Aran Sei

‘ அதிமுக அரசுடன் இணைந்து போராட தயார் ’: திமுக தலைவர் ஸ்டாலின்

Credits New Indian Express

ருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு அனுமதியளிக்கக் கோரி ஆளுநருக்கு மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம், தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு அனுமதி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தித் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்-க்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து கடிதத்தில் ஸ்டாலின்,

“கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

2017-2018 கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்குறித்து ஆராய்வதற்காக, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலையரசன்  தலைமையில் மூத்த வல்லுநர்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அந்தக் குழு அளித்த பரிந்துரையின்படி, இளநிலை மருத்துவம், பல்மருத்துவம், இந்திய மருத்துவம், ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்குத் தகுதித்தேர்வாகக் கருதப்படும் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் படித்த மாணவர்களுக்கிடையே சமத்துவத்தை நிறுவ முடியும் எனத் தமிழக அரசால் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த முடிவின் அடிப்படையில், மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா செப்டம்பர் 15-ம் தேதி சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுத் தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

நீட் தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் 16-ம் தேதி வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் வழங்கப்பட்டால் மட்டுமே இந்தக் கல்வியாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயனளிக்கும் இடஒதுக்கீட்டினைச் செயல்படுத்த முடியும்.

அதனால், மசோதாவை ஆதரித்துள்ள முக்கிய எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவர் ஆகும் கனவை நிறைவேற்ற இந்த மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு கடிதத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள ஸ்டாலின், “இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைக்கப்பட்டிருக்கும் சட்டமன்றத்தின் உரிமை மற்றும் அதிகாரம் சம்பந்தப்பட்டதாகும். ஆளுநர் இதில் மேலும் பாராமுகமும் தாமதமும் காட்டுவது நல்லதல்ல.” என்று கூறியுள்ளார்.

“இந்தத் தேர்வில், மாநில உரிமைகளுக்காக அ.தி.மு.க அரசுடன் இணைந்து போராட, தி.மு.க. தயாராக இருக்கிறது. எனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், உடனடியாக அனைத்துக் கட்சிகளுடனும் கலந்து பேசி, என்னவகைப் போராட்டம், எந்த நாளில் என்பதை முடிவு செய்து அறிவித்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!” எனவும்  ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு – ஆளுநரின் தாமதத்தால் நிகழவிருக்கும் ஆபத்து

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்