Aran Sei

‘நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடங்குகிறது’ – முதலமைச்சர் ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம்  இப்போது தொடங்குகிறது என்றும் நாளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்குப் பெறும் மசோதா நிறைவேற இருக்கிறது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று (செப்டம்பர் 12), தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நீட் தேர்வு அச்சம் காரணமாகத் தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அந்த மாணவருக்கு அஞ்சலி செலுத்தி – அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

‘மாணவன் தனுஷை மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று?’ – எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி

“இரண்டு முறை தேர்வு எழுதியும் தேர்ச்சிபெற முடியாத அளவுக்குக் கிராமப்புற – நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துவதால், மனமுடைந்து தனுஷ் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நீட் தேர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தும் மிகப்பெரிய சிரமங்களைப் புரிந்துகொள்ளாத மத்திய அரசின் அலட்சியமும், பிடிவாதமும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வரவேண்டிய மாணவ – மாணவிகள் தற்கொலைக்குக் காரணமாகத் தொடர்ந்து அமைந்து வருகிறது.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வில் முறைகேடு, கேள்வித்தாள் கசிவு, ஆள்மாறாட்டம்  உள்ளிட்ட பல்வேறு மோசடிகளும், மாணவ – மாணவிகள் தற்கொலைகளும் மத்திய அரசின் மனதை மாற்றவில்லை என்பது, கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தே தீர வேண்டும் என்ற அவசியத்தை மேலும் மேலும் வலுவடைய வைக்கிறது என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

“இந்நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம்  இப்போது தொடங்குகிறது. நாளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்குப் பெறும் மசோதா நிறைவேற இருக்கிறது. இதனை இந்தியத் துணைக்கண்டத்தின் பிரச்சினையாக் கருதி அனைத்து மாநில முதல்வர்களின் கவனத்துக்கும் கொண்டுசென்று ஆதரவு திரட்டி, வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு பயத்தால் சேலம் மாணவர் தற்கொலை – எப்போது ஓயும் இந்த மரண ஓலம்

மேலும், “மாணவச் செல்வங்கள் மனம் தளரவேண்டாம். சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு அமைத்துத்தரும் பெரும் பொறுப்பும் கடமையும் இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பினை உணர்ந்து, நீட் தேர்வை மத்திய அரசு நீக்கும்வரை நமது சட்டரீதியான போராட்டம் தொடரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம்.” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்