Aran Sei

தமிழ் புறக்கணிப்புக்கு எதிராகக் குரல் கொடுப்போம் – ஸ்டாலின்

ந்தித் திணிப்பு மற்றும் தமிழர் நலன் புறக்கணிக்கும் மத்தியரசையும் அதற்கு துணை நிற்கும் அதிமுக ஆட்சியையும் புறக்கணிப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைய இந்தியக் கலாச்சாரத்தைப் பின்னோக்கிச் சென்று ஆய்வு செய்வதற்காக 16 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் 14-ம் தேதி அமைத்தது. இந்தக் குழுவில் தமிழகம் உட்பட தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கும் இடம் அளிக்கப்படவில்லை. மேலும் சிறுபான்மையினத்தவர், பட்டியலினத்தவர் மற்றும் பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தேசிய கல்வி கொள்கை 2020-ல் மும்மொழி கொள்கை என்ற பெயரில், இந்தி மொழியைத் திணிப்பதாக தமிழக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே தொடரும்” என்று அறிவித்தார்.

நொய்டாவில் ஏஎஸ்ஐயின் ‘பண்டித் தீன்தயாள் உபாத்யா கல்வி நிறுவனம்’ அமைந்துள்ளது. இதில், தொல்லியல் சம்பந்தப்பட்ட பல்வேறு வகை பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றான 2 வருட முதுநிலை பட்டயப்படிப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான தகுதியாக வரலாறு, தொல்லியல், மானுடவியல் ஆகிய துறைகளில் முதுநிலையான எம்.ஏ முடித்திருக்க வேண்டும்.

அதற்கு செம்மொழி பட்டியலில் இடம்பெற்ற சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபு அல்லது பெர்ஷியன் மற்றும் மண்ணியல் ஆகிய துறைகளில் எம்.ஏ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் செம்மொழி பட்டியலில் இடம்பெற்ற தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழித்துறைகளில் பயின்றவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

இது போன்ற பல விஷயங்களில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் புறக்கணித்து வருவதாக திமுக உட்பட எதிர்க்கட்சிகளும் பல்வேறு இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

மத்தியரசின் இந்த தமிழ் புறக்கணிப்புகள் குறித்து திமுக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் பாரம்பரியமான பன்முகத்தன்மையைப் பாழ்படுத்தி, ஒருமைப்பாட்டினை உருக்குலைப்பது ஒன்றையே கொள்கையாகக் கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசு, இந்தியக் கலாச்சாரம் பற்றி ஆய்வு செய்ய அமைத்த 16 பேர் குழுவில் தமிழர்கள் உள்ளிட்ட தென்னகத்தினர், சிறுபான்மையினர், பட்டியலினத்தவரைப் புறக்கணித்தது, கற்றறிந்த சான்றோரின் கடும் கண்டனத்திற்குள்ளானது.

தற்போது, மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில், தொல்லியல் பட்டயப்படிப்புக்கான அறிவிக்கையில், இந்தியாவின் மிக மூத்த மொழியாம் செம்மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது, கண்டனத்திற்குரிய வஞ்சகச் செயலாகும்.

பட்டயப்படிப்புக்கான கல்வித்தகுதியாக சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி மொழிகள் இடம்பெற்றுள்ள நிலையில்; இந்திய நாட்டின் தொல்லியல் சான்றுகளில் அறுபது சதவீதத்திற்கும் மேலான சான்றுகளைக்கொண்டு விளங்கும் தமிழைத் திட்டமிட்டுத் தவிர்த்திருப்பது, தமிழ் மொழியின் மீதான பண்பாட்டுப் படையெடுப்பாகும். இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டை ஒழித்திட முனையும் இந்தப் பிற்போக்கு நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து கண்டனக் குரல் எழுப்புவோம்!

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக மண்ணின் மைந்தர்களுக்கான வேலைவாய்ப்புகள் அருகி வரும் நிலையில், ரயில்வே மற்றும் மின்வாரியப் பணிகள், ஊட்டி ஆயுதத் தொழிற்சாலை பணியிடத்துக்கான தேர்வு உள்ளிட்டவற்றில், தமிழ் தெரியாத வடமாநிலத்தவர் அதிகமாக நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பான வழக்கில் நீதிபதிகள் அதிருப்திக் குரலை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தி மொழியில் கூடத் தேர்ச்சி பெற இயலாத வடமாநிலத்தவர், மின்வாரியம் தொடர்பான தேர்வுகளில் தமிழ்மொழியில் அதிக மதிப்பெண்கள் எடுத்தது எப்படி என்ற நீதிபதிகளின் கேள்வி, எதிர்காலத் தலைமுறையின் நலன் காக்கும் வகையிலானது.

மத்திய அரசின் இந்தித் திணிப்பு மற்றும் தமிழர் நலன் புறக்கணிப்புக்குத் துணை போகும் அடிமை அதிமுக ஆட்சியின் அவலங்களையும் அம்பலப்படுத்துவோம்!”.

மத்தியரசு நிறுவனம் நடத்தும் புதிர் போட்டியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது குறித்து, தூத்துக்குடி எம்.பி கனிமொழி தன் ட்விட்டர் பக்கத்தில் #StopHindiImposition என்ற ஹேஷ்டாக்குடன் கருத்து தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனம் நடத்தும் ஒரு புதிர் போட்டியில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குறியது. தமிழோ, ஆங்கிலமோ தெரியாமல் தாய்மொழி மட்டுமே அறிந்த குழந்தைகள் ஏராளமானோர் இருப்பதால், இப்போட்டி அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும்”

 

ரயில் பயணச்சீட்டு பதிவிற்கான குறுஞ்செய்தி இந்தியில் வருவது குறித்து, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

@IRCTCOfficial -ல் தொடர்வண்டி பயணச்சீட்டு பதிவு செய்தவுடன், உறுதிப்படுத்துதல் குறுஞ்செய்தி, இந்தியில் வருகிறது; இந்தியாவில் பல மாநிலங்களில் பெரும்பாலான மக்களுக்கு இந்தி தெரியாது.”

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் தொடர்ந்து மத்தியரசு தமிழை புறக்கணிப்பு செய்வது குறித்து கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்