Aran Sei

தமிழகத்தில் நீட் தேர்வு – மாணவர்கள் அலைக்கழிப்பு

NEET in TN

நாடு முழுவதும் நேற்று இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த ஆண்டு மே மாதம் நடக்க இருந்த நீட் தேர்வு, கொரோனா பேரிடர் சூழலால் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட 14 நகரங்களில் 238 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாநிலத்தில் 1.17 லட்ச மாணவர்கள் தேர்வெழுதினர்.

தேர்வு ஆரம்பிப்பதற்கு இரண்டரை மணிநேரம் முன்னரே தேர்வு மையத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்ததால், மாணவர்கள் காலை 11 மணி முதலே வர துவங்கினார்கள். மதியம் 2:00 மணிக்கு தொடங்கி 5:00 மணிவரை தேர்வு நடைபெற்றது. மாணவர்கள் 01:30 மணிவரை தேர்வு மையத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். மெட்டல் டிடெக்டர் கொண்டு முழுமையாக சோதனையிட்ட பிறகே காவலர்கள் மாணவர்களை தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர்.

கொரோனா காரணமாக தேர்வு மையங்கள் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்டிருந்தன. தேர்வுக்கு வந்திருந்த மாணவர்களுக்கு சேனிடைஸர் வழங்கப்பட்டது. மாணவர்கள் தெர்மல் ஸ்கேனரால் உடல் வெப்பநிலை அளவிடப்பட்டு, கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டும் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மாணவி நிவேதிதா, சேத்துப்பட்டு தேர்வு மையத்தில் தேர்வுக்கு முன் உடல் வெப்பநிலை அளவிடும்போது வெப்பநிலை அதிகமாக இருப்பதாக கூறி தனியே நிறுத்தி வைக்கப்பட்டார். தேர்வு முடிவதற்கு வெறும் அரை மணிநேரம் இருந்த நிலையிலே இரண்டாவது வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முப்பது நிமிடங்களில் 45 கேள்விகளுக்கு மட்டுமே  பதிலளிக்க முடிந்தது என்று மாணவி நிவேதிதா தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தேர்வு மையத்தின் பெயர் குழப்பத்தில் ஐந்துக்கும் அதிகமான மாணவர்கள் காலதாமதமாக தேர்வு மையத்தை அடைந்தார்கள். அதனால் தேர்வு எழுதுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. தாமரை இன்டர்நேஷனல் பள்ளி என்ற பெயரில் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் இரண்டு பள்ளிகள் உள்ளன.

இரண்டுமே தேர்வு மையங்களாக இருந்த நிலையில், தஞ்சாவூர் தேர்வு மையத்திற்கு செல்லவேண்டிய மாணவர்கள் கும்பகோணத்திற்கும், கும்பகோணம் தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டியவர்கள் தஞ்சாவூருக்கும் சென்றுள்ளனர். அங்கிருந்து அவர்கள் சரியான தேர்வு மையத்திற்கு அனுப்பப்பட்டனர். தேர்வு ஆரம்பித்த பிறகே மாணவர்கள் மையத்தை வந்தடைந்தார்கள் என்பதால் அவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை.

தேர்வுக்கு அரைக்கை சட்டை அணிந்து வர வேண்டும், ஷூ, சாக்ஸ் அணியக்கூடாது என பல விதிமுறைகள் உள்ளன. மாணவிகள் நகை, ஹேர்பின் போன்றவை அணிய தடை உள்ளது என்பதால் உடன் வந்தவர்களிடம் நகைகளைக் கொடுத்துவிட்டுச் சென்றனர்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த திருமணமான மாணவி முத்துலட்சுமி, அணிந்திருந்த தாலி மற்றும் மெட்டியைக் கணவரிடம் கழற்றிக் கொடுத்துவிட்டு தேர்வெழுதச் சென்றார்.

மதுரையில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் மாணவர்களுக்காக வைக்கப்பட்டிருந்த வழிமுறைகள் அடங்கிய பலகையில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டிருந்தது. தமிழ் மொழியில் வழிமுறைகள் கொடுக்கப்படவில்லை.

அந்த அறிவிப்பில், ஆதார் அட்டை மற்றும் அடையாள அட்டை கட்டாயமாக இருக்க வேண்டும், கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் போன்ற முக்கியமான வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருந்தன.

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த மாணவி மவுனிகா ஆதார் அட்டையின் நகல் மட்டுமே வைத்திருந்தபடியால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டார். ஆதாரோடு இணைத்திருந்த தொலைபேசி எண் கூட இல்லாததால், ஆதார் பதிவிறக்கம் செய்யவும் முடியாமல் போனது.

வீட்டுக்குச் சென்று அசல் ஆதார் அட்டையை எடுத்துவர அவகாசம் இல்லாததால் அம்மாவோடு மாணவி மவுனிகா அழுதபடி நின்றுள்ளார். அங்கிருந்த காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ரமேஷ் இதை அறிந்ததும், ஆரம்பாக்கம் இரண்டாம் நிலை காவலர் மகேஷ்வரனிடம் கூறி மாணவியின் அம்மாவோடு வீட்டுக்குச் சென்று ஆதார் அட்டை எடுத்து வர உதவினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்