Aran Sei

6 மாநிலங்களில் புதிய கல்விக்கொள்கை – அமைச்சரவை ஒப்புதல் – அடுத்தது தமிழ்நாடு

மாநிலங்களுக்கு கற்பித்தல்-கற்றல் மற்றும் முடிவுகளை வலுப்படுத்தும் (STARS) திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கு தேவையான 5,718 கோடி ரூபாய் நிதியில் 3,700 கோடி ரூபாயை உலக வங்கி வழங்கவுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கல்வித்துறையின் கீழ் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளா மற்றும் ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு அளிக்கும்.

இதே போன்ற  திட்டம் ஆசிய வளர்ச்சி வங்கி தியுதவியுடன், குஜராத், தமிழ்நாடு, உத்தரகாண்ட், ஜார்கண்ட் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்கஙளில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளிகளில் கல்வியை மேம்படுத்தவும், மதிப்பீடு செய்யவும், வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் மாணவர்களை திறமையானவர்களாக மாற்றவும் தேவையான உதவிகளை ஸ்டார்ஸ் திட்டம் வழங்கும் என்றும் திட்டத்தின் ஒட்டு மொத்த கவனம் மற்றும் அம்சங்கள், தேசிய கல்வி கொள்கையின் நோக்கங்களுடன் இணைக்கப்படுவதாக மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும ‘பராக்’ என்று அழைக்கப்படும் தேசிய மதிப்பீட்டு மையம் அமைக்கப்பட உள்ளது.

மாணவர்களைத் தக்கவைத்தல், மாற்றம் செய்தல் மற்றும் கல்வி நிறைவு விகிதங்கள் குறித்த தகவல்களை திரட்ட, தேசிய தரவு அமைப்புகளை வலுப்படுத்துவது பராக்கின் பணியாகும்.

அதேபோல், ஊக்கத் தொகை மானியம் அளித்து, மாநிலங்களின் செயல்பாடு தர அளவீடை மேம்படுத்த கல்வி அமைச்சகத்துக்கு உதவுதல், கற்றல் மதிப்பீடு முறைகளை வலுப்படுத்த உதவுதல் ஆகியவற்றை பராக் என்ற தேசிய மதிப்பீடு மையம் கவனிக்க உள்ளது.

இதுநாள்வரை இவை அனைத்தும் மாநில அரசுகள் வகுத்துள்ள விதிமுறைகளின் கீழ் செயல்பட்டு வரும் நிலையில், இனி தேசிய மதிப்பீடு மையம் இவற்றை கவனிக்க உள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக இந்த சீர்திருத்தம், தொடக்க கல்வி மற்றும் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் தொழிற்கல்வியில் அமல்படுத்தப்பட உள்ளதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக, “தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில், மூன்றாவது மொழியில், மாணவர்கள் குறைந்த பட்ச புலமை பெற்றிருப்பதை அதிகரிக்கும் சில நடவடிக்கைகளும் இந்த ஸ்டார்ஸ் திட்டத்தில் உள்ளன” என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ள நிலையில், ஸ்டார்ஸ் திட்டத்தின் மூலம், மூன்றாவது மொழியில், மாணவர்கள் குறைந்த பட்ச புலமை பெற்றிருப்பது உறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்