Aran Sei

நீட் தேர்வு முடிவுகளில் குழப்பம் – இணையத்தில் இருந்து திடீர் நீக்கம்

Image Credits: India TV

நீட் தேர்வு முடிவுகளின் புள்ளிவிவரத்தில் குளறுபடி ஏற்பட்ட நிலையில், தேசிய தேர்வு முகமை இணையத்தளத்தில் இருந்து முடிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் 2020-21 – ம் கல்வி ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, கொரோனா தொற்றுப் பரவலுக்கிடையில் செப்.13-ம் தேதி நடைபெற்றது. தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) நீட் தேர்வை நடத்தியது.

தமிழகத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் உட்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், 85 முதல் 90 சதவீதத்தினர் நீட் தேர்வில் பங்கேற்றதாக மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

எனினும் கரோனா தொற்று காரணமாக ஏற்கனவே நடைபெற்ற தேர்வை எழுதாதவர்கள் மற்றும் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அக்.14-ம் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது.

நீட் தேர்வு முடிவுகள் நேற்று மலை வெளியாகின. அதனை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். வெளியான முடிவில், தேர்வு எழுதியவர்களை விடத் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது என்று ‘புதிய தலைமுறை’ செய்தி குறிப்பிடுகிறது.

திரிபுரா மாநிலத்தில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 3,536. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 88,889 என்றும், தேர்ச்சி விகிதம் 56.62% என்றும் உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 1,56,992 பேர் தேர்வு எழுதியதில், 7,323 பேர் தேர்ச்சி என்றும், தேர்ச்சி விகிதம் 60.79% என்றும் தவறான புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.

அதேபோல் உத்தரகாண்டில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 12,047 ஆக உள்ளது. ஆனால் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 37,301 என்று வெளியாகியுள்ளது. தெலங்கானாவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை விட தேர்ச்சி சதவிகிதம் அதிகமாக உள்ளது.

இதுவரை, தேசிய தேர்வு முகமையோ, மத்திய கல்வி துறை அமைச்சகமோ தங்கள் தரப்பு விவரத்தை வெளியிடாநிலையில், இதுகுறித்து அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டபோது ‘அச்சிடுவதில் ஏற்பட்டுள்ள பிழை’ என்று அவர்கள் கூறியதாகவும் ‘புதிய தலைமுறை’ செய்தி குறிப்பிடுகிறது.

பிழை திருத்தப்பட்டு விளக்கம் மற்றும் புதிய அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். இந்நிலையில், இதற்கு முன் வெளியிடப்பட்ட முடிவுகள் தேசிய தேர்வு முகமை இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்