Aran Sei

‘நீட் தேர்வு முடிவுகளில் ஏன் இத்தனை குளறுபடிகள், குழப்பங்கள்?’- மு.க.ஸ்டாலின் காட்டம்

Credits The Hindu

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகளை தேசிய தேர்வாணையம் நேற்று வெளியிட்டு உள்ளது.

கொரோனா சூழலால் செப்டம்பர் மாதம் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு அக்டோபர் 14-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டு இரண்டு தேர்வுகளுக்குமான முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டிருந்தார்

தேர்வு முடிவுகளின் புள்ளிவிவரத்தில் குளறுபடி ஏற்பட்ட நிலையில், தேசிய தேர்வு முகமை இணையத்தளத்தில் இருந்து முடிவுகள் நீக்கப்பட்டன. பிறகு திருத்தப்பட்ட பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து, நீட் தேர்வு விடைத்தாள் திருத்துவதிலும் குளறுபடி நடந்திருப்பதாக மாணவர்கள் கூறியுள்ளார்கள்.

 

அரியலூர் மாவட்டம் தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி மஞ்சு நீட் தேர்வில் 37 மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளதாக தேர்வு முடிவுகள் தெரிவிக்கும் நிலையில், ஓஎம்ஆர் சீட்டில் குளறுபடி நடந்திருப்பதாக புதிய தலைமுறை-க்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

தேர்வு முடிவுகளில் தவறு இருப்பதாக மாணவர்கள் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்து வருகிறார்கள்.

Credits Twitter

இந்தக் குளறுபடிகள் குறித்து திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின் ட்விட்டரில், “தேர்வு முடிவுகள் தவறாக வெளியிட்டுத் திருத்தம்; மதிப்பெண் குறைந்ததாக மாணவர்கள் புகார்-ஏன் இத்தனை குழப்பங்கள்? குளறுபடிகள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

“நீட் ரத்தே தீர்வு! அரசுப்பள்ளி மாணவர்களின் உணர்வும் அதுவே!” எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வு முடிவுகள் முதலில் தவறாக வெளியிடப்பட்டு, தேசியத் தேர்வு முகமை மீண்டும் அதனைத் திருத்தி வெளியிட்டிருப்பதன் மூலம், அதன் குளறுபடிகள் மனப்பான்மை  மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.”

“மாணவியரின் எதிர்காலத்தை ஏதோ கிள்ளுக் கீரையாக எண்ணி, சடு குடு விளையாடுகிறது அந்தத் தேர்வு முகமை. மத்திய பா.ஜ.க. அரசும் இதை எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதும் புரியவில்லை.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

“ஓஎம்ஆர் (OMR ) தாளை வைத்து ஆய்வு செய்ததில்,  மதிப்பெண்கள் குறைந்ததாக ஏராளமான மாணவர்கள் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். நாடு தழுவிய அளவில் நடத்தப்படும் ஒரு நுழைவுத் தேர்வில், ஏன் இத்தனை குளறுபடிகள்? குழப்பங்கள்? என்ன காரணம்? யார் யார் இதன் பின்னணியில் இருக்கிறார்கள்? அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டாமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 23468 பேர் தேர்வே எழுதவில்லை. தேர்வு எழுதிய 99610 பேரில் 57215 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்கள். கடந்த ஆண்டு நீட் தேர்வை விட 2570 பேர் குறைவாகவே நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள்.” என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

” தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்படுவதைத் தாங்க முடியாமல், நேற்றைய தினம் நீட் தேர்வு வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு கிருபாகரன் அவர்களே கண்கலங்கியிருக்கிறார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

” கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து அழிக்கும் நீட் தேர்வை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என மு.க ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்