மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலத்திற்குப் பாடமாக வைக்கப்பட்ட ‘வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ என்கிற அருந்ததி ராய்யின் நூலைப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியத்தைத் தொடர்ந்து இந்திய மாணவர் சங்கம் நடத்திய போராட்டத்தில், இன்னும் 15 நாட்களில் நல்ல முடிவு சொல்லப்படும் என்று துணைவேந்தர் உறுதியளித்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன.
புக்கர் பரிசு பெற்ற இந்திய எழுத்தாளர் அருந்ததிராய்யின் நூலைப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியதாகச் செய்திகள் வந்தன. இதற்கு ஆர்எஸ்எஸ் யின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்தியார்த்தி பரிசத் (எபிவிபி) பல்கலைக்கழகத்திற்குக் கொடுத்த நெருக்கடிதான் காரணம் என்று சொல்லப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்குத் தமிழகம் முழுக்க எதிர்ப்புகள் கிளம்பின. திமுக, திராவிடர் கழகம் ,கம்ம்யூனிஸ்ட் இயக்கங்கள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள், இந்திய அரசியல் சாசனம் கொடுத்திருக்கும் கருத்துரிமைக்கு எதிராகப் பல்கலைக்கழகம் செயல் பட்டுள்ளாதாகக் கண்டித்தனர்.
`அருந்ததி ராய் புத்தகத்தை நீக்கியது வன்மப் போக்கின் தொடர்ச்சி’ – ஆ.ராசா கண்டனம்
இதனைத் தொடர்ந்து இந்திய மாணவர் சங்கம் பல்கலைக்கழக நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது . மாணவர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இன்னும் 15 நாட்களில் ‘நல்ல தீர்வு’ எட்டப்படும் என்று துணைவேந்தர் உறுதி கொடுத்ததாகச் செய்திகள் கூறுகின்றன.
இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் மாரியப்பனிடம் அரண்செய் பேசியபோது, கடந்த மூன்று ஆண்டுகளாக பாடத்திட்டத்தில் உள்ள நூலை ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி கொடுத்த நெருக்கடியின் காரணமாகப் பல்கலைக்கழகம் நீக்கியிருப்பது மோசமான செயலென்று கூறினார்.
`அருந்ததி ராய் நூலை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்’ – தமுஎகச
பாடத்திட்டத்தை மீண்டும் சேர்க்க சொல்லி கடந்த வியாழக்கிழமை பல்கலைக்கழக துணைவேந்தரிடம் இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை மனு அளித்ததாகவும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது என்றும் மாரியப்பன் தெரிவித்தார்
போராட்டத்தின் ஒரு பகுதியாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் இந்திய மாணவர் சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் .
இந்தப் பேச்சுவார்த்தையில் ” பல்கலைக்கழக பாடத்திட்டக் குழு வரைவு செய்த ஒரு பாடத்தை நீக்குவதற்கான நோக்கம் என்ன ? தேச துரோக நூல் என்று ஏபிவிபி யால் சொல்லப்படுகிறது. ஒருவேளை இந்நூல் இந்திய நாட்டிற்கு எதிராக உள்ளதென்று பல்கலைக்கழகம் தீர்மானித்தால், பாடத்திட்த்திற்குப் பரிந்துரைசெய்த வல்லுநர் குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கடந்த மூன்று ஆண்டுகள் பாடமாய் இருக்க அனுமத்தித்த துணைவேந்தர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என்று இந்திய மாணவர் சங்கம் கேட்டதாக அதன் மாநில பொதுச்செயலாளர் மாரியப்பன் அரண்செய்யிடம் தெரிவித்தார்.
அருந்ததிராய் நூல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கம் – பன்முகத்தன்மையை அழிக்கும் செயல் – கனிமொழி
மேலும், ” அருந்ததிராய்யின் அந்த நூல் பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் நிலம் சுரண்டப்படுவதையும் அதற்கான போராட்ட வரலாறையும் பதிவு செய்திருக்கிறது. வல்லுநர் குழு பரிந்துரைத்த நூலை நீக்க கூடாது ” என்று மாணவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த துணைவேந்தர் “பாடத்தில் அருந்ததிராய்யின் நூலை நீக்கவில்லை என்றும் ஏபிவிபி அளித்த புகாரின் அடிப்படியில் ஒரு குழு அமைத்ததாகவும் அக்குழு நீக்க பரிந்துரை செய்ததாகவும் இன்னும் அலுவல் ரீதியாகப் பாடத்திட்டத்தில் இருந்து ‘ வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ் ’ நூலை நீக்கவில்லை என்றும் புதிய குழு அமைத்து அந்த நூலின் தன்மையை ஆய்ந்து 15 நாட்களுக்குள் பதில் அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்” என்று மாரியப்பன் தெரிவித்தார்.
`பல்கலைக்கழகம் பவ்விப் பணிந்து செயல்படுவது, மகா வெட்கம்’ – கி.வீரமணி காட்டம்
“இந்த நாட்டின் மீதும் உழைக்கும் மக்களின் மீதும் அக்கறை கொண்டவர்கள் நாங்கள். இந்திய மாணவர்சங்க வரலாறும் இடதுசாரிகளின் வரலாறும், கல்விக்காகவும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் போராடிய வரலாறுதான். ஆனால் ஏபிவிபி மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் யின் வரலாற்றை எல்லோரும் அறிவர். போராடாமல் எதுவும் கிடைக்காது, நிலைக்காது. மனோன்மானியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தோடு கொண்ட கருத்துரிமைக்கான போராட்டத்தில் முன்னேறி இருக்கிறோம் ” என்று இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் மாரியப்பன் கருத்துத் தெரிவித்தார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.