Aran Sei

ஆளுநரின் செயல் மாநில உரிமைகளை நசுக்குகிறது – எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்காமல் இருக்கும் ஆளுநரின் செயல் மாநில அரசின் உரிமைகளை நசுக்கிறது என்று  மனிதநேய மக்கள் கட்சி  அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் 21-ம் தேதி நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு உள் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாகக் கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தி அதன் அடிப்படையில் அறிக்கை தயார் செய்து முதல்வரிடம் சமர்ப்பித்தது.

இதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்ற  பின்னர் இது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த செப்டம்பர் 15 அன்று சட்டம் நிறைவேற்றப்பட்டு இதுவரை அந்தச் சட்டத்திற்குத் தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளது கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த பின்பும் இந்தச் சட்டத்தின் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது சமூகநீதிக்கு எதிரானதாகும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் ஆளுநரின் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டுகிறார். அதில், இது தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்கும்படி ஜூன் 15- ம் தேதி அமைச்சரவை கூடி ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது. அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க மறுத்த ஆளுநர் சில ஆலோசனை வழங்கி திருப்பி அனுப்பினார். ஆளுநரின் ஆலோசனையின் அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் சட்ட மசோதாவை ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டமன்றப் பேரவையில் அவசரச் சட்டத்திற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்து வருவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்று தெரிவித்துள்ளார்.

”சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை ஆகும். சட்டமன்ற பேரவையில் இயற்றப்பட்ட எந்தச் சட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்க முடியாது என்று ஆளுநர் மறுக்க முடியாது. அந்தச் சட்டங்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதுகுறித்து மாநில அரசிடம் விளக்கம் கேட்கலாம். மாநில அரசின் விளக்கத்தை ஏற்று சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது சட்டத்தைத் திருப்பி அனுப்ப வேண்டும். அவ்வாறு திருப்பி அனுப்பிய சட்டத்தை அரசு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் அவர் ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும்” என்று அரசியலமைப்புச் சாசனம் சட்டத்தை மேற்கோள்காட்டியுள்ளார்.

”தமிழக அளுநர் அரசியலமைப்பு சாசனச் சட்டத்தின்படி நடக்காமல் பாஜகவின் ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே மதம், ஒரே அரசு என்ற கொள்கையைத் தமிழகத்தின் மீது திணித்து வருகிறார். தமிழக ஆளுநரின் இச்செயல் மாநில அரசின் உரிமைகளை நசுக்கிக் கூட்டாட்சி தத்துவத்தை நொறுக்கும் செயலாகும்.” என்று ஆளுநரில் செயல்களை பற்றித் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு தமிழக ஆளுநர் இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறார்.

அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மருத்துவக்  கல்லூரி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் சட்டத்திற்கு உடனடியாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதையும், சட்ட விரோதமாகச் செயல்படும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவைத் தமிழக அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்