Aran Sei

நீட் – தமிழகத்தை சேர்ந்த 2 அரசு பள்ளி மாணவிகள் முதல்முறையிலேயே தேர்வு

தமிழகத்தை சேர்ந்த இரண்டு அரசு பள்ளி மாணவிகள், பயிற்சி மையத்திற்கு செல்லாமல் நீட் தேர்வில் முதல்முறையிலேயே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை அருகே வெள்ளியங்காடு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பயின்ற பழங்குடியினத்தை சேர்ந்த எஸ்.ரம்யா 720 மதிப்பெண்ணுக்கு 145 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

அதே பள்ளியில் பயின்ற, பி.பிஸ்டிஸ் பிரிஸ்கா என்ற பட்டியல் சாதியை சேர்ந்த மாணவி 167 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இரண்டு மாணவிகளும் பயிற்சி வகுப்பிற்கு செல்லாமல் தேர்வெழுதியுள்ளனர்.

தினக்கூலியின் மகளான ரம்யா, பதினொன்றாம் மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்பு புத்தகங்களை மட்டும் படித்து தேர்வு எழுதியதாக தி இந்து -விடம் கூறியுள்ளார்.

தமிழக அரசால் நடத்தப்பட்ட நீட் பயிற்சி மையத்தில் கலந்துகொள்ளவில்லை என்று கூறியுள்ள ரம்யா, கொரோனா பரவல் காரணமாக ஆசிரியர்களின் வீட்டுக்கு கூட சென்று சந்தேகம் கேட்ட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

“நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதே மிகப்பெரிய வெற்றி” என்று பிஸ்டிஸ் கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. பதினொன்றாம் மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்பு புத்தகங்களை படித்ததுடன், மூன்று நாள் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொண்டதாக பிஸ்டிஸ் கூறியுள்ளார். பிஸ்டிசின் தந்தை ஒரு தையல் கலைஞர்.

வெள்ளியங்காடு அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது இதுவே முதல் முறை என்று கூறியுள்ள அப்பள்ளியின் தலைமை ஆசிரியை பெல்லி, மாணவர்களுக்கு மருத்து இடம் கிடைத்தால் பள்ளியின் சார்பாக அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று தி இந்து-விடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவம் பயிலும் மாணவர் நவநீத கண்ணனிடம் பேசியபோது “இந்த மாணவிகள் கடின உழைப்பால் தாங்களே பயின்று தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், இவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்ணுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது” என்று கூறுகிறார்.

தனியார் மருத்துவ கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்தால் மட்டுமே இவர்களுக்கு இடம் கிடைக்கும் என்று கூறும் நவநீத கண்ணன் பயிற்சி வகுப்பிற்கு செல்லாமல் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்று பெருமையாக கூறுவது, நீட் தேர்வை நியாயப்படுத்தும் மற்றொரு முயற்சி என்று தெரிவிக்கிறார்.

“ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறுகின்றனர். ஆனால், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காது. தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதை பெரிதாக கூறி மற்றொரு வகையில் நீட் தேர்வை நியாயப்படுத்தி வருகிறார்கள்” என்று கூறுகிறார் நவநீத கண்ணன்.

“தாங்களாகவே பயின்று தேர்ச்சி பெற்றுள்ள ரம்யாவும், பிஸ்டிசும் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து பயிற்சி வகுப்பில் படித்திருந்தால் ஒருவேளை 400க்கும் அதிக மதிப்பெண் பெற்று அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்திருக்கலாம். ஆனால், அனைவராலும் அவ்வளவு செலவு செய்து படிக்க முடியாது என்பதே யதார்த்தம்” என்கிறார் நவநீத கண்ணன்.

ஆகவே, “முதல்முறையிலேயே தேர்ச்சி பெற்றுவிட்டார்கள்” என்றும், “பயிற்சி வகுப்பிற்கு செல்லாமலேயே தேர்ச்சி பெற்றுவிட்டார்கள்” என்றும் கூறுவது, நீட் தேர்வினால் சமூகநீதி மறுப்படுவதை மறைப்பதற்கான தம்பட்டமே என்று மருத்துவ மாணவர் நவநீத கண்ணன் கூறுகிறார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்