் ஒற்றுமையோடு விளங்க வேண்டும் ” இவ்வாறு மாணவர்கள் மத்தியில் மமதா பேசினார்.
மேலும் அவர், டாக்டர் அம்பேத்கர் பெயரில் சிறுபான்மை மாணவர்களுக்கான பல்கலைக்கழகம் உருவாக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
ஜூலை 29-ம் தேதி மத்திய அமைச்சரவையில் புதிய கல்விக்கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு முதல்வர் மமதா இதுகுறித்து பேசியிருப்பது இதுவே முதல்முறை.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.